மகாராஷ்டிராவில் உள்ள பாராமதி தொகுதியில் சரத் பவார் மகள் சுப்ரியா சுலே மற்றும் துணை முதல்வர் அஜித் பவார் மனைவி சுனேத்ர பவார் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இத்தேர்தல் அஜித் பவார் மற்றும் சரத் பவாருக்கு கெளரவ பிரச்னையாக அமைந்துள்ளது. சொந்த ஊரில் வெற்றி பெறாவிட்டால் பெரிய அவமானமாக மாறிவிடும் என்று இருவரும் நினைக்கின்றனர். ஆனால் களநிலவரப்படி அஜித் பவார் மனைவி சுனேத்ரா சற்று பின் தங்கியே இருப்பதாக கூறப்படுகிறது.
சரத் பவார் இத்தனை ஆண்டுகளாக பாராமதியில் செய்த நலத்திட்டங்களை சொல்லி சுப்ரியா சுலே ஓட்டுக்கேட்கிறார். சுப்ரியா சுலே சிறந்த பாராளுமன்றவாதி என்ற விருதைக்கூட பெற்று இருக்கிறார். அதோடு எந்நேரமும் பாராமதியில் சுற்றிக்கொண்டிருக்கும் சுப்ரியாவை நினைத்த நேரத்தில் பொதுமக்களால் பார்க்க முடிகிறது. ஆனால் அஜித் பவார் மனைவி சுனேத்ரா தேர்தலுக்கு புதிது.
சுனேத்ரா தோல்வி அடைந்துவிட்டால் அது அஜித் பவாரின் அரசியல் எதிர்காலத்திற்கு பெரிய பின்னடைவாக அமையும். எனவே எப்படியாவது அஜித் பவார் மனைவியை வெற்றி பெற வைத்துவிடவேண்டும் என்று பா.ஜ.கவும் போராடி வருகிறது. இதற்காக பிரதமர் மோடி ஒரு முறை பாராமதிக்கு பிரசாரத்திற்கு வரும்படி மாநில பா.ஜ.க மூத்த தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் கட்சியின் தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு கடிதம் எழுதி இருக்கிறாராம். ஆனால் இன்னும் பிரதமரிடமிருந்து சாதகமான பதில் வரவில்லை என்கிறார்கள். மனைவியின் வெற்றியை உறுதி செய்ய வேண்டிய நிலையில் இருப்பதால் அஜித் பவாரால் வேறு தொகுதியிலும் கவனம் செலுத்தமுடியவில்லை என்கிறார்கள்.
தேவையில்லாமல் சிக்கிக்கொண்டோமோ என்று அஜித் பவாரே நினைக்க ஆரம்பித்துள்ளார் என்கிறார்கள் அவரின் கட்சிகாரர்கள். அஜித் பவார் தனது மனைவியை நிறுத்தி இருக்கக்கூடாது என்று அவரது கட்சியினரே விமர்சிக்க ஆரம்பித்துள்ளனர். அதோடு பாராமதியில் சரத் பவார் அனுதாபிகள் மற்றும் ஆதரவாளர்கள் அதிகமாக இருக்கின்றனர். இதுவும் அஜித் பவார் மனைவிக்கு பின்னடைவாக அமைந்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு பாராமதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி தான் சரத்பவாரிடம் அரசியல் கற்றுக்கொண்டதாக குறிப்பிட்டதை சரத் பவார் கட்சியினர் பொதுக்கூட்டங்களில் நினைவுபடுத்தி பேசி வருகின்றனர்.
அதோடு சரத்பவாருக்கும் பிரதமர் மோடிக்கும் நல்ல தொடர்பு இருக்கிறது. எனவே சரத்பவார் மகளுக்கு எதிராக பிரசாரம் செய்ய மோடி வருவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதோடு பிரதமர் நரேந்திர மோடியே ஒரு முறை அஜித் பவாருக்கு 90 ஆயிரம் கோடி நீர்ப்பாசன ஊழலில் தொடர்பு இருப்பதாக விமர்சித்து பேசி இருக்கிறார். அப்படி இருக்கும் போது அவரது மனைவிக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய மோடி வருவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. வளர்ச்சிப்பணிகளுக்காகவே பா.ஜ.க கூட்டணியில் சேர்ந்ததாக அஜித் பவார் செல்லும் இடமெல்லாம் சொல்லிக்கொண்டிருக்கிறார். ஆனால் மக்களிடையே எடும்படியாக இல்லை என்பது களநிலவரமாக இருக்கிறது.
அமலாக்கப்பிரிவின் பிடியில் இருந்து தப்பிக்கவே பா.ஜ.க கூட்டணிக்கு சென்றதாகவே நம்புகின்றனர். இது போன்ற பல காரணங்களால் அஜித் பவார் மனைவி தேர்தல் களத்தில் பின் தங்கி இருக்கிறார். அவருக்காக அஜித் பவாரும், பா.ஜ.கவும் பம்பரமாக சுழன்று வேலை செய்து கொண்டிருக்கின்றனர். பிரதமர் மோடி வந்தாலும் பாராமதிக்கு வரமாட்டார் என்று கூறப்படுகிறது. புனே வந்து பிரசாரம் செய்துவிட்டு சென்றுவிடுவார் என்றும் கூறப்படுகிறது. இதனால் அஜித் பவார் தரப்பு ஒருவித பதட்டத்தில் இருக்கிறதாம்!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/47zomWY
from India News https://ift.tt/fsoRJ56
0 Comments