`ஆர்.எஸ்.எஸ் வாக்குகளை பெற்று எம்.எல்.ஏ ஆன வரலாறு பினராயி விஜயனுக்கு உண்டு’ - காங்கிரஸ் கடும் தாக்கு

கேரள மாநிலத்தில் நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் காங்கிரஸ் மற்றும் சி.பி.எம் எதிர் எதிர் அணியில் கடுமையாக மோதிக்கொள்கின்றன. இந்த நிலையில் காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன் செய்தியாளர்களிடம்  பேசுகையில், "கேரளாவில் 20 தொகுதிகளிலும் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும். இந்த தேர்தலில் தேசிய அளவில் மிகப்பெரிய அளவிலான மாற்றங்கள் ஏற்படும். காங்கிரஸுக்கும் இந்தியா கூட்டணிக்கும் ஆதரவான மௌனப் புரட்சி ஒன்று நடந்து கொண்டிருக்கிறது. தென்னிந்தியாவில் மட்டுமல்ல வட இந்தியாவிலும் அந்த மாற்றம் ஏற்பட்டு வருகிறது. மத்தியில் உள்ள பாசிச அரசை அகற்ற வேண்டும் என்று நாட்டில் உள்ள சிறுபான்மை மக்களும், மத சார்பற்ற மக்களும், ஜனநாயகத்தை நம்பும் மக்களும் விரும்புகின்றனர். கேரளாவிலும் மதசார்பற்ற மக்கள் காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவாக உள்ளனர். கேரளா முதல்வர் பினராயி விஜயனும், பிரதமர் நரேந்திர மோடியும் ஒரே குரலில் பேசுகிறார்கள். இருவரின் பேச்சும் ஒரே இடத்தில் தயாரித்தது போன்று உள்ளது. அவர்கள் ஒரே டோனில் பேசுகிறார்கள். இரண்டு பேரும் ராகுல் காந்தியை விமர்சிப்பதை லட்சியமாக கொண்டுள்ளனர்.

கேரளா மாநில காங்கிரஸ் எதிர்கட்சி தலைவர் வி.டி.சதீசன்

2014 முதல் 10 ஆண்டுகள் நரேந்திர மோடி மற்றும் பா.ஜ.க தலைவர்கள் என்ன சொல்லி வந்தார்களோ, அதே விஷயத்தைத்தான் பினராயி விஜயனும், சி.பி.எம் கட்சியும் இப்போது சொல்கிறது. ராகுல் காந்தி வயநாட்டில் போட்டியிடுவது பா.ஜ.க-வை விட சி.பி.எம் கட்சிக்குத்தான் மிகவும் கஷ்டமாக உள்ளது. நான் விமர்சனங்களை முன்வைத்தால் எனக்கு சமநிலை தவறிவிட்டது என பினராயி விஜயன் சொல்லுகிறார். பினராயி விஜயன் முதியோர் பென்ஷன் வழங்காமல் இருந்ததை விமர்சித்து பேசினேன். ஒரு கோடி ஏழைகளுக்கு பென்ஷன் கொடுக்காமல் முதல்வர் இருக்கிறார் என்று நான் விமர்சித்தேன். எந்த அரசு மருத்துவமனையிலும் மருந்துகள் இல்லை. ஆனால், மருந்து கம்பெனிகளுக்கு கோடிக்கணக்கான பணம் கொடுக்கப்பட்டுள்ளது. அதையெல்லாம் பேசி விடுவோம் என்று பயந்து தான் குடியுரிமைச் சட்டத் திருத்தம் பற்றி பினராயி விஜயன் பேசிக் கொண்டிருக்கிறார். ஒப்பந்ததாரர்களுக்கு 16,000 கோடி ரூபாய் பாக்கி கொடுக்க வேண்டியது உள்ளது. கஜானாவில் பணம் இல்லாத நிலை உள்ளது. ஆனால், தன்னை விமர்சிக்கும் அனைவரையும் நிதானம் இழந்து விட்டார்கள், சமநிலை தவறிவிட்டது என சொல்கிறார் பினராயி விஜயன்.

குடியுரிமை சட்ட திருத்த மசோதா விவகாரம் விவாதிக்கப்பட்டபோது காங்கிரஸ் எம்.பி-க்கள் நாடாளுமன்றத்துக்கு செல்லவில்லை என்று பினராயி விஜயன் கூறி இருந்தார். ஆனால் சசி தரூர் உள்ளிட்ட எம்.பி-க்கள் அந்த விவாதத்தில் கலந்து கொண்ட வீடியோ ஆதாரத்தை முதல்வர் அலுவலகத்திற்கு அனுப்பி கொடுத்தேன். குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா கொண்டு வந்த போது ராகுல்காந்தி வெளிநாட்டில் இருந்ததாக பினராயி விஜயன் கூறினார். அது மட்டும் இல்ல குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக காங்கிரஸ் வாக்களிக்கவில்லை என்று கூறியிருந்தார். குடியுரிமை சட்ட திருத்த மசோதா வந்தபோது ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் ஆஜராகி குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக வாக்களித்ததற்கான நாடாளுமன்றத்தின் ஆதாரங்களை நான் முதல் அமைச்சர் பினராயி விஜயனுக்கு அனுப்பி கொடுத்தேன். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவை இல்லாமல் செய்வோம் என இப்போது ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் வெளிப்படையாகவே கூறியிருக்கிறார்கள். விதைத்தால் முழைக்காத பொய்களை எல்லாம் சொல்லி வருகிறார் பினராயி விஜயன்.

கேரளா முதல்வர் பினராயி விஜயன்

இடதுசாரிகள் இல்லை என்றால் இந்தியா இல்லை என்ற முத்திரை வாக்கியத்தை கூறுகிறார்கள். சுதந்திர போராட்டத்தில் இடதுசாரிகள் கலந்து கொள்ளவில்லை. சுதந்திரம் கிடைத்தபோது அதை கறுப்பு நாளாக கடைப்பிடித்தவர்கள் இடதுசாரிகள். இந்தியா சுதந்திரம் பெற்ற ஆரம்ப நாள்களில் சங் பரிவார் மற்றும் இந்து மகா சபா அமைப்பை விடவும் கடுமையாக காந்திஜியையும் நேருவையும் விமர்சித்தவர்கள் கம்யூனிஸ்டுகள். கேரள மாநிலத்தில் 2021- ம் ஆண்டு முதல்தான் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் தேசியக்கொடி ஏற்றத் தொடங்கி உள்ளார்கள். சுதந்திரம் கிடைத்து 73 ஆண்டுகள் கடந்த பிறகு தான் அவர்கள் தேசிய கொடியை ஏற்றி இருக்கிறார்கள். இந்துத்வா சக்திகளும், கம்யூனிஸ்டுகளும் அன்று காங்கிரஸுக்கு எதிராக இருந்தனர். பினராயி விஜயன் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் வாக்குகளை பெற்று எம்.எல்.ஏ ஆன வரலாறு உண்டு. பாசிசத்துக்கு எதிரான, வகுப்புவாதத்துக்கு எதிராக செயல்படுவது காங்கிரஸ் மட்டும்தான். குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக போராடியவர்களின் வழக்குகளை வாபஸ் பெறப்படும் என்று பினராயி விஜயன் சொன்னார். ஆனால் இன்னும் வழக்குகளை வாபஸ் பெறவில்லை. தமிழ்நாட்டில் அமைச்சரவை கூடி அனைத்து வழக்குகளை வாபஸ் பெற்றுள்ளனர். இப்போதும் கேரளாவில் கோர்ட்டில் வழக்கு நடத்திக்கொண்டிருப்பவர்கள் பலர் உள்ளனர்" என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/47zomWY



from India News https://ift.tt/oyFKQ5C

Post a Comment

0 Comments