ராணிப்பேடை மாவட்டத்தின் பிரதான பேருந்து நிலையமாக இருந்து வருகிறது ஆற்காடு நகராட்சி பேருந்து நிலையம். இப்பேருந்து நிலையத்தின் பழைய கட்டடங்கள் இடிக்கப்பட்டு, 6 கோடி ரூபாய் செலவில் புதிய கட்டடங்கள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. அங்குத் தற்காலிக பேருந்து நிலையம் எதுவும் அமைக்கப்படாமலே கட்டட வேலைகள் நடைபெற்று வந்தன.
கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையிலும் பயணிகள் நிற்பதற்கு நிழற்குடைகூட அமைக்கவில்லை என மக்கள் பலரும் புகார் தெரிவித்தனர். இது தொடர்பாக நேரில் சென்று பேருந்து நிலையத்தில் நிழற்குடை இல்லாததால் மக்கள் சந்திக்கும் பிரச்னை குறித்து கருத்து கேட்டு, சம்பந்தப்பட்ட நகராட்சி நிர்வாகத்திடம் விளக்கம் பெற்று, கடந்த மாதம் விகடன் டாட்.காமில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
அப்போது நம்மிடம் பேசிய ஆற்காடு நகராட்சிப் பொறியாளர் எழிலரசன், ``மக்களின் கோரிக்கை நியாயமானது. விரைவில் பேருந்து நிலையத்தில் மக்கள் நிற்பதற்குத் தற்காலிக நிழற்குடை அமைக்கப்படும்" எனக் கூறியிருந்தார்.
இந்த நிலையில் தற்போது ஆற்காடு நகராட்சி பேருந்து நிலையத்தின் இரண்டு இடங்களில் நகராட்சி நிர்வாகம் சார்பில் பயணிகள் காத்திருப்பதற்காக ஓலைகளால் குடில் அமைத்தும், குடிநீர் வசதியும் செய்து தரப்பட்டிருக்கிறது.
கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில் நகராட்சி நிர்வாகம் தற்போது குடில் அமைத்திருப்பது, வெயிலின் தாக்கத்திலிருந்து மக்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ள ஏதுவாக அமைந்துள்ளது.
இருப்பினும் மாவட்டத்திற்கு எனப் பேருந்து நிலையம் இல்லாததால் அதிக மக்கள் வந்து செல்லும் பிரதான பேருந்து நிலையமாக இந்தப் பேருந்து நிலையம் உள்ளது.
மக்கள் கூட்டத்திற்கு ஏற்ப அந்தக் குடில்கள் இல்லையெனவும், விரைந்து பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் முடிக்கப்பட்டு, பேருந்து நிலையம் திறக்கப்பட்டால் மட்டுமே இதற்கு நிரந்தர தீர்வு காண முடியும் என்கிறார்கள் அப்பகுதி மக்கள்.
from India News https://ift.tt/Gbr7jd9
0 Comments