தூர்தர்ஷனின் புதிய லோகோ குறித்த முதல்வர் ஸ்டாலினின் விமர்சனம்? - ஒன் பை டூ

சிவ.ஜெயராஜ், செய்தித் தொடர்பு இணைச் செயலாளர், தி.மு.க

“எங்கள் தலைவர் சொன்னது முழுக்க முழுக்க உண்மை. நாட்டிலுள்ள அனைத்தையும் காவிமயமாக்க வேண்டும் என்பது ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார் ஆகிய அமைப்புகளின் நீண்டகாலத் திட்டம். அந்த இலக்கை அடைய, ஒன்றிய பா.ஜ.க அரசு தங்கள் கையிலிருக்கும் ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்திவருகிறது. உலகப் பொதுமறை தந்த வள்ளுவருக்குக் காவிச் சாயம் பூசுகிறார்கள். பெரியாருக்குக் காவி தடவுகிறார்கள். தமிழகத்தில் மட்டுமல்ல… நாடு முழுவதுமே இதைத்தான் செய்துகொண்டிருக்கிறார்கள். ஒன்றிய அரசின் திட்டங்களுக்குத் தொடர்ச்சியாக காவிச் சாயம் பூசிவருவதன் வெளிப்பாடுதான், ‘பொதிகை’யின் பெயர் மாற்றப்பட்டிருப்பதும், அதன் லோகோவின் நிறத்தைக் காவியாக மாற்றியிருப்பதும். இது மட்டுமல்ல… ரயில்களுக்கும், குற்றவியல் சட்டங்களுக்கும் இந்தி, சம்ஸ்கிருதத்தில் பெயர் வைக்கிறார்கள். ‘பா.ஜ.க அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்தால், தேர்தல் ஆணையம் இருக்காது; அரசியலமைப்பையே மாற்றுவோம்’ என்று வலதுசாரிகள் பலரும் வெளிப்படையாகச் சொல்கிறார்கள். இது குறித்து பிரதமர் மோடி மறுத்துப் பேசியதும் இல்லை. காரணம், அவர்களின் நீண்டகாலத் திட்டமே அதுதான். ஒன்றிய பா.ஜ.க அரசின் இந்த வெறியாட்டங்களை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். எனவே, விரைவிலேயே பா.ஜ.க-வை மக்கள் தூக்கியெறியப்போவதையும் நாம் பார்க்கத்தான் போகிறோம்.”

சிவ.ஜெயராஜ், கரு.நாகராஜன்

கரு.நாகராஜன், மாநிலத் துணைத் தலைவர், பா.ஜ.க

“அர்த்தமில்லாமல் பேசியிருக்கிறார். தமிழகத்தில் பா.ஜ.க வேகமாக வளர்ந்துவருகிறது. அந்த பயத்தில் ஏதேதோ பேசிக்கொண்டிருக்கிறார் தமிழக முதல்வர். காவி நிறம் என்பது பா.ஜ.க-வுக்கு மட்டும் உரிய நிறம் கிடையாது. ஒவ்வோர் அரசு மாறும்போதும் இங்கு தமிழகத்திலேயே பேருந்துகளின் நிறங்கள் மாற்றப்பட்டிருக்கின்றன. திட்டங்களின் பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன. அப்படியென்றால், அதையெல்லாம் தவறு என்று சொல்கிறதா தி.மு.க... மக்களின் வரிப்பணத்தில் கட்டப்பட்ட கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் தி.மு.க-வின் சின்னமான உதயசூரியனை வைத்துக் கட்டிய தி.மு.க-வுக்கு இது குறித்துப் பேச என்ன அருகதை இருக்கிறது... `மதராஸ்’ என்ற பெயரை மாற்றி, `தமிழ்நாடு’ என்று பெயர் வைக்கும்போது இங்கிருக்கும் மக்கள் அனைவருமே வரவேற்றனர். அதேபோல, ஒவ்வொரு திட்டத்தின் பெயரையும் அங்கிருக்கும் மக்களின் உணர்வுகளை வைத்து, அவர்களின் எண்ணங்களுக்கு மதிப்பளித்து அரசு வைத்துக்கொண்டிருக்கிறது. ஆனால், இங்கிருக்கும் எதிர்க்கட்சிகள் ஒவ்வொன்றுக்கும் உள்ளர்த்தம் கற்பிப்பதை வாடிக்கையாக வைத்திருக்கின்றன. முதலில், தமிழ்நாட்டில் அரங்கேறிவரும் போதை தொடர்பான குற்றங்களைத் தடுப்பதற்கு முதல்வர் முன்வர வேண்டும். அப்படியில்லாமல் ஆட்சியின் தவறுகளை மறைக்க, இல்லாத ஒன்றைப் பேசி மக்களை ஏமாற்ற வேண்டாம்!”



from India News https://ift.tt/JfMsdgV

Post a Comment

0 Comments