``அமலாக்கத்துறை முதலில், துரைமுருகன் வீட்டுக்குத்தான் ரெய்டு போக வேண்டும்..!’’ - விளாசிய பிரேமலதா

வேலூர் நாடாளுமன்றத் தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் மருத்துவர் பசுபதியை ஆதரித்து, தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று இரவு குடியாத்தம் பேருந்து நிலையப் பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். அவர் பேசும்போது, ‘‘இந்த நாடாளுமன்றத்தில், எம்.பி-யாக இருந்த கதிர் ஆனந்து தான் மீண்டும் போட்டியிடுகிறார். ஒருமுறையாவது தொகுதிப் பக்கம் வந்து மக்களை பார்த்திருக்கிறாரா அவர்?. கொடுத்த வாக்குறுதிகளையாவது நிறைவேற்றியிருக்கிறாரா?. அவரின் அப்பா துரைமுருகன் அரசியலில் எத்தனையோ வருடங்களாக இருக்கிறார். இப்போது, அவரது மகனிடம் மைக்கை கொடுத்து பேசச் சொன்னால் உளறு வாயாக உளறிக் கொண்டிருக்கிறார். கதிர் ஆனந்த் பெண்களை மதிக்காமல் கேலி பேசுகிறார். ஒட்டுமொத்த பெண்களுமே புறக்கணிக்கிற நிலையில்தான் அவரின் பேச்சும், செயல்பாடுகளும் இருக்கின்றன.

பிரேமலதா விஜயகாந்த்

எம்.பி-யாக இவர் டெல்லியில் ஐந்து வருடங்கள் என்னச் செய்தார்? என்று கேள்விக்குறியாக இருக்கிறது. மற்றவர்களையெல்லாம் கிண்டலடித்து, தரக்குறைவாக பேசுகிறவரின் மகன் எப்படி இருப்பார் என்பதையும் உங்களிடமே கேட்கின்றேன். இன்றைக்கு தமிழ்நாடு முழுவதிலுமே மணல் கொள்ளை நடக்கிறது. அதற்கு யார் முக்கிய காரணம்?. உங்களுக்கே தெரியும். மணல் கொள்ளையில் வேலூர் மாவட்டம்தான் முதலிடம்.

அமலாக்கத்துறையினர் எங்கெங்கோ போய் ரெய்டு நடத்துகிறார்கள். முதலில் அவர்கள் இந்த மாவட்டத்தின் அமைச்சர் துரைமுருகன் வீட்டுக்குத்தான் ரெய்டு போக வேண்டும். மணல் கொள்ளையை தடுத்து, மக்கள் வரிப்பணத்தையும் காப்பாற்ற வேண்டிய மிகமிக முக்கிய பொறுப்பும் இருக்கிறது. இங்கு இரண்டாம் லாட்டரி விற்பனையும் அமோகமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. லாட்டரி, கஞ்சா, மது விற்பனை செய்பவர்கள் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பதும் ‘உள்ளங்கை நெல்லிக்கனி’ போல மக்களுக்கே தெரியும். லாட்டரி, கஞ்சா விற்பவர்களை நாட்டை விட்டே அப்புறப்படுத்த வேண்டிய நிலையில்தான் தமிழகம் இருக்கிறது.

துரைமுருகன் - கதிர் ஆனந்த்

‘இதுதான் என்னுடைய கடைசி தேர்தல். இனிமேல் தேர்தலில் போட்டிப் போட மாட்டேன்’ என்று இங்கு பாரதிய ஜனதா வேட்பாளராகப் போட்டியிடுபவரே சொல்லிவிட்டார். ஆனால், நம்முடைய வேட்பாளர் அப்படி கிடையாது. தெம்பாக சிரித்துக்கொண்டே மக்கள் முன்பு தைரியமாக நிற்கிறார். புரட்சிக்கலைஞர் கேப்டனின் தொண்டர்களும், எடப்பாடியாரின் தொண்டர்களும் இணைந்து மகத்தான வெற்றியை தரப்போகிறோம் என்ற சந்தோஷத்தில் நிற்கிறார். கொடுத்த வாக்கு கொடுத்தது தான். துளசி கூட வாசம் மாறும். தவசி வார்த்தை மாறியதாக வரலாறு இல்லை. நிச்சயமாக வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம். வெற்றிச் சின்னம் இரட்டை இலை. மூன்றாம் நம்பர் பட்டனை அழுத்தி பசுபதியை வெற்றிபெறச் செய்யுங்கள். லஞ்சம், ஊழல் இல்லாமல் மக்களுக்காகவே எங்களின் வாழ்க்கையை அர்ப்பணிக்கிறோம்’’ என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/47zomWY



from India News https://ift.tt/8Eh4Fio

Post a Comment

0 Comments