தேனி அருகே லட்சுமிபுரத்தில் திமுக பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின், தேனி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன், திண்டுக்கல் தொகுதி திமுக கூட்டணி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோரை ஆதரித்து வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், ``கடந்த எம்.பி தேர்தலில் தேனி தவிர எல்லா தொகுதிகளிலும் வென்றோம். இந்த முறை தேனி தொகுதியில் தமிழ்நாட்டிலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் வெல்ல வேண்டும்.
அரசியல் அமாவாசையான பழனிசாமி, `ஸ்டாலின் பிரதமர் கனவில் இருக்கிறார், அதற்கு வழியில்லை’ என உளறிக் கொண்டிருக்கிறார். தி.மு.க. - பிரதமர்களை, குடியரசுத் தலைவர்களை உருவாக்கும் இயக்கம். `அ.தி.மு.க.வை அழிக்க நினைத்தவர்கள் அழிந்து போவார்கள்’ என்கிறார். அ.தி.மு.க.வை அழிக்க வெளியில் இருந்து யாரும் வரத் தேவையில்லை. அதற்கு தான் எடப்பாடி பழனிசாமியும், பன்னீர்செல்வமும், தினகரனும் போட்டிப் போட்டு செய்துக் கொண்டு இருக்கிறார்கள்.
அடுத்து `விவசாயிகளின் கஷ்டங்களைப் பற்றி பேசவில்லை’ என்கிறார். அதிமுக ஆட்சி காலத்தில் விவசாயிகள் கஷ்டத்தில் இருந்தது போல திமுக ஆட்சியில் கஷ்டப்படவில்லை. விவசாயிகள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். உண்மையில் அவருக்கு விவசாயிகள் மீது அக்கறை இருந்தால் மத்திய அரசுக்கு எதிராகப் போராடும் உழவர்களுக்காக பேசியிருக்க வேண்டும். மூன்று வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்து உழவர்களின் வயிற்றில் அடித்தது பா.ஜ.க. அரசு.
எதிர்ப்பினால் பின்வாங்கிவிட்டார்கள். அப்போது பல்வேறு வாக்குறுதிகளைக் கொடுத்துவிட்டு ஓராண்டாகியும் நிறைவேற்றவில்லை. இதனால் மீண்டும் டெல்லியில் உழவர்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. அவர்கள் மீது மத்திய அரசு தாக்குதல் நடத்தியபோது பழனிசாமி பேசவில்லை. மூன்று வேளாண் சட்டங்களால் எதிராக போராடிய விவசாயிகளை, புரோக்கர் என்று சொன்ன, அரசியல் புரோக்கர்தான் பழனிசாமி.
தேனி தொகுதியில் பா.ஜ.க. கூட்டணியில் டிடிவி தினகரன் போட்டியிடுகிறார். முன்பு அவர் `நோட்டாவுடன் போட்டி போடக் கூடிய கட்சிதான் பா.ஜ.க’ என்றார். அவரைப் பார்த்து, `நோட்டாவுடன் போட்டி போடத் தேனிக்கு வந்திருக்கிறீர்களா?’ எனக் கேளுங்கள்.
பாஜக உடன் கூட்டணி வைத்துக் கொண்டால், மேட் இன் பாஜக வாஷிங் மெஷின் ஊழல்வாதிகளை வெளுத்துவிடும். அப்படி வெளுக்கப்பட்டு பா.ஜ.க. கூட்டணி சார்பில் நிற்கின்றவர்தான் தினகரன். அந்நியச் செலாவணி மோசடியில் சிக்கியவர்தான் இந்த தினகரன். அந்த வழக்கை 30 ஆண்டுகளாக இழுத்துக் கொண்டு இருக்கிறார். அந்த வழக்கில் அவருக்கு 28 கோடி ரூபாயை அமலாக்கத்துறை அபராதமாக விதித்தது. வழக்குகளுக்கு பயந்து, சந்தர்ப்பவாதக் கூட்டணி அமைத்து, மோடி வாஷிங் மெஷின் மூலமாகத் தேனிக்குள் நுழைந்து இருக்கிறார்.
பாஜக தமிழகத்தில் 2 முறை முதலமைச்சராக இருந்தவரை, தற்போது சட்டமன்ற உறுப்பினராக இருப்பவரை அவமானப்படுத்தும் விதமாக அவரை மிரட்டி ராமநாதபுரத்தில் போட்டியிட வைக்கின்றனர். தினகரனை மிரட்டித் தேனியில் போட்டியிட வைத்திருக்கிறார்கள்.
பா.ஜ.க.வுக்கு சொந்த செல்வாக்கு இல்லாததால் பன்னீர்செல்வம் - தினகரன் போன்ற வாடகை மனிதர்களை வைத்து தேர்தலைச் சந்திக்கிறார்கள். அதிமுகவை பி-டீம்-ஆக குத்தகைக்கு எடுத்து, தனியாக நிற்க வைத்திருக்கிறது. பா.ஜ.க. கூட்டத்திற்கும் - துரோகம் இழைக்கும் பழனிசாமி – பன்னீர்செல்வம் – தினகரன் - பா.ம.க. ஆகிய அடிமைக் கூட்டத்திற்கும் பாடம் புகட்ட வேண்டும்” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/47zomWY
from India News https://ift.tt/h9IYaiN
0 Comments