மேற்கு வாங்க ஆளுநர் சி.வி.ஆனந்த போஸ், பெண் ஊழியரை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டில், சாட்சிகளிடம் பேச மாநில காவல்துறை சார்பில் விசாரணைக் குழு ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. முன்னதாக, மேற்குவங்க ஆளுநர் மாளிகையில் பணியாற்றும் பெண் ஊழியர் ஒருவர் கடந்த வியாழனன்று, ஆளுநர் மாளிகையின் காவல் கட்டுப்பாட்டு அறையில் சி.வி.ஆனந்த போஸ் மீது பாலியல் துன்புறுத்தல் புகாரளித்திருக்கிறார்.
அதைத்தொடர்ந்து, போலீஸாரால் ஹரே ஸ்ட்ரீட் காவல்நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட அந்தப் பெண் ஊழியர், தன்னுடைய புகாரில் இரண்டு சம்பவங்களைக் குறிப்பிட்டிருக்கிறார். அதில் ஒன்று, ஏப்ரல் 19-ம் தேதி ஆனந்த போஸ் தன்னிடம் சந்திக்க வரும்படி கூறியதாகவும், அதன்படி ஏப்ரல் 24-ம் தேதி மதியம் 12 மணியளவில் அவரின் அலுவலகத்துக்குச் சென்றபோது பாலியல் ரீதியாக தன்னை தகாத முறையில் தொட்டதாகவும் போலீஸிடம் பெண் ஊழியர் கூறியிருக்கிறார். மற்றொன்று, கடந்த வியாழக்கிழமை மீண்டும் ஆனந்த பாஸ் வரச்சொன்னதையடுத்து, துணைக்கு ஒரு நபருடன் சென்றபோது அந்த நபரை வெளியே அனுப்பிவிட்டு, நிரந்தர வேலை தருவதாகக் கூறி கன்னத்தை கிள்ளியதாகப் பெண் ஊழியர் தெரிவித்திருக்கிறார்.
இருப்பினும், சி.வி.ஆனந்த போஸ் மீது வழக்கு பதிவு செய்யப்படவில்லை. இதற்கான காரணம் குறித்து விளக்கிய போலீஸ் அதிகாரியொருவர், அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 361, ஆளுநர் பதவியிலிருக்கும் ஒருவரை அவருக்கெதிரான குற்றவியல் நடவடிக்கையிலிருந்து விலக்கி வைப்பதால் சட்ட நிபுணர்களிடம் ஆலோசித்து வருவதாகத் தெரிவித்தார். இன்னொருபக்கம், தன்மீதான குற்றச்சாட்டை அரசியல் உள்நோக்கம் கொண்டது என மறுத்த ஆனந்த போஸ், இத்தகைய அபத்த நாடகங்கள் மூலம் ஊழல் மற்றும் வன்முறைக்கு எதிரான எனது போராட்டத்தைத் தடுத்து நிறுத்த முடியாது என்றும், உண்மை வெல்லும் என்றும் அறிக்கை வெளியிட்டார்.
அதேசமயம், அரசியலமைப்பின் சின்னமான ஆளுநர் மாளிகையின் புனிதம் களங்கப்படுத்தப்பட்டிருப்பதாகவும், ஆளுநரின் இத்தகைய இழிவான நடவடிக்கையைக் கண்டித்து நீதி வழங்கவேண்டும் எனவும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கூறியது. இந்த நிலையில், ஆனந்த போஸ் விவகாரத்தில் சாட்சிகளிடம் பேச மாநில காவல்துறை விசாரணைக் குழு ஒன்றை அமைத்திருக்கிறது. இதுகுறித்து பேசிய கொல்கத்தா காவல்துறையின் மத்தியப் பிரிவின் துணை ஆணையர் (DC) இந்திரா முகர்ஜி, ``இந்த விவகாரத்தில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அடுத்த சில நாள்களில் சில சாத்தியமான சாட்சிகளிடம் பேசுவோம். சிசிடிவி காட்சிகள் இருக்கும்பட்சத்தில் அதையும் கேட்டிருக்கிறோம்" என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88
from India News https://ift.tt/kD51rxO
0 Comments