‘‘நாதஸ் திருந்திட்டான்; புலிப்பாண்டி எலிப்பாண்டியாக மாறி..?’’ - எடப்பாடியை தாக்கிப்பேசிய ஸ்டாலின்

தி.மு.க-வின் வேலூர் வேட்பாளர் கதிர் ஆனந்த், அரக்கோணம் வேட்பாளர் ஜெகத்ரட்சகன் ஆகியோரை ஆதரித்து, வேலூர் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அந்தக் கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டுப் பிரசாரம் செய்தார். முதலமைச்சர் பேசும்போது, ‘‘மோடி ஒரு ‘பார்ட் டைம்’ அரசியல்வாதி. தேர்தல் வந்துவிட்டதால், தமிழ்நாட்டுக்கு வருகிறார். பொய்களையும், அவதூறுகளையும் துணைக்கு அழைத்துக்கொண்டு தேர்தல் சீசனுக்கு மட்டும் வருபவர் அவர். தேர்தல் முடிந்ததும் தமிழ்நாட்டுப் பக்கமே வரமாட்டார். அ.தி.மு.க ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது, சிறுபான்மையின மக்களின் முதுகில் குத்தினார் எடப்பாடி பழனிசாமி. இப்போது, பா.ஜ.க-வுடன் ‘கள்ளக்கூட்டணி’ வைத்துக்கொண்டு... சிறுபான்மையினர்மீது அக்கறை வந்ததுபோல நடிக்க ஆரம்பித்திருக்கிறார். நாடாளுமன்றத்தில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ஆதரித்த பழனிசாமி, ‘எந்த முஸ்லிம் பாதிக்கப்படுகிறார்’ என்றும், அட்டர்னி ஜெனரல் மாதிரி ‘லா பாயிண்ட்’ பேசினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பதவி சுகத்தை அனுபவிக்க நம்முடைய தமிழ்நாட்டு மாணவர்களை ‘நீட்’ தேர்வை எழுத வைத்தார் பழனிசாமி. மூன்று வேளாண் சட்டங்களையும் ஆதரித்தார். உழவர்களின் துயரத்தைப் பார்த்து, ரசித்துக்கொண்டே பச்சைத் துண்டு போட்டு பச்சை துரோகம் செய்தார் பழனிசாமி. மக்கள் விரோதச் சட்டங்கள் கொண்டு வந்தபோது, அந்த புலிப்பாண்டி எலிப்பாண்டியாக மாறி பா.ஜ.க காலில் விழுந்துக் கிடந்தார். இத்தனையும் செய்துவிட்டு, ‘கரகாட்டகாரன்’ படத்தில் ‘நாதஸ் திருந்திட்டான்’ என்று கவுண்டமணி காமெடி வருமே... அதுபோல பேசிக்கொண்டு, இப்போது வாக்கு கேட்டுக்கொண்டு இருக்கிறார். சொரணையும், சுயமரியாதையும் இல்லாத பழனிசாமி போன்றில்லாமல், எந்த நிலையிலும் மக்கள் விரோத பா.ஜ.க அரசை, தி.மு.க எதிர்க்கும்.

போகும் ஊருக்குத் தகுந்த உடை மட்டும் அணிகின்ற மோடி அந்த ஊரையும், ஊர் மக்களையும், அவர்கள் மொழியையும், பண்பாட்டையும் மதிக்கிறாரா?. சமஸ்கிருதத்துக்கு நிதியை அள்ளிக் கொடுத்துவிட்டு அன்னைத் தமிழுக்குக் கிள்ளிக்கூட தர மறுக்கிறார். ‘கூட்டாட்சி’ என்று சொல்லிவிட்டு, ‘காட்டாட்சி’ வேலையை பார்க்கிறார். பொய் கதைகளைச் சொல்லி... அது, மூலமாக மக்களை குழப்பி, ஏமாற்றி, தேர்தல் ஆதாயமடைய முடியுமா? என்றும் முயல்கிறார். தேன்கூட்டில் கை வைத்ததுபோல, ‘கச்சத்தீவு’ பிரச்னையிலும் பா.ஜ.க. மாட்டிக்கொண்டு தவிக்கிறது. 2014-ல் ஆட்சிக்குவந்த பா.ஜ.க உச்ச நீதிமன்றத்தில் என்ன கூறியது?. ‘கச்சத்தீவு மீண்டும் வேண்டுமென்றால், இலங்கை அரசுடன் போரில்தான் ஈடுபட வேண்டும்’ என்றது.

எடப்பாடி பழனிசாமி

இந்தப் பத்தாண்டு காலத்தில் பிரதமர் மோடி எத்தனை முறை இலங்கைக்குப் பயணம் செய்தார்?. அப்போதெல்லாம், ஒருமுறையாவது கச்சத்தீவை மீண்டும் கேட்டிருக்கிறாரா?. இலங்கை அதிபரைச் சந்தித்த போதெல்லாம், ‘கச்சத்தீவு இந்தியாவுக்குத்தான் சொந்தம்’ என்றுச் சொல்லியிருக்கிறாரா?. அப்போதெல்லாம், கச்சத்தீவு மோடியின் ஞாபகத்துக்கு வரவில்லையா?. இப்போது, சீனா பற்றியாவது வாய் திறந்தாரா?. அருணாசலப் பிரதேசத்தின் பல பகுதிகளுக்குச் சீனா சொந்தம் கொண்டாடுகிறது. 30-க்கும் மேற்பட்ட நம்முடைய இடங்களுக்குச் சீனமொழியில் பெயர்களை வெளியிட்டிருக்கிறது. அதற்கு என்ன சொல்லப் போகிறீர்கள்?. இலங்கையைக் கண்டிக்கவும் துணிச்சல் இல்லை. சீனாவை எதிர்க்கவும் துணிச்சல் இல்லை. இந்த லட்சணத்தில், நீங்கள் கச்சத்தீவைப் பற்றிப் பேசலாமா?. பிரதமர் மோடி போடும் நாடகமெல்லாம் இன்னும் சிறிது நாள்களுக்குத்தான் என்பதை எச்சரிக்கையாகச் சொல்ல விரும்புகிறேன். மோடியின் முகத்தில் தோல்வி பயம் அப்பட்டமாகத் தெரிகிறது. தேர்தல் நெருங்க, நெருங்க தோல்வி பயத்தில் செய்யக் கூடாததையெல்லாம் செய்கிறார் மோடி’’ என்றார் காட்டமாக.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/47zomWY



from India News https://ift.tt/LnAbXp6

Post a Comment

0 Comments