யானை - மனித மோதல்களைத் தடுப்பதற்காகவும், ஆக்கிரமிப்புகளால் குறுகிவரும் யானை வழித்தடங்களை அதிகரிப்பதற்காகவும் தமிழ்நாடு அரசு சார்பில் அமைக்கப்பட்ட நிபுணர் குழு, தமிழகம் முழுக்க 42 யானை வழித்தடங்களை கண்டறிந்து அதற்கான திட்ட வரைவு அறிக்கையை சமர்ப்பித்திருக்கிறது. யானை வழித்தடங்களாக குறிப்பிடப்பட்டிருக்கும் இந்த இடங்களில் மக்களின் குடியிருப்புகள், விவசாய நிலங்கள், தேயிலைத் தோட்டங்கள், தனியார் விடுதிகள் எனப் பலவும் அமைந்திருப்பதல் இதற்கு பொதுமக்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு எழுந்திருக்கிறது.
மனித செயல்பாடுகளால் யானைகள் உயிரிழப்பதும், யானை - மனித எதிர்கொள்ளலும் நாளுக்கு நாள் அதிகரித்துவருகின்றன. அதேநேரம் கட்டுப்பாடற்ற ஆக்கிரமிப்புகளால் காடுகளின் பரப்பளவு குறைந்து, யானைகளில் வழித்தடங்கள், வலசைப் பாதைகள் துண்டாடப்பட்டு, உணவுக்காக குடியிருப்புகளை நோக்கி யானைகள் படையெடுக்கவேண்டிய சூழலும் உருவாகியிருக்கின்றன. இந்தப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதற்காக தமிழ்நாடு அரசு, வனத்துறையின் தலைமை வனப்பாதுகாவலர் வி.நாகநாதன் தலைமையில் ஓர் அறிவியல் நிபுணர் குழுவை உருவாக்கி ஆய்வு செய்ய அறிவுறுத்தியது. அதனடிப்படையில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்ட நிபுணர் குழுவினர் தமிழக யானைகள் வழித்தட திட்ட வரைவு அறிக்கையை தயாரித்து சமர்ப்பித்தனர்.
இந்த அறிக்கை கடந்த ஏப்ரல் 29-ம் தேதி தமிழக வனத்துறையால் இணையத்தில் வெளியிடப்பட்டது. ஆங்கிலத்தில் சுமார் 161 பக்கங்கள் கொண்ட இந்த வரைவு அறிக்கையில் தமிழ்நாடு முழுவதும் சுமார் 42 யானை வழித்தடங்கள் புதிதாக கண்டறியப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், தருமபுரி, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டம் மசினகுடி, கூடலூர், திண்டுக்கல், விருதுநகர் மாவட்டம் ஶ்ரீவில்லிபுத்தூர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட வனக் கோட்டங்களில் இந்த யானை வழித்தடங்கள் கண்டறியப்பட்டிருக்கின்றன.
`வனத்துறை அறிக்கையில் தெரிவித்திருக்கும்படி இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால், குறிப்பிடப்பட்டிருக்கும் பகுதிகள் அனைத்தும் வனத்துறையின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிடும். அதன்பிறகு பல தலைமுறைகளாக அப்பகுதிகளில் வசித்துவரும் மக்கள் தங்களின் குடியிருப்புகளைவிட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்படுவார்கள்' என சம்மந்தப்பட்ட மக்கள் அச்சம் தெரிவித்திருக்கின்றனர். குறிப்பாக, நீலகிரி மாவட்டம் மசினகுடி, கூடலூர் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் இத்திட்டத்துக்கு எதிராக தங்கள் கிராமங்களில் கருப்பு கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.
காரணம், நீலகிரி மாவட்டம் கூடலூர் தொகுதியில் மட்டும் கிட்டத்தட்ட 46 கிராமங்கள் இதனால் பாதிக்கப்படவிருக்கின்றன. குறிப்பாக, நீலகிரி மாவட்டம் கூடலூர் வனக்கோட்டத்தில் தேவர்சோலா- நிலம்பூர், ஓவேலி என இரண்டு யானை வழித்தடங்கள் கண்டறியப் பட்டிருக்கின்றன. இதில், தேவர்சோலா- நிலம்பூர் வழித்தடத்தில் உள்ள 7 கிராமங்களில் சுமார் 34,796 குடும்பங்கள் வசித்து வருகின்றன. ஓவேலி வழித்தடத்தில் உள்ள 31 கிராமங்களில் சுமார் 2,547 குடும்பங்கள் வசித்துவருகின்றன. அதேபோல, மசினகுடி வனக்கோட்டத்தில் கண்டறியப்பட்டிருக்கும் சீகூர் யானை வழித்தடத்தில் உள்ள 8 கிராமங்களில் சுமார் 513 குடும்பங்கள் வசித்து வருகின்றன. அரசு இந்தப் பகுதிகளை யானை வழித்தடங்களாக அறிவிக்கும் பட்சத்தில் இந்த கிராமங்களில் காலம் காலமாக வசித்து வரும் மக்களின் குடியிருப்புகள், அவர்கள் சார்ந்திருக்கும் விவசாய நிலங்கள், தேயிலைத் தோட்டங்கள் என அனைத்தும் அரசின் வனத்துறை கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிடும் என்பதால் கிராம மக்கள் மட்டுமல்லாமல் பல்வேறு அரசியல்கட்சித் தலைவர்களும் இந்தத் திட்டத்துக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர்.
குறிப்பாக, அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ``கடந்த 2000-ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில், தமிழ் நாட்டில் 25 யானை வழித் தடங்கள் இருப்பதாகக் கண்டறியப்பட்டது. 2017-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மற்றொரு ஆய்வில், தமிழ் நாட்டில் 18 யானை வழித் தடங்கள் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, 2023-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மற்றொரு ஆய்வில் 20 யானை வழித் தடங்கள் இருப்பதாகவும், அதில் 15 தமிழகத்திலும், 5 கேரளா மற்றும் கர்நாடகாவில் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இறுதியாக, கூடுதல் முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் தலைமையில் அமைக்கப்பட்ட குழு, தமிழகத்தில் சுமார் 42 யானை வழித் தடங்கள் இருப்பதாகக் கணக்கிட்டு 29.4.2024 அன்று ஒரு வரைவு அறிக்கையினை ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளது.
இந்த வரைவு அறிக்கை குறித்து 5.5.2024 வரை மக்கள் தங்கள் கருத்துகளையும், ஆட்சேபனைகளையும் பதிவு செய்யலாம் என்று காலக்கெடு நிர்ணயம் செய்யப்பட்ட நிலையில், இதுகுறித்து முறையான எந்த ஒரு அறிவிப்பும் தமிழ் செய்தி பத்திரிகைகள் வாயிலாகவோ, தொலைக்காட்சி ஊடகங்கள் வாயிலாகவோ வனத்துறையால் வெளியிடப்படவில்லை. யானை வழித்தடம் குறித்து வனத்துறை மேற்கொண்ட ஆய்வுகள் எத்தனை? யானை வழித் தடங்கள் எத்தனை உள்ளன ? என்பது குறித்து முரண்பட்ட கருத்துகளைத் தெரிவித்துள்ள நிலையில், ஒரே வருடத்தில் யானை வழித் தடங்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கி, அதை செயல்படுத்த முனைப்பு காட்டும் விடியா திமுக அரசின், வனத் துறையின் இந்தச் செயல் இயற்கை நீதிக்கும், மலைவாழ் மக்களின் நலனுக்கும் எதிரானது!" எனத் தெரிவித்திருக்கிறார்.
அதேபோல அ.தி.மு.க.தொ.உ.மீ.கு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், ``தமிழ், தமிழ் என்று சொல்லிக்கொண்டு, ஆங்கிலத்தில் அறிக்கை வெளியிட்டு, பொதுமக்களின் கருத்துகளைக் கேட்பது நியாயமற்ற செயல். ஒருவேளை நியாயமற்ற முறையில் செயல்படுவதுதான் ‘திராவிட மாடல்’ அரசு போலும்!" என விமர்சித்திருக்கிறார்.
அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன், ``தமிழக அரசின் வனத்துறையால் அவசரகதியில் தயாரித்து வெளியிடப்பட்டுள்ள யானைகள் வழித்தட திட்ட வரைவு அறிக்கையை உனடியாக திரும்பப் பெறுவதோடு, முறையான ஆய்வுகளின் அடிப்படையில் அறிக்கை தயாரித்து, உரிய கால அவகாசம் வழங்கி, பொதுமக்களின் கருத்துக்களை முழுமையாக கேட்டறிந்த பின்னரே இத்திட்டத்தை செயல்படுத்த முன்வர வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
தொடர்ந்து நா.த.க தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ``யானைகளின் வலசை பாதைகளுக்கு உண்மையான இடையூறாக இருக்கும் சுற்றுலா விடுதிகள், தனியார் சொகுசு மாளிகைகள், வணிக நிறுவனங்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கத் திறனற்ற திமுக அரசு, கூடலூர் மக்களின் வசிப்பிடங்களைக் குறிவைத்து அகற்றத்துடிப்பது சிறிதும் நியாயமற்றதாகும். வனத்துறையின் அறிக்கையில் குறிப்பிட்டதுபோல 2008ஆம் ஆண்டிற்குப் பிறகுதான் யானை தாக்கி மனிதர்கள் உயிரிழக்கும் நிலை அதிகரித்துள்ளது. அதன்படி பார்த்தால் நூற்றாண்டுகள் கடந்து இயங்கி வரும் தேயிலைத் தோட்டங்களோ, தேயிலைத் தொழிலாளர் வசிப்பிடங்களோ யானை வழித்தடத்திற்குக் குறுக்கீடு இல்லை என்பது தெளிவாகிறது. இதன் மூலம் வனச்சட்டங்கள் என்ற பெயரில் கூடலூர் மக்களை வெளியேற்ற ஆளும் அரசுகள் செய்யும் சூழ்ச்சிகளின் தொடர்ச்சியே புதிதாக வெளியிடப்பட்டுள்ள யானை வழித்தட திட்ட மாதிரி அறிக்கை என்பது உறுதியாகிறது" எனத் தெரிவித்திருக்கிறார்.
தொடர்ந்து பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், ``சுற்றுச்சூழல் பாதுகாப்பின் ஒரு பகுதியாக, தமிழகத்தில் 20 யானை வழித்தடங்களை மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் கண்டறிந்துள்ளது. ஆனால், தமிழக அரசால் அமைக்கப்பட்ட குழு, 42 வழித்தடங்களை கண்டறிந்துள்ளதாக கூறுகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு விஷயத்தில் மத்திய அரசின் எந்த வழிகாட்டு நெறிமுறைகளையும் மாநில அரசு பின்பற்றுவதில்லை!" எனக் குற்றம்சாட்டியிருக்கிறார்.
அதேபோல பா.ஜ.க மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், ``யானைகள் வழித்தடத்தை காக்க வேண்டும் என்ற கடமை எல்லோருக்கும் உள்ளது. அதை மக்கள் ஒருபோதும் மறுக்கவில்லை. அதேசமயம் மக்களின் சந்தேகங்களை தீர்க்காமல் அப்பாவி மக்களின் நிலத்தை அபகரிக்கும் திட்டத்தை திமுக அரசு உடனடியாக நிறுத்த வேண்டும். அதேபோல் மக்களிடம் கருத்து கேட்பதை ஆன்லைன் வாயிலாக மேற்கொள்ள இருப்பதாக தெரிகிறது. அதற்கு பதிலாக கடை கோடி மக்களிடமும் நேரடியாக சென்று கருத்து கேட்க வேண்டும்!" என வலியுறுத்தியிருக்கிறார்.
எதிர்கட்சித் தலைவர்கள் தவிர, தி.மு.க கூட்டணிக் கட்சியான சி.பி.ஐ(எம்) மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணனும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். அதாவது, ``யானைகள் வழித்தடம் தொடர்பான அறிக்கையை வெளியிட்ட வனத்துறை போதுமான கால அவகாசம் வழங்காமல் ஒருவார காலத்துக்குள் மக்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்க வேண்டும் என கோரியிருப்பது எந்த வகையிலும் பொறுத்தமானதல்ல. குறைந்தபட்சம் 60 நாட்களுக்கு கருத்து கேட்புக்கான காலத்தை நீட்டிக்க வேண்டும். யானைகள் வழித்தடம் என அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள இடங்களில் வசிக்கும் மக்கள், அரசியல் கட்சிகள், சூழலியல் அமைப்புகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் கருத்துகளை அறியும் வகையில் விரிவான கருத்துக்கேட்பு கூட்டங்களை நடத்திட வனத்துறை மற்றும் வருவாய்த்துறை முன்வரவேண்டும்!" எனக் கோரிக்கை விடுத்திருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88
from India News https://ift.tt/0yCIXOA
0 Comments