டெல்லி அரசின் புதிய மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான பணமோசடி வழக்கில் அடுத்தடுத்து ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறையில் உள்ள 2ம் எண் அறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக இந்த வழக்கில் டெல்லி துணை முதல்வராக இருந்த மனீஷ் சிசோடியா, எம்.பி. சஞ்சய் சிங், சத்யேந்தர் ஜெயின் மற்றும் தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா ஆகியோர் திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். இதில், எம்.பி. சஞ்சய் சிங்கிற்கு மட்டும் உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
இதனையடுத்து நேற்று முந்தினம் (ஏப்ரல் 3) இரவு திகார் சிறையில் இருந்து சஞ்சய் சிங் வெளியே வந்தார். அப்போது சிறைக்கு வெளியே குவிந்திருந்த ஏராளமான ஆம் ஆத்மி தொண்டர்கள் சஞ்சய் சிங்கிற்கு உற்சாக வரவேற்பளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சஞ்சய் சிங், "ஆம் ஆத்மி கட்சியின் ஒவ்வொரு தொண்டர்களும் போராட்டத்திற்கு தயாராக உள்ளனர். எங்கள் கட்சியின் மூத்த தலைவர்கள் அரவிந்த் கெஜ்ரிவால், மணிஷ் சிசோடியா, சத்தியேந்திர ஜெயின் உள்ளிட்டோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
என்றாவது ஒரு நாள் இந்தச் சிறையின் கதவுகள் திறக்கப்பட்டு அவர்கள் வெளியே வருவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இது கொண்டாட்டத்திற்கான நேரமல்ல, போருக்கான நேரம். எங்களுக்கு முன் ஒரு நீண்ட போராட்டம் காத்திருக்கிறது. தங்கள் வாக்குகள் மூலம் டெல்லி மக்கள் பாஜகவுக்கு பாடம் புகட்டுவார்கள்" என்றார்.
`ஆம் ஆத்மியை உடைப்பது தான் உள்நோக்கம்’
இதனிடையே கடந்த மார்ச் 20-ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட கெஜ்ரிவால், ஏப்ரல் 15-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் இருப்பார்.
இந்த நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீன் மனு மீதான விசாரணை நேற்று முந்தினம் (ஏப்ரல் 3) டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. கெஜ்ரிவால் சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி ஆஜரானார். கெஜ்ரிவால் தரப்பில், “இந்த வழக்கில் கெஜ்ரிவாலுக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை. அவரிடம் வீட்டில் சென்று வாக்குமூலம் பெற அமலாக்கத் துறை எந்தவித முயற்சியும் எடுக்கவில்லை.
வாக்குமூலம் பெற்ற பிறகே அவரை கைது செய்திருக்க வேண்டும். கெஜ்ரிவால் நாட்டைவிட்டு வெளியேற சாத்தியம் உள்ளதா? கடந்த ஒன்றரை ஆண்டில் கெஜ்ரிவால் சாட்சிகள் யாரையாவது மிரட்டி உள்ளாரா? அல்லது விசாரணைக்குதான் மறுத்தாரா? அவரை அவமானப்படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் கைது செய்துள்ளனர்.
டெல்லியின் ஏழு மக்களவைத் தொகுதிகளில் பாஜகவுக்குச் சவாலாக உள்ளது. இங்கு நடக்கவுள்ள தேர்தலில் பாஜக மிகப் பெரிய அளவில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவும், கெஜ்ரிவால் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடக் கூடாது என்பதற்காகவும் அவரை கைதுசெய்துள்ளனர். இதன்மூலம் ஆம்ஆத்மி கட்சியை உடைக்க முயற்சிக்கிறார்கள்.
தற்போது கெஜ்ரிவாலை கைதுசெய்ய வேண்டிய அவசரம் என்ன? முதல்கட்டத் தேர்தல் நடக்கும் முன்பாக ஆம்ஆத்மி கட்சியை சீர்குலைக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே இந்த அவசர கைது நடந்துள்ளது. தேர்தலுக்குமுன், பதவியில் இருக்கும் முதல்வரை கைதுசெய்தது தேவையற்றது” என வாதிடப்பட்டது.
அப்போது அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜு குறுக்கிட்டு," இது நீண்ட காலத்திற்கு முன் தொடரப்பட்ட வழக்கு" என்றார்.
அதற்கு, கெஜ்ரிவால் வழக்கறிஞர் சிங்வி, "எனது அறிவார்ந்த நண்பரான ராஜூ, இந்த மோசடி நீண்ட காலத்திற்கு முன்பு வெளிவந்தது என்று கூறுகிறார். நீண்ட காலத்திற்கு முன்பு எனில் எத்தனை நாட்கள் என்று என்னை நானே கேட்டுக்கொள்கிறேன். வழக்கின் ஆரம்பம் 2022 , மற்றும் இறுதிக்கட்டம் அக்டோபர் 2023. எனில் தேர்தலுக்கு நடுவில் ஏன் கைது செய்யப்பட வேண்டும்? என்பது எனது கருத்து. நீண்ட காலம் என்ற வாதம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது" என்றார்.
கெஜ்ரிவால் தரப்புக்கு பதிலளித்த எஸ்.வி.ராஜு, "அரசியல்வாதியாக இருக்கும் ஒரு தீவிரவாதியின் வழக்கை எடுத்துக் கொள்ளுங்கள். ராணுவ வாகனத்தை அவர் வெடி வைத்து தகர்த்துவிட்டு, நான் தேர்தலில் போட்டியிட விரும்புகிறேன், அதனால் என்னைத் தொட முடியாது? என்று சொல்வாரா? என்ன மாதிரியான வாதம் இது? " என்றார்.
அதற்கு சிங்வி,“எனது கருத்து என்னவென்றால், ஒரு முதல்வர், ராணுவ வாகனத்தை வெடிக்கச் செய்தால், அவர் கைது செய்யப்பட வேண்டும் என்பதே. ஆனால் இது நியாயமான ஒப்பீடா?" என கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த எஸ்.வி.ராஜூ, "தேர்தல் வந்தால் கைது செய்யக்கூடாது எனச் சொல்வது மோசமான வாதம். நாட்டைக் கொள்ளையடித்தாலும் தேர்தல் வந்தால் கைது செய்யக் கூடாது எனப் பேசுவது தவறு. போதுமான ஆதாரங்கள் இருந்ததன் அடிப்படையில் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். அரசியலில் இருப்பவர் தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன் கொலை செய்தால், அவரை கைது செய்யாமல் இருக்க முடியுமா?.
டெல்லி மதுபான ஊழலில் கிடைத்த வருமானத்தில் ஆம் ஆத்மி கட்சி பெரும் பயனடைந்திருக்கிறது. கொள்கை மீது முடிவெடுக்கும் செயல்பாட்டில் முதலமைச்சரும் ஈடுபட்டிருப்பது சாட்சிகளின் வாக்குமூலத்தில் இருந்து தெரிகிறது. இந்த வழக்கின் முறைகேட்டில் கெஜ்ரிவாலின் தொடர்பை விசாரணையின் முடிவில்தான் முழுமையாக தெரிந்துகொள்ள முடியும்" எனத் தெரிவித்தார்.இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி ஸ்வர்ண காந்தா சர்மா, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.
டெல்லி மதுபானக் கொள்கை - என்ன சிக்கல்?
டெல்லி தலைமைச் செயலாளர் நரேஷ் குமார், கடந்த ஜூலை 8, 2022 அன்று, துணைநிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் மணீஷ் சிசோடியா ஆகியோருக்கு அறிக்கை ஒன்றை அனுப்பினார். தனிப்பட்ட இந்த அறிக்கை பல ஊடக நிறுவனங்களில் ஆதாரத்துடன் செய்தியாக வெளியானது.
அறிக்கையின்படி, “கொரோனா பெருந்தொற்றின் போது மதுபான விற்பனையாளர்கள், தங்களது உரிமக் கட்டணத்தைத் தள்ளுபடி செய்ய டெல்லி அரசை அணுகினர். 2022ம் ஆண்டு டிசம்பர் 28 முதல் ஜனவரி 27 வரையிலான உரிமக் கட்டணத்தில் 24.02 சதவீத தள்ளுபடியை அரசு வழங்கியது. இது உரிமதாரர்களுக்கு அளவுக்கதிமான பலன்களை வழங்கியது, மேலும் அரசின் கருவூலத்திற்கு இதன் காரணமாக சுமார் 144.36 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது.” என தெரிவிக்கப்பட்டது. இந்த அறிக்கை கிடைத்த 15 நாட்களுக்குள் சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை செய்து உள்துறை அமைச்சகத்துக்கு துணைநிலை ஆளுநர் கடிதம் எழுதினார்.
மதுபானக் கொள்கையில் கலால் துறை ஏதேனும் மாற்றங்களைச் செய்வதற்கு முன், முதலில் அதை அமைச்சரவைக்கும் பின்னர் துணைநிலை ஆளுநருக்கும் அனுமதிக்காக அனுப்ப வேண்டும். ஆனால் டெல்லி அரசு அப்படிச் செய்யவில்லை. அமைச்சரவை மற்றும் துணைநிலை ஆளுநரின் அனுமதியின்றிச் செய்யப்படும் எந்த மாற்றமும் சட்டவிரோதமாக கருதப்படும். இதுதான் மதுபானக் கொள்கையில் நடந்த முதல் குளறுபடி.
இதை தொடர்ந்து புதுச்சேரி விமான நிலையத்தில் தடையில்லா சான்றிதழ் பெற முடியாத மது பான உரிம தாரருக்கு உரிம ஏலத்திற்காக டெபாசிட் செய்யப்பட்ட 30 கோடி ரூபாயை அந்நிறுவனத்திடம் அரசு திருப்பி அளித்தது. இது 2வது குளறுபடி, ஒரு விண்ணப்பதாரர் உரிமத்திற்கான நடைமுறைகளை முழுமையாக முடிக்கத் தவறினால், அவருடைய வைப்புத் தொகை பறிமுதல் செய்யப்படும். இதில் மணீஷ் சிசோடியா லஞ்சம் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டது, மேலும் இந்த பணம் பஞ்சாப் சட்டசபை தேர்தலில் பயன்படுத்தப்பட்டது என்றும் விமர்சிக்கப்பட்டது.
மொத்த விற்பனையாளர்களுக்கு 12% லாப வரம்பையும், சில்லறை விற்பனையாளர்களுக்கு கிட்டத்தட்ட 185% லாப வரம்பையும் உறுதி செய்வதற்காக ஆம் ஆத்மி அரசாங்கம் டெல்லியின் மதுபான கலால் கொள்கையை மாற்றியமைத்ததாக மத்திய புலனாய்வு மற்றும் அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது. எதிர்க்கட்சிகளின் தொடர் அழுத்தங்களுக்குப் பிறகு, ஜூலை 30, 2022 அன்று புதிய கலால் கொள்கையை திரும்பப் பெறுவதாக சிசோடியா அறிவித்தார்,
கைவிரித்த ஐபோன் நிறுவனம்!
முன்னதாக, இந்த வழக்கில் அமலாக்கத்துறை தரப்பில், "மதுபானக் கொள்கை முறைகேடு விவகாரத்தில் ஹவாலா பணமாக ஆம் ஆத்மி கட்சிக்கு பணம் கிடைக்கப் பெற்று அதை அவர்கள் கோவா சட்டமன்ற தேர்தல் பணிக்காக பயன்படுத்தினார்கள். அதற்கு ஆதாரங்கள் உள்ளன.
கெஜ்ரிவால் தனது செல்போன் மற்றும் லேப்டாப்களின் பாஸ்வேர்ட்களை தெரிவிக்கவில்லை. எனவே எங்களால் டிஜிட்டல் ஆதாரங்களை கைப்பற்ற முடியவில்லை. விசாரணைக்கு பாஸ்வேர்டுகளை சொல்லாமல் இருந்தால், அதை ஹேக் செய்துதான் தகவல்களை எடுக்க வேண்டியது வரும்” எனச் சிறப்பு நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.
அந்த வகையில், அவருடைய கைப்பேசியை ஹாக்கிங் தெரிந்த சாஃப்ட்வேர் நிபுணர்கள் மூலம் அமலாக்கத்துறை மற்றும் ஆப்பிள் நிறுவனத்தை அணுகி திறக்க முயற்சி செய்ததாகக் கூறப்படுகிறது.
இதற்காக அமலாக்கத் துறை ஆப்பிள் ஐபோனை நிறுவனத்தின் உதவியை நாடிய நிலையில், ’உரிமையாளரின் பாஸ்வேர்டு மூலம் மட்டுமே ஐபோனின் தகவல்களைத் திறக்க முடியும். தங்களால் திறக்க முடியாது’ என அந்நிறுவனத்தில் சார்பில் தற்போது தெரிவிக்கப்பட்டது. ஐபோன் நிறுவனம் பல வழக்குகளில் இதே போன்ற பதிலை தெரிவித்துள்ளது. சில வழக்குகளில் பாஸ்வேர்டை தராமல் சில தகவல்களை மட்டும் வழங்கி உள்ளது.
`கெஜ்ரிவால் ராஜினாமா செய்ய மாட்டார் ’
இதனிடையே, முதலமைச்சர் பதவியில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவாலை நீக்கக் கோரி இந்து சேனா என்ற அமைப்பின் தேசிய தலைவர் விஷ்ணு குப்தா, டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த வழக்கை நேற்று (ஏப்ரல் 4 ) விசாரித்த நீதிமன்றம், அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.முன்னதாக, டெல்லி முதலமைச்சர் பதவியில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவாலை நீக்கக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மற்றொரு பொது நல மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
அந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், இந்த விஷயத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது, துணைநிலை ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவருக்கு தான் இதில் அதிகாரம் உள்ளது என கூறி அந்த மனுவை தள்ளுபடி செய்தது இந்நிலையில், தற்போது இரண்டாவது மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதை தொடர்ந்து, "டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது பதவியை ராஜினாமா செய்ய மாட்டார். குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு தண்டனை பெற்றால் தான் ராஜினாமா செய்ய வேண்டும். கெஜ்ரிவால் ராஜினாமா செய்தால் டெல்லியில் ஆட்சியை கவிழ்பது பாஜகவுக்கு எளிதாகி விடும், எனவே, அவர் ராஜினாமா செய்ய மாட்டார்" என அமைச்சர் அதிஷி தெரிவித்திருக்கிறார்.
ஜாமீன் கிடைக்குமா?
இது தொடர்பாக டெல்லி ஆம் ஆத்மி வட்டாரங்களில் விசாரித்த போது, "சஞ்சய் சிங் வழக்கிலேயே அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் குட்டு வைத்தது. மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டு 13 மாதங்கள் கழித்து தான் இதில் கெஜ்ரிவாலுக்கு தொடர்பிருப்பது தெரியும், என அமலாக்கத்துறை சொல்வது வேடிக்கையாக இல்லையா?. இது முழுக்க முழுக்க தேர்தலை மையமாக வைத்து நடக்கும் விளையாட்டு. இதில் எங்களுக்கு நீதிமன்றத்தில் வெற்றி கிடைக்கும் என முழுமையாக நம்புகிறோம்" என்றனர்.
அமலாக்கத்துறை வட்டாரங்களிடம் பேசிய போது, "PMLA சட்டப்பிரிவு பல்வேறு சிறப்பு அதிகாரங்களைக் கொண்டது. இதில் ஜாமீன் கிடைப்பது அவ்வளவு எளிதல்ல. கெஜ்ரிவாலுக்கு இதில் தொடர்பிருப்பதற்கான வலுவான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. விசாரணையின் முடிவில் அவருக்கு உரிய தண்டனை பெற்றுத் தருவோம்" என்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/47zomWY
from India News https://ift.tt/uGvnJTy
0 Comments