கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட கல்வராயன் மலையில், 15 ஊராட்சிகள் இருக்கின்றன. அவற்றில் சிறிதும், பெரிதுமாக சுமார் 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருக்கின்றன. இந்த கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு இருக்கும் முக்கிய பிரச்னைகளில் ஒன்று தகவல் தொடர்பு. பி.எஸ்.என்.எல் நெட்வொர்க் மட்டுமே இங்கு ஓரளவுக்கு கிடைக்கும். அதிலும் போதுமான அளவுக்கு செல்போன் டவர்கள் இல்லாததால், யாருக்காவது போன் செய்ய வேண்டுமென்றால் செல்போன்களை தூக்கிக் கொண்டு டவர் கிடைக்கும் இடத்தைத் தேடி ஓடுகிறார்கள் இப்பகுதி மக்கள். சில பகுதிகளில் நெட்வொர்க்கை தேடி பக்கத்து கிராமங்களுக்கே சென்று விடுகிறார்கள். அதனால்தான் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப் பதிவு விபரங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்வதற்காக, கல்வராயன் மலைப் பகுதியிலிருந்த அனைத்து வாக்குச் சாவடிகளை வாக்கி டாக்கிகள் மூலம் இணைத்திருந்தார் ஆட்சியர் ஷ்ரவன்குமார்.
இப்படியான சூழலில்தான், அவசரத்திற்குக் கூட தங்களால் போன் செய்ய முடியவில்லை என்றும், அதனால் செல்போன் டவர்களை அமைத்து கொடுக்கும்படி ஆட்சியர் ஷ்ரவன்குமாரிடம் கோரிக்கை வைத்தனர் கல்வராயன் மலை மக்கள். அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதாக கூறிய ஆட்சியர், நேற்று 29 இடங்களில் BSNL 4G செல்போன் டவர்களை அமைத்து மலைவாழ் மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வந்திருக்கிறார். அந்த விழாவில் பேசிய ஆட்சியர் ஷ்ரவன்குமார், ``கல்வராயன் மலைப்பகுதி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில், மாவட்ட நிர்வாகம் தனி கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் கல்வராயன் மலையில் வாழும் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கை, தொலை தொடர்பு இணைப்பு வேண்டும் என்பதாகும். அதனடிப்படையில் கல்வராயன் மலையில் தற்போது, 29 BSNL 4G செல்போன் டவர்கள் (Under USO 4G Saturation Project of Govt. of India) கடலூர் தொலைத்தொடர்பு மாவட்டத்தினால் நிறுவப்பட்டிருக்கிறது.
அந்த 29 செல்போன் டவர்களில், 9 டவர்கள் மட்டும் இன்று உடனடி பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது. மீதமிருக்கும் செல்போன் டவர்கள் படிப்படியாக பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும். இந்த டவர்களை அமைப்பதற்கு கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகம் சார்பில் 40x50 சதுர அடி இடங்கள் வழங்கப்பட்டிருக்கிறன. மேலும் இந்தப் பணியை கண்காணிக்க சிறப்பு வட்டாட்சியர் நியமிக்கப்பட்டு, கோபுரங்கள் அமைக்க தகுந்த இடங்கள் சர்வே செய்யப்பட்டு, தாமதமின்றி நிலங்கள் வழங்கப்பட்டது. மேலும் ஃபைபர் கேபிள்களை சாலை வழியாக நிறுவ நெடுஞ்சாலைத்துறை ஒப்புதலும், மின்சார வாரியத்திடமிருந்து மின் இணைப்பும் மாவட்ட நிர்வாகத்தால் பெற்று துரிதமாக வழங்கப்பட்டது. என்னுடைய பணிக்காலத்திலேயே கல்வராயன் மலைவாழ் மக்களுக்கு வன உரிமைச் சான்றும், செல்போன் இணைப்பும் வழங்கிடுவேன் என்று ஏற்கனவே உறுதியளித்திருந்தேன்.
அதன்படி, ஏற்கனவே வன உரிமைச் சான்று இப்பகுதி பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. தற்பொழுது அலைபேசி இணைப்புக்கான செல்போன் டவர்களும் அமைக்கப்பட்டு பொதுமக்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த இணையதள இணைப்பினை இளைஞர்கள் நல்ல விஷயங்களுக்காக பயன்படுத்த வேண்டும். இந்த செல்போன் இணைப்பு அதிவேக நெட்வொர்க் இணைப்பாகும். இணையதள இணைப்பு உள்ள அனைத்து செல்போன்களிலும் இந்த நெட்வொர்க் பயன்படும். உலக செய்திகளை மலைவாழ் மக்களும் உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக செல்போன் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், தாய்மார்கள் தங்களது குழந்தைகள் செல்போன்களை நல்ல விஷயங்களுக்காக மட்டும் பயன்படுத்துவதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். இந்த டவர்கள் அமைத்ததின் முக்கிய நோக்கம், மருத்துவம் உள்ளிட்ட அவசர காலங்களுக்காகத்தான்” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88
from India News https://ift.tt/qejPn6Q
0 Comments