ஒன் பை டூ

கரு.நாகராஜன், மாநிலத் துணைத் தலைவர், பா.ஜ.க

“அமைச்சர் மனோ தங்கராஜ் நல்ல மனநிலையில் இல்லை என்று நினைக்கிறேன். முதல்வர் ஸ்டாலின், ‘இந்தத் தேர்தலில் வெற்றி பெறாவிட்டால், தி.மு.க அமைச்சர்களை, நிர்வாகிகளைத் தொலைத்துவிடுவேன்’ என்ற தொனியில் பேசியிருக்கிறார். இதனால் சிறுபான்மை மக்களின் வாக்குகளைப் பெற மனோ தங்கராஜ் என்னென்னவோ பேசிக்கொண்டிருக்கிறார். பா.ஜ.க இதுவரை எந்த மதத்தவரையும் புண்படுத்தியது கிடையாது. எந்த மதத்துக்கு எதிராகவும் பேசியது கிடையாது. ஆனால், நாடாளுமன்றத்தில் செங்கோலை நிறுவியபோது, பிரதமர் ஆசி வாங்கியபோது ‘பிரதமருக்கு மூச்சு இருக்கிறதா, இல்லையா?’ என்று கீழ்த்தரமான வார்த்தைகளைச் சொன்னவர்தான் அமைச்சர் மனோ தங்கராஜ். அவருக்கெல்லாம் மத வெறுப்புணர்வு குறித்துப் பேச என்ன அருகதை இருக்கிறது... ‘சனாதனத்தை ஒழிப்பேன்’ என்று சொல்லி நீதிமன்றக் கண்டனங்களுக்கு ஆளானார் உதயநிதி. ராமர் குறித்துத் தவறாகப் பேசுகிறார் ஆ.ராசா. ஆனால், பிரதமர் மோடி தமிழர்களின் பெருமை குறித்துப் பேசுகிறார். மாநிலத்தின் அமைச்சராக இருப்பவர், இப்படிக் கண்டபடி கருத்துகளைச் சொல்லாமல், தனது துறையிலுள்ள குளறுபடிகளைச் சரிசெய்ய வேண்டும். தமிழ்நாட்டில் பா.ஜ.க அசுர வளர்ச்சியடைந்து வருகிறது என்பது, முதல்வரில் ஆரம்பித்து அமைச்சர்கள் வரை அனைவரும் பதற்றத்தோடு பேசுவதிலிருந்தே தெரிகிறது.’’

காசிமுத்து மாணிக்கம், வர்த்தக அணிச் செயலாளர், தி.மு.க

“அமைச்சர் சொல்லியிருப்பது முழுக்க முழுக்க உண்மை. தேர்தல் வந்தாலே பா.ஜ.க-வினர் நாட்டில் பெரும் குழப்பங்களை ஏற்படுத்தத் துடிப்பார்கள். ‘எல்லையில் ராணுவ வீரர்கள்…’ என்று போலிக் கண்ணீர் வடிப்பார்கள். சமீபத்தில் கர்நாடகாவில் பா.ஜ.க இணை அமைச்சர் ஒருவர் ‘தமிழ்நாட்டில் பயிற்சி பெற்று வந்து, கர்நாடகாவில் குண்டு வைக்கிறார்கள்’ என்று அப்பட்டமாகப் பொய் சொன்னார். இப்படி இல்லாததையும் பொல்லாததையும் பேசி, மக்களைக் குழப்பி, வாக்குகளாக அறுவடை செய்யத் துடிப்பார்கள். கோவை குண்டு வெடிப்பில் இறந்தவர்களுக்கு மரியாதை செலுத்திய பிரதமருக்கு, மணிப்பூர் பற்றி எரியும்போது அதைக் கண்டுகொள்வதற்கு மனமில்லை... மழை, வெள்ளத்தால் தென் தமிழக மக்கள் பாதிக்கப்பட்டபோது, பிரதமருக்கு வந்து பார்க்க நேரமில்லை. ஆனால், இப்போது தேர்தல் வந்துவிட்டது என்றதும், குறுக்கும் நெடுக்குமாக தவிட்டுக்குருவிபோலத் தமிழ்நாட்டைச் சுற்றிச் சுற்றி வருகிறார். ஆறிய ரணங்களின்மீது மத வெறுப்புணர்வு என்னும் கூரான கத்தியைக்கொண்டு கிழிக்கிறார். பிரதமர் வடிப்பது நீலிக்கண்ணீர் என்பது கோவை மக்களுக்கு மட்டுமல்ல… தமிழக மக்கள் அனைவருக்குமே தெரியும். பா.ஜ.க-வின் பிரிவினைவாத கோமாளித்தனமெல்லாம் இந்த பெரியார் மண்ணில் எடுபடாது. காரணம், நடந்துகொண்டிருப்பது தி.மு.க ஆட்சி!’’

- துரைராஜ் குணசேகரன்



from India News https://ift.tt/ANmxWeg

Post a Comment

0 Comments