இரண்டு வாரங்களுக்குமுன் தமிழ் புத்தாண்டு குரோதி பிறந்தது. ஒவ்வொரு புத்தாண்டும் முற்றிலும் நல்ல ஆண்டாக இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது என்பதை நினைவூட்டுவதற்காகவே, கசப்பும் இனிப்பும் கொண்ட வேப்பம்பூ பச்சடி புத்தாண்டு விருந்துடன் பரிமாறப்படுகிறது.
வளர்ச்சிக்கான எதிர்பார்ப்பு அதிகரிப்பு...
பொருளாதாரம் பற்றிய நல்ல செய்திகளைக் கொண்டு இந்தியாவின் புதிய நிதியாண்டும் ஏப்ரல் 1 அன்று தொடங்கியது. ரிசர்வ் வங்கி ஆளுனர் சக்திகாந்த தாஸ், ஏப்ரல் 3-5 தேதிகளில் நடந்த நாணயக் கொள்கைக் குழு கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர் சந்திப்பில் இந்தியா பல்வேறு துறைகளில் சிறப்பாகச் செயல்பட்டுள்ளது என்று அறிவித்தார்.
கடந்த நிதியாண்டில் (23-24 ) பொருளாதார வளர்ச்சி கணிப்பு 7.5 சதவிகிதமாக உயர்த்தப்பட்டு உள்ளது. புதிய நிதியாண்டில் (24-25) பொருளாதார வளர்ச்சிக் கணிப்பு 7.0% ஆகும். வளர்ந்து வரும் உலகளாவிய நிச்சயமற்ற நிலைகள் மற்றும் பெட்ரோலிய கச்சா எண்ணெயின் விலைகள் அதிகரித்துவரும்போது இந்த மதிப்பீடு, பணவீக்க எதிர்பார்ப்புகளை வெற்றிகரமாக நங்கூரமிடுவதில் மத்திய வங்கியின் உறுதியையும் நம்பிக்கையையும் பிரதிபலிக்கிறது.
நமது ரிசர்வ் வங்கியைப் போலவே, ஆசிய வளர்ச்சி வங்கியும் அதன் முந்தைய மதிப்பீட்டின் வளர்ச்சி விகிதத்தை 6.7 சதவிகிதத்திலிருந்து உயர்த்தியுள்ளது. இதன் மூலம் 2024-25-ல் வளர்ச்சி விகிதம் 7% வளர்ச்சியை உறுதி செய்துள்ளது,
பணவீக்கம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 7.8 சதவிகிதமாக உச்சத்தில் இருந்தது, ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் 5.1 சதவிகிதமாகக் குறைந்துள்ளது.
பலமாக இருக்கும் அந்நிய செலாவணிக் கையிருப்பு இந்திய ரூபாய்...
ஏப்ரல் முதல் வாரம் 646 பில்லியன் டாலர் அளவுக்கு அந்நிய செலாவணிக் கையிருப்பு, செப்டம்பர் 2021-ல் முந்தைய சாதனையான 641 பில்லியன் டாலர்களை முறியடித்தது. இதுவே வெளிநாட்டு முதலீட்டாளர்களிடமிருந்து அதிக நிகர மூலதனம் அதிகரித்து, உலக முதலீட்டாளர்களின் நம்பிக்கையை இந்தியா பெற்றுள்ளதையே இது காட்டுகிறது.
உலக அளவில் இந்திய ரூபாயானது மிகவும் நிலையான நாணயங்களில் ஒன்றாகும். வளர்ந்துவரும் சந்தை நாடுகள் மற்றும் முன்னேறிய பொருளாதார ஜாம்பவான் நாடுகளுடன் ஒப்பிடும்போது, ரூபாய் பெரும்பாலும் ஒரு வரம்பிற்கு (டாலருக்கு நிகராக 83-84 என்கிற வரம்பில்) உட்பட்டதாகவே உள்ளது.
முந்தைய மூன்று ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், 2023-24-இல் ரூபாய் மிகக் குறைந்த ஏற்ற இறக்கத்தை வெளிப்படுத்தியுள்ளது. ரூபாயின் ஒப்பீட்டு ஸ்திரத்தன்மை, இந்தியாவின் சிறந்த பெரிய பொருளாதார அடிப்படைகள், நிதி நிலைத்தன்மை மற்றும் வெளிப்புற நிலையின் மேம்பாடுகளை உறுதிப்படுத்துகிறது.
உலகளாவிய நிச்சயமற்ற நிலைகள் எதிர்கால போக்கைத் தீர்மானிக்கின்றன. அவை, உள்நாட்டு காரணிகளிலிருந்து வேறுபட்டவை. இரண்டுமே இந்தியாவின் பொருளாதார எதிர்காலத்தை உடனடியாகவும், எதிர்காலத்திலும் தீர்மானிக்கின்றன.
ரிசர்வ் வங்கியின் கவலை...
ஆனால், ரிசர்வ் வங்கியானது கொஞ்சம்கூட இறங்காமல் பிடிவாதமாக உச்சத்திலேயே இருக்கும் பணவீக்கத்தைப் பற்றியது. நுகர்வோர் விலை குறியீட்டு அடிப்படையிலான பணவீக்கத்திற்க்கு காரணம், உணவுப் பொருள்களின் விலை உயர்வு மற்றும் எரிபொருள் விலையேற்றமே. உணவு, எரிசக்தி, ஆகிய இரண்டு வகைகளின் விலைவாசி உயர்வுகள், அரசுகள் மற்றும் மத்திய வங்கிகளின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டவை. உணவு உற்பத்தி வானிலைக்கும் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்படுவதால், எரிபொருள் போர்கள் உட்பட உலகளாவிய காரணிகளுக்கும் உட்பட்டவை.
பணவீக்கமானது மார்ச் 2022-ல் தொடங்கிய ரஷ்ய-உக்ரைன் மோதலுக்குப் பிறகு தொடங்கி ரிசர்வ் வங்கியின் 4% இலக்கைவிட அதிகமாக உள்ளது. இந்த மாதம் ஏப்ரல் 12 அன்று வெளியிடப்பட்ட மார்ச் மாதத்திற்கான பணவீக்கம், ஜனவரி மற்றும் பிப்ரவரியில் 5.1 சதவிகிதத்தில் இருந்து 4.8 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. இரண்டு ஆண்டுகளுக்குமுன் பணவீக்கம் 7.8 சதவிகிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது!
போர் மேகங்கள் மீண்டும் அடிவானத்தில் திரண்டுள்ளன. இஸ்ரேல்-ஈரான் மோதல் வர்த்தக சீர்குலைவுகளை ஏற்படுத்தும். கப்பல் போக்குவரத்துச் செலவுகள் அதிகரிப்பதைத் தவிர, கச்சா எண்ணெய் உற்பத்தி-ஏற்றுமதி நாடுகள் விரைவான பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகளைப் பயன்படுத்தத் தயாராக உள்ளன. மேலும், இந்திய விவசாயப் பொருளாதாரம், மழைக் கடவுளின் கருணையில் உள்ள இந்த சூழ்நிலையில், ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தைத் தளர்த்த அவசரப்படவில்லை. ரிசர்வ் வங்கி புதிய நிதியாண்டில் (24-25) பணவீக்கம் 4.5 சதவிகிதமாக இருக்கும் என்று கணித்துள்ளது. ரிசர்வ் வங்கி பணவீக்கம் இலக்கு (4%) இன்னும் எட்டாத கனிதான்.
கடைசி மைல்...
கடைசி மைல் எப்போதும் ஒரு சவால் என்பதை ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெளிவுபடுத்தியுள்ளார். பணவீக்கத்தை எந்த வேகத்தில் குறைப்பது என்பதே இன்றைக்கு எல்லா மத்திய வங்கிகளும் தீவிரமாக யோசித்து வருகின்றன. அந்த வகையில், நம் ரிசர்வ் வங்கியும் மிகவும் எச்சரிக்கையாக இருக்கிறது. இந்த விஷயத்தில் திடீர் கடின தரையிறக்கத்தைவிட மென்மையான தரையிறக்கம் மிகவும் முக்கியமானது.
உலக வங்கியும் சர்வதேச நிதி மையமும் (IMF) கடந்த ஏப்ரல் 17-19 தேதிகளில் வாஷிங்டனில் உலக நிதி அமைச்சர்கள் மற்றும் ரிசர்வ் வங்கிகளின் ஆளுநர்களுடனும் நடத்திய வருடாந்திரக் கூட்டத்தில் உறுதியானதொரு பரிந்துரையை செய்தது. உறுப்பு நாடுகள் தங்களின் தற்போதைய இறுக்கமான பணவியல் கொள்கையைத் தளர்த்த அவசரப்படக்கூடாது என்பதே அது. ஈரான்-இஸ்ரேல் மோதல்கள் மற்றும் வர்த்தகத்திற்கான இடையூறுகள் ஆகிய நிச்சயமற்ற நிலைகள் இதற்குக் காரணம்.
மத்திய அரசின் நிதி அமைச்சகத்தில் பணியாற்றுவதற்குமுன், ஆர்.பி.ஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் தமிழ்நாட்டிற்குப் பல ஆண்டுகள் சேவை செய்தார். எனவே, அவர் கொன்றை வேந்தனை அறிந்திருக்க வாய்ப்பு உண்டு. “பையச் சென்றால் வையம் தாங்கும்” என்பது கொன்றை வேந்தன் 41-வது கருத்து. இந்த யுக்தி சரியான விளைவுகளை ஏற்படுத்துமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
இந்தக் கட்டுரை ஆசிரியரின் பெயர் முனைவர் டி.கே.ஜயராமன். இவர் குஜராத்தில் இந்திய ஆட்சிமை பணியிலும் (1960-82), பின்னர் ஆசிய வளர்ச்சி வங்கியின் மூத்த பொருளாதார நிபுணர் (1982-97) ஆகவும் பணிபுரிந்து இப்போது பெங்களூரில் உள்ள அமிர்தா ஸ்கூல் ஆஃப் பிசினஸில் கெளரவ வருகைப் பொருளாதாரப் பேராசிரியராக இருக்கிறார்.
from India News https://ift.tt/qwYpvxh
0 Comments