'கை' கொடுத்த ஒய்.எஸ்.ஆர்'
அதுவரை ஒரு ரூபாய் மருத்துவராக மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருந்த ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி என்னும் 29 வயது இளைஞர், 1978-ம் ஆண்டு தன்னை இந்திய தேசியக் காங்கிரஸ் கமிட்டியில் இணைத்துக்கொண்டார். போட்டியிட்ட முதல் சட்டமன்ற தேர்தலிலேயே வெற்றியும் கண்டார். இந்த சூழலில்தான் 1982-ம் ஆண்டு ஆந்திர சூப்பர் ஸ்டார் என்.டி ராமாராவ் 'தெலுங்கு தேசம்' எனும் கட்சியைத் தொடங்கினார். தேசிய கட்சியான காங்கிரஸ் ஆந்திர மக்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கவில்லை என அவர் செய்த பிரசாரம் மக்கள் மத்தியில் ஈடுபட்டது. அதன் விளைவு கட்சி தொடங்கிய ஒரு வருடத்துக்குள் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தார். அதுவரை காங்கிரஸின் கோட்டையாக இருந்த ஆந்திரா ஆட்டம் காண ஆரம்பித்தது. உடனே ராஜசேகர ரெட்டியை தலைவராக்கினர். அதன்விளைவு 1989-ம் ஆண்டு காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை பிடித்தது.
சந்திரபாபு நாயுடுவின் ஆளுமை!
இதற்கிடையில் என்.டி.ராமாராவ் மறைந்தார். பிறகு தெலுங்குதேசம் கட்சியின் தலைமைப் பொறுப்புக்கு சந்திரபாபு நாயுடு வந்தார். பிறகு 1995-ம் ஆண்டு ஆந்திராவின் முதல்வரானார். அரசியல் சாணக்யனான கருதப்படும் அவர் ஆந்திர அரசியலில் பெரும் ஆளுமையைச் செலுத்திக்கொண்டிருந்தார். அவரையும் ராஜசேகர் ரெட்டியை வைத்தே சரிகட்டியது அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி. பிறகு ஆந்திர மாநிலம் முழுவதும் நடைப்பயணம் மேற்கொண்டார், ராஜசேகர் ரெட்டி. அது ஆந்திர அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதையடுத்து 2004-ம் ஆண்டு 185 தொகுதிகளைக் கைப்பற்றி தனிப்பெரும் மெஜாரிட்டியுடன் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது காங்கிரஸ். ஆந்திராவின் முதல்வரானார் ராஜசேகர் ரெட்டி. இந்த சூழலில்தான் 2009-ம் ஆண்டு நடந்த விமான விபத்தில் ராஜசேகர் ரெட்டி உயிரிழந்தார்.
"காங்கிரஸின் தவறான முடிவும்
ஒய்எஸ்ஆர்.காங்கிரஸ் உதயமும்"
இதையடுத்து அவரது மகன் ஜெகன் மோகன் ரெட்டியை முதல்வராக்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் தனி பெரும் தலைவராக யாரும் உயர்வதை விரும்பாத அகில இந்திய தலைமை ரோசய்யாவை முதல்வராக்கியது. இதில் கடுப்பான ஜெகன் காங்கிரஸை கை கழுவினார். பிறகு ஆந்திராவில் முதல்வராகும் கனவில் ஒய்எஸ்ஆர்.காங்கிரஸ் என்கிற தனி கட்சியையும் தோற்றுவித்தார். முன்னதாக தனது தந்தை ஸ்டைலில் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்த சூழலில் சொத்துக் குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டார், ஜெகன். அந்த நேரத்தில் கட்சியை வழிநடத்தியவர் ஒய்.எஸ்.விஜயம்மா. மேலும் ஜெகன் பாதியில் விட்ட பாத யாத்திரையை தொடர்ந்தார், அவரது தங்கை ஒய்.எஸ்.ஷர்மிளா. இது மக்களிடத்தில் பெரும் வரவேற்பை கொடுத்தது.
பிரிந்த அண்ணன், தங்கை!
ஒருவழியாக சிறையில் இருந்து வெளியில் வந்த ஜெகன் மோகன் 2014-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொண்டார். ஆனால் அவரால் வெற்றி பெற முடியவில்லை. ஆனால் 2019-ம் ஆண்டு தேர்தலில் ஆட்சியை பிடித்தார். முன்னதாகவே காங்கிரஸ் ஜெகனை முதல்வராக்கி இருந்தால், இன்னும் காங்கிரஸ் கொடிதான் ஆந்திராவில் பறந்து கொண்டு இருக்கும். எனவேதான் பலரும் அப்போது காங்கிரஸ் தலைமை தவறான முடிவு எடுத்ததாக சொல்வது உண்டு. இதற்கிடையில் ஜெகனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், விஜயம்மா, ஷர்மிளா ஆகியோர் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸில் இருந்து பிரிந்தனர். மேலும் 2021-ம் ஆண்டு ஒய்.எஸ்.ஆர். தெலங்கானா என்னும் புதிய கட்சியை ஷர்மிளா தொடங்கினார்.
'பவன் கல்யாண் தொடங்கிய மும்முனை போட்டி..'
தெலங்கானா தேர்தல் களத்தில் அதிரடி காட்டிய ஷர்மிளா, காங்கிரஸில் தன்னை இணைத்துக்கொண்டார். உடனடியாக ஆந்திர மாநில காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக நியமிக்கப்பட்டார். இந்த சூழலில்தான் ஆந்திராவில் இருக்கும் 175 சட்டசபை தொகுதிகளுக்கும், 25 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்துவதாக அறிவித்தது தேர்தல் ஆணையம். இதில் ஜெகன், ஷர்மிளாவுடன் ஏற்கெனவே ஆட்சியை பறிகொடுத்த சந்திரபாபு நாயுடு மீண்டும் ஆட்சி அதிகாரத்தை பிடிக்க வேண்டும் என தீவிரம் காட்டி வருகிறார். அதற்காக பா.ஜ.க, பவன் கல்யாணுடன் கை கோர்த்தும் இருக்கிறார்.
அனல் தகிக்கும் ஆந்திர அரசியல்!
இதனால் களம் கடும் சவாலாக உள்ளதை நன்கு உணர்ந்துள்ளார், ஜெகன். இதையடுத்து 'ஆந்திராவுக்கு ஜெகன் ஏன் தேவை' என்கிற கோஷத்தை முன்னிறுத்தி மாநிலம் முழுவதும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். பதிலுக்கு சந்திரபாபு நாயுடு தரப்பும், 'ஆந்திரம் ஏன் ஜெகனை வெறுக்கிறது' என்கிற கோஷத்தை கையில் எடுத்துள்ளார். இருதரப்புக்கும் ஷர்மிளா டப் கொடுத்து வருகிறார். இதனால் ஆந்திர அரசியல் களத்தில் அனல் தகித்து வருகிறது. எனவே வரும் தேர்தலில் மீண்டும் ஜெகன் வெற்றி பெறுவாரா?; விட்ட இடத்தை சந்திரபாபு பிடிப்பாரா?, ஷர்மிளா மூலமாக மீண்டும் ஆந்திராவில் காங்கிரஸ் கொடி பறக்கச் செய்யும்மா? அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி என்பதை தேர்தல் முடிவு உறுதி செய்யும்!
from India News https://ift.tt/e8tKRYZ
0 Comments