இரா.முருகானந்தம், செய்தித் தொடர்பாளர், காங்கிரஸ்
“ ‘மோடி... மோடி...’ என்று சொல்லி 2014 தேர்தலில், ஒரு பிம்பம் கட்டமைக்கப்பட்டது. ஆனால், அவர்கள் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவுடனேயே ‘மோடி பிம்பம் போலியானது’ என்பதை நாட்டு மக்கள் நன்கு உணர்ந்துவிட்டனர். அதனால்தான், ‘இந்தத் தேர்தலில், மோடி முகம் மட்டுமே வெற்றிபெற வைத்து விடாது’ என்று பா.ஜ.க-வினரே புலம்புகிறார்கள். வரலாறு காணாத வறுமை, வேலைவாய்ப்பின்மை எனக் கடந்த பத்தாண்டுக்கால மோடி ஆட்சி, மக்களை மீளாத் துயரில் ஆழ்த்தியிருக்கிறது. மக்கள் விரோதச் சட்டங்களைக் கொண்டுவந்தது, இந்து - இஸ்லாமியர் மதநல்லிணக்கம் கெடும்விதமாக வெறுப்புணர்வோடு பேசிவருவது… இவைதான் பிரதமர் மோடியின் சாதனைகள். `விவசாயிகள் கடனையும், கல்விக் கடனையும் தள்ளுபடி செய்ய முடியாது’ என்று சொன்ன பா.ஜ.க அரசு, பெரு முதலாளிகளின் கடனை மட்டும் தள்ளுபடி செய்ததை மக்கள் மறந்துவிடுவார்களா என்ன... அதனால்தான் ‘400 இடங்களில் வெற்றிபெறுவோம்’ என்று பேசிக்கொண்டிருந்த பா.ஜ.க-வினர், இரண்டு கட்ட தேர்தலுக்குப் பிறகு, தோல்வி பயத்தில் மதவாத வெறுப்புப் பிரசாரத்தைக் கையிலெடுத்திருக்கிறார்கள். அவர்கள் என்ன சூழ்ச்சி செய்தாலும், இந்திய மக்கள் பா.ஜ.க-வுக்கு முடிவுரை எழுத ஆரம்பித்துவிட்டனர்!”
ஏ.பி.முருகானந்தம், மாநில பொதுச்செயலாளர், பா.ஜ.க
“புயலாக வீசிக்கொண்டிருக்கிறது மோடி அலை. 2013-ம் ஆண்டு ஆரம்பித்த மோடி அலை என்பது இன்று வரை சற்றும் குறையவே இல்லை. ‘மோடி அலை குறைகிறது’ என்பதெல்லாம் எதிர்க்கட்சிகள் கிளப்பிவிடும் கட்டுக்கதைகள். 400-க்கும் மேற்பட்ட தொகுதிகளை வென்று பெரும்பான்மை யுடன் ஆட்சியைப் பிடிக்கப்போகிறது பா.ஜ.க. எதிர்க்கட்சிக் கூட்டணியினர்தான், தோல்வி பயத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் ஏதேதோ உளறிக்கொண்டிருக்கிறார்கள். எதிர்க்கட்சியினர் வலுவாக இருக்கும் இடங்களில், ‘மோடி அலை மட்டும் கைகொடுக்காது. எனவே, கூடுதலாக வேலை பார்க்க வேண்டும்’ என்று பா.ஜ.க-வினர் பேசியிருக்கிறார்கள். இதைத்தான் ‘மோடி அலை வீசவில்லை என்று பா.ஜ.க-வினரே சொல்லிவிட்டார்கள்’ என திரித்துப் பேசிக் கொண்டிருக்கிறார்கள் எதிர்க்கட்சியினர். கடந்த பத்தாண்டுக் கால பா.ஜ.க ஆட்சியில், உலகிலுள்ள வளர்ந்த வல்லரசு நாடுகளுக்கு இணையாக இந்தியாவின் பொருளாதாரம் அசுர வளர்ச்சியடைந்திருக்கிறது. பா.ஜ.க அனைத்துத் தரப்பு மக்களுக்குமான ஆட்சியை வழங்குவதால்தான் மக்கள் பெரும் ஆதரவு கொடுக்கிறார்கள். செல்லும் இடங்களிலெல்லாம் பா.ஜ.க ஆட்சியை மக்கள் கொண்டாட, பிரதமர் மோடி அலை மட்டுமே காரணம்!”
from India News https://ift.tt/6yvbHmP
0 Comments