மம்தாவின் காங்., கம்யூ., எதிர்ப்பு அரசியல்; மேற்கு வங்கம் தாண்டி ‘இந்தியா’ கூட்டணியைப் பாதிக்குமா?!

இந்தியாவில் அரசியல்வாதிகள் பலவிதம் உண்டு. அந்த பலவிதத்திலும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி புதுவிதமானவர். 2024 மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க-வைத் தோற்கடிக்க வேண்டுமென்று தொடங்கப்பட்ட ‘இந்தியா’ கூட்டணியை உருவாக்குவதில் முக்கியப் பங்கு வகித்தவர் மம்தா.

மம்தா பானர்ஜி

காங்கிரஸ், தி.மு.க, சி.பி.எம்., சி.பி.ஐ உள்ளிட்ட கட்சிகளை உள்ளடக்கிய பா.ஜ.க எதிர்ப்பு அணிக்கு, ‘இந்தியா கூட்டணி’ என்று பெயர் சூட்டலாம் என்று முன்மொழிந்தவரே மம்தா பானர்ஜிதான். மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ், சி.பி.எம்., சி.பி.ஐ., காங்கிரஸ் என பல கட்சிகள் ஒன்று சேர்ந்துதான் ‘இந்தியா’ கூட்டணி என்று பெயர்வைக்க முடிவுசெய்தன.

அகில இந்திய அளவில் ‘இந்தியா’ கூட்டணியை உருவாக்கியவர்களில் ஒருவரான அவர், மேற்கு வங்கத்தில் மட்டும் அந்தக் கூட்டணிக்கு இடம் கொடுக்கவில்லை. மேற்கு வங்கத்தில் இருக்கும் 42 மக்களவைத் தொகுதிகளில், 2019-ம் ஆண்டு இரண்டு தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றிபெற்றது. சில தொகுதிகளில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிவாய்ப்பை காங்கிரஸ் இழந்தது.

இந்தியா கூட்டணி பேரணி - டெல்லி

தற்போது, பா.ஜ.க-வுக்கு எதிராக அகில இந்திய அளவில் ஒன்று சேர்ந்திருக்கும் நிலையில், காங்கிரஸ் கட்சி, சி.பி.எம் ஆகிய கட்சிகளை திரிணாமுல் காங்கிரஸ் அரவணைத்துக்கொண்டு, தொகுதிப் பங்கீடு செய்துகொண்டிருக்க வேண்டும். ஆனால், சி.பி.எம்-முடன் திரிணாமுல் காங்கிரஸ் கூட்டணி வைக்க வாய்ப்பே இல்லை. அந்தளவுக்கு இரு கட்சிகளும் மாநில அரசியலில் கடும் எதிரிகளாக இருக்கின்றன.

ஆனால், காங்கிரஸ் கட்சி அப்படி அல்ல. காங்கிரஸ் கட்சியின் மேற்கு வங்க மாநிலத் தலைவராக இருக்கும் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி, முதல்வர் மம்தா பானர்ஜியையும் திரிணாமுல் காங்கிரஸையும் கடுமையாக விமர்சித்துவருகிறார். அதற்கு திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகிகள் பதிலடி கொடுத்துவருகிறார்கள். அதே நேரத்தில், காங்கிரஸின் அகில இந்திய தலைவர்கள் மம்தாவுடன் நட்புறவுடன் இருக்கிறார்கள்.

ராகுல் காந்தியுடன் மல்லிகார்ஜுன கார்கே

அதனால், திரிணாமுல் காங்கிரஸுடன் காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தியது. எப்படியாவது கூட்டணியை உறுதிசெய்துவிட வேண்டுமென்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட தலைவர்கள் பெரும் முயற்சி எடுத்தனர். ஆனால், இரண்டு தொகுதிகளுக்கு மேல் தர முடியாது என்பதில் மம்தா உறுதியாக இருந்தார். அதனால், இரண்டு கட்சிகளுக்கும் உடன்பாடு ஏற்படவில்லை.

தற்போது, தேசிய அளவில் ‘இந்தியா’ கூட்டணி இல்லாத மாநிலமாக மேற்கு வங்கம் இருக்கிறது. 2014-ம் ஆண்டு மேற்கு வங்கத்தில் ஒரு மக்களவைத் தொகுதியில் ஜெயித்த பா.ஜ.க., 2019-ம் ஆண்டு 16 தொகுதிகளில் ஜெயித்தது. இந்த முறை இன்னும் அதிகமான தொகுதிகளில் ஜெயிக்க வேண்டுமென்று முயற்சி செய்கிறது.

மோடி, அமித் ஷா

இந்த நிலையில், காங்கிரஸை அரவணைத்துக்கொள்ள மம்தா தவறிவிட்டார் என்ற விமர்சனம் எழுந்திருக்கிறது. ஒருவேளை அதிகமான தொகுதிகளில் பா.ஜ.க ஜெயிக்கிறது என்றால், அதற்கு மம்தாவின் அணுகுமுறைதான் முக்கியக் காரணமாக இருக்கும் என்ற விமர்சனம் முன்வைக்கப்படுகிறது.

இந்த நிலையில், சி.பி.எம்., காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளையும் கொள்கை ரீதியாக விமர்சிப்பதற்கு பதிலாக, அந்த இரு கட்சிகளையும் ‘பா.ஜ.க-வின் ஏஜென்ட்டுகள்’ என்று பிரசாரம் செய்கிறார் மம்தா பானர்ஜி.

மம்தா பானர்ஜி

‘எதிர்காலத்தில் இந்தியா கூட்டணிக்கு நாங்கள் தலைமை தாங்குவோம். ஆனால், மேற்கு வங்கத்தைப் பொறுத்தவரையில் காங்கிரஸ், சி.பி.எம் ஆகிய இரண்டும் பா.ஜ.க-வின் ஏஜென்ட்டுகள்’ என்று மம்தா விமர்சிக்கிறார். மேற்கு வங்கத்தில் காங்கிரஸையும், சி.பி.எம்-ஐயும் ஜெயிக்கவிடாமல், தான் மட்டும் அதிக தொகுதிகளில் ஜெயித்தால், ஒருவேளை இந்தியா கூட்டணி மத்தியில் ஆட்சியமைக்கும் பட்சத்தில், அதில் அதிகாரம் செலுத்த முடியும் என்று கணக்குப்போடுகிறார் மம்தா.

ஆனால், அவரது இந்த அணுகுமுறையால் மேற்கு வங்கத்தில் பா.ஜ.க-வுக்கு சாதகமான நிலைதான் ஏற்படும். பிற, மாநிலங்களில் ‘இந்தியா’ கூட்டணிக்கு பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பு இல்லை. ஏனெனில், மேற்கு வங்கத்தைத் தாண்டி வேறு மாநிலங்களில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு செல்வாக்கு கிடையாது.

ராகுல் காந்தி - காங்கிரஸ்

மம்தாவின் இத்தகைய அணுகுமுறையை ‘இந்தியா’ கூட்டணியில் இருக்கும் கட்சித் தலைவர்கள் நன்கு புரிந்துவைத்திருப்பவர்கள்தான். எனவே, மம்தாவை அவர்கள் யாரும் வெளிப்படையாக விமர்சிக்கவில்லை. ‘42 தொகுதிகளிலும் நாங்களே போட்டியிடுவோம்’ என்று மம்தா அறிவித்த மறுநாள், அங்கு யாத்திரை சென்ற ராகுல் காந்தி, மம்தா மீது எந்த விமர்சனத்தையும் முன்வைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, மேற்கு வங்கத்தைத் தாண்டி எந்த விவகாரமும் இந்தியா கூட்டணிக்குள்ளாக பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பு இல்லை.



from India News https://ift.tt/rGVbfSv

Post a Comment

0 Comments