மோடி, பிரியங்கா, டிம்பிள், ஸ்மிருதி மற்றும் பலர்... உத்தரப்பிரதேசம் எனும் பிரமாண்ட போர்க்களம்!

மோடி தொடங்கி ஸ்மிருதி இரானி வரையிலான பல பிரபலங்கள் போட்டியிடும் உத்தரப்பிரதேசத்தில், பா.ஜ.க தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி, சமாஜ்வாடி – காங்கிரஸ் கூட்டணி ஆகியவற்றுக்கு இடையே கடுமையான மோதல் நடக்கிறது. மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி ஓரமாக நின்று வேடிக்கை பார்க்கிறது. இந்தச் சூழலில், உத்தரப்பிரதேசத்தின் தேர்தல் களமும், வெற்றிவாய்ப்புகளும் எப்படி இருக்கின்றன?

பிரமாண்ட போர்க்களம்!

80 தொகுதிகளைக்கொண்ட மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசம், நேரு முதல் மோடி வரையில் ஒன்பது பிரதமர்களை நாட்டுக்குத் தந்திருக்கிறது. நேருவும் இந்திரா காந்தியும் தலா மூன்று முறையும், வாஜ்பாயும் மோடியும் தலா இரு முறையும் உ.பி வழியாகப் பிரதமராகத் தேர்வுசெய்யப்பட்டிருக்கிறார்கள். எனவே, மத்தியில் ஆட்சியைப் பிடிக்க விரும்பும் கட்சிகள் எல்லாமே உ.பி-க்குக் கூடுதல் முக்கியத்துவம் கொடுப்பதை வழக்கமாக வைத்திருக்கின்றன.

இந்தத் தேர்தலில் மூன்றாவது முறையாக வாரணாசியில் களம் காண்கிறார் மோடி. அங்கு 2014-ம் ஆண்டு 3,71,784 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற அவர், 2019-ம் ஆண்டு 4,79,505 வாக்குகள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றார். இந்த முறையும் வாரணாசியில் அவருக்கு வெற்றி காத்திருக்கிறது. ஆனால், வாரணாசியைப்போல எத்தனை தொகுதிகளில் பா.ஜ.க-வுக்கு வெற்றி கிடைக்கப்போகிறது என்ற கேள்வி இன்றைக்கு எழுந்திருக்கிறது.

களம் காணும் பிரபலங்கள்!

உத்தரப்பிரதேசத்தில் இருக்கும் 80 தொகுதிகளுக்கு, ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. பா.ஜ.க தலைமையிலான கூட்டணியில் ராஷ்டிரிய லோக் தளம், அப்னா தளம் (எஸ்), சுஹல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி, நிஷாத் கட்சி ஆகிய கட்சிகள் களத்தில் நிற்கின்றன. அவர்களுடன் சமாஜ்வாடி - காங்கிரஸ் கூட்டணி நேரடியாக மோதுகிறது. இவை தவிர, பகுஜன் சமாஜ் கட்சி, அசாதுதீன் ஒவைசி தலைமையிலான ஏ.ஐ.எம்.ஐ.எம் ஆகியவை தனித்தனியாகக் களத்தில் இருக்கின்றன.

லக்னோவில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அமேதியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, மதுராவில் நடிகை ஹேமமாலினி, சுல்தான்பூரில் மேனகா காந்தி உட்பட பா.ஜ.க-வின் சிட்டிங் எம்.பி-க்கள் பலர் மீண்டும் களம் காண்கிறார்கள். யோகி அரசை விமர்சித்து வந்த பின்னணியில், பிலிபிட் தொகுதியின் சிட்டிங் எம்.பி-யான வருண் காந்திக்கு சீட் மறுக்கப்பட்டிருக்கிறது. கைசர் கஞ்ச் தொகுதியின் சிட்டிங் எம்.பி-யான பிரிஜ் பூஷணை பா.ஜ.க தலைமை இன்னும் வேட்பாளராக அறிவிக்கவில்லை. `மல்யுத்த வீராங்கனைகளைப் பாலியல் வன்கொடுமை செய்தார்’ என்ற குற்றச்சாட்டுக்கு ஆளான காரணத்தால், அவருக்கு மீண்டும் சீட் கொடுப்பதா, வேண்டாமா என்ற குழப்பத்தில் இருக்கிறது பா.ஜ.க தலைமை.

மெய்ன்புரி தொகுதியில் சமாஜ்வாடித் தலைவர் அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவ் போட்டியிடுகிறார். சமாஜ்வாடி கட்சி பாரம்பர்யமாக வெற்றிபெற்றுவரும் கன்னோஜ் தொகுதியில் அகிலேஷ் யாதவ் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரேபரேலியில் பிரியங்கா... அமேதியில் ராகுல்?

 நாடு சுதந்திரம் பெற்ற காலந்தொட்டே காங்கிரஸின் கோட்டையாகத் திகழ்பவை ரேபரேலியும் அமேதியும். சோனியா காந்தி மாநிலங்களவை உறுப்பினராக ஆகிவிட்டதால், கடந்த முறை அவர் வெற்றிபெற்ற ரேபரேலி தொகுதியில் இப்போது பிரியங்கா காந்தி களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த முறை ராகுல் காந்தி தோல்வியடைந்த அமேதி தொகுதியில், இந்த முறை காங்கிரஸ் வேட்பாளராக பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா போட்டியிடப்போகிறார் என்று செய்திகள் அடிபடுகின்றன.

ஆனால், இந்தச் செய்தியை மறுக்கிறார்கள் காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள். “இந்த முறையும் அமேதியில் போட்டியிடும் ஸ்மிருதி இரானி சில மாதங்களுக்கு முன்பே பிரசாரத்தைத் தொடங்கிவிட்டார். அவர், `என்னைப் பார்த்து ராகுல் பயந்து ஓடிவிட்டார்’ என்று வேறு பேசித் திரிகிறார். அங்கே ராபர்ட் வதேரா போட்டியிட்டால், அவர் சொன்னது உண்மையாகிவிடும். கூடவே, `குடும்ப அரசியல்’ என்று சொல்லியே வதேராவைக் காலி செய்து விடுவார்கள். எனவே, ராகுல் மீண்டும் போட்டியிட வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்” என்கிறார்கள் அவர்கள். அதை ஆமோதிப்பதுபோல ராகுலும், ‘அமேதியில் நான் போட்டியிடுவது குறித்துக் கட்சித் தலைமை எடுக்கும் முடிவுக்குக் கட்டுப்படுவேன்’ என்று தெரிவித்திருக்கிறார். இந்த இரு தொகுதிகளுக்கும் மே 20-ல்தான் தேர்தல் என்பதால், காங்கிரஸ் வேட்பாளர்கள் யார், யார் என்பதில் சஸ்பென்ஸ் நீடிக்கிறது!

காங்கிரஸின் வியூகம்!

2014-ம் ஆண்டு, உ.பி-யில் 71 தொகுதிகளைக் கைப்பற்றி பா.ஜ.க பிரமாண்ட வெற்றிபெற்றது. ஆனால், 2019 தேர்தலில் 62 தொகுதிகளில்தான் பா.ஜ.க வெற்றிபெற்றது. இந்த முறை பா.ஜ.க-வின் எண்ணிக்கை மேலும் குறையும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். அதற்குப் பல காரணங்களையும் முன்வைக்கிறார்கள்.

“காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவும் கரம் கோத்திருப்பது, உ.பி தேர்தல் களத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இவர்கள், ‘பா.ஜ.க-வுக்கு எதிராக வேலையின்மை, வறுமை, விவசாயிகள் பிரச்னை ஆகியவற்றை முன்னிறுத்துகிறார்கள். உ.பி-யில் வேலையின்மை பிரச்னை கடுமையாக இருக்கும் சூழலில், அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட ஒன்பது தேர்வுகள், ‘கேள்வித்தாள் கசிவு’ பிரச்னையால் ரத்துசெய்யப்பட்டுவிட்டன. எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு என எல்லாம் முடிந்து, பணி நியமன ஆணை வரும் என்று லட்சக்கணக்கான இளைஞர்கள் காத்திருப்பதும், அந்த நேரத்தில் திடீரென தேர்வுகள் ரத்துசெய்யப் படுவதும் யோகி ஆட்சியில் தொடர்கதையாகி வருகின்றன. இந்தப் பிரச்னையைக் கையிலெடுத்திருக்கும் காங்கிரஸ், ‘கேள்வித்தாள் கசிவுக்குக் காரணமானவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று வாக்குறுதியும் கொடுத்திருக்கிறது.

வேலையின்மை பிரச்னையைக் கையிலெடுத்திருப்பதன் மூலம், அரசுப் பணிகளுக்குத் தேர்வு எழுதி பாதிக்கப்பட்ட இளைஞர்கள், அக்னிபத் திட்டத்தால் எதிர்காலம் கேள்விக்குறியான இளைஞர்கள் ஆகியோரை அகிலேஷ் – ராகுல் கூட்டணி தங்களுக்கு ஆதரவாகத் திருப்பியிருக்கிறது. `எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரைப்படி, வேளாண் விளைபொருள்களுக்கு விலை நிர்ணயம் உறுதிசெய்யப்படும்’ என்ற வாக்குறுதி யையும் காங்கிரஸ் வழங்கியிருக்கிறது” என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

ராஜ்புத் சமூக ஆதரவு!

இது போக, இந்தத் தேர்தலில் எதிர்பாராத விதமாக சமாஜ்வாடி – காங்கிரஸ் கூட்டணிக்கு ஒரு ஜாக்பாட் அடித்திருக்கிறது. அதுதான், ராஜ்புத் சமூகத்தினரின் ஆதரவு. உ.பி., குஜராத், ராஜஸ்தான் உட்பட 11 மாநிலங்களில் ராஜ்புத் சமூகத்தினர் அடர்த்தியாக இருக்கிறார்கள். அவர்களிடம் சுமார் 22 கோடி வாக்குகள் இருக்கின்றன. எப்போதும் பா.ஜ.க-வுக்குக் கண்ணை மூடிக்கொண்டு வாக்களிக்கும் ராஜ்புத் சமூகத்தினர், இப்போது பா.ஜ.க-வுக்கு எதிராகத் திரும்பியிருக்கிறார்கள். குஜராத் ராஜ்கோட் தொகுதியில், பா.ஜ.க வேட்பாளரான மத்திய அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா, ராஜ்புத் சமூகப் பெண்களை இழிவுபடுத்திப் பேசியது, ஒட்டுமொத்த ராஜ்புத் சமூகத்தையும் பா.ஜ.க-வுக்கு எதிராகக் கொந்தளிக்கவைத்திருக்கிறது. இதனால், சமாஜ்வாடி – காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக ராஜ்புத் சமூகத்தினரின் மகாபஞ்சாயத்து தீர்மானம் நிறைவேற்றி யிருக்கிறது. சமீபத்தில் சஹரான்பூரில் நடைபெற்ற பிரியங்கா காந்தியின் ரோடு ஷோ, ஒட்டுமொத்த உ.பி-யையும் மிரளவைத்தது. அந்த அளவுக்குப் பெரும் கூட்டம் திரண்டது. அந்தக் கூட்டத்தில் கணிசமானோர் ராஜ்புத் சமூகத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. ``ராஜ்புத் சமூகத்தினரின் கோபத்தால், 22 மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட மேற்கு உ.பி-யில் பா.ஜ.க-வுக்குப் பெரும் பாதிப்பு ஏற்படும்’’ என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

மோடியின் வியூகம்!

காங்கிரஸ் இப்படி தீவிரமாகப் பணியாற்றிவரும் நிலையில் பா.ஜ.க-வினரோ, அயோத்தியில் ராமர் கோயில் கட்டியதையும், புதிய விமான நிலையங்கள், சாலைகள் அமைத்ததையும் தங்கள் சாதனைகளாகப் பறைசாற்றும் மோடி, ‘அயோத்தியில் ராமர் கோயில் பிராண பிரதிஷ்டை நிகழ்ச்சியை சமாஜ்வாடியும் காங்கிரஸும் புறக்கணித்துவிட்டன. இதன் மூலம் அகிலேஷ் யாதவும் ராகுல் காந்தியும் ராமரை அவமதித்துவிட்டார்கள்’ என்கிறார்.

அது மட்டுமல்ல... மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் கடைசிகட்டமாக ஜூன் 1-ம் தேதிதான் வாக்குப்பதிவு நடக்கிறது. நாடு முழுவதும் பிரசாரம் செய்துவிட்டு, கடைசி ஒரு வாரம் மட்டும் அவர் தொகுதியில் கவனம் செலுத்துவார் என்கிறார்கள் பா.ஜ.க-வினர்!

இரு அணிகளின் பிரசாரத்தால் உத்தரப்பிரதேச தேர்தல் களத்தில் அனல் பறக்கிறது. ‘டபுள் இன்ஜின் ஆட்சியில் உத்தரப்பிரதேசம் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்திருக்கிறது’ என்று மோடி புள்ளிவிவரங்களை அடுக்க,

‘உ.பி-யில் 21 விமான நிலையங்கள் வரவிருக்கின்றன’ என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் பரபரப்பேற்றுகிறார்.

‘உலகிலேயே மிகப்பெரிய ஊழல், பா.ஜ.க-வின் தேர்தல் பத்திரங்கள் ஊழல்தான்’ என்று அகிலேஷ் யாதவ் பிரசாரம் செய்துவருகிறார். ராகுல் காந்தியோ, ‘உத்தரப்பிரதேசத்தில் நாங்கள் வலுவான கூட்டணியாக இருக்கிறோம். இந்தத் தேர்தலில் பா.ஜ.க-வைத் துடைத்தெறிவோம்’ என்கிறார். அகிலேஷ் யாதவ், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரின் பிரசாரக் கூட்டங்களில் பெரும் கூட்டம் திரளுகிறது!

மக்கள் மனதில் என்ன இருக்கிறது என்பது ஜூன் முதல் வாரத்தில் தெரிந்துவிடும்!



from India News https://ift.tt/q7UScVs

Post a Comment

0 Comments