திருப்பத்தூர் மாவட்டம், சோலையார்பேட்டை அடுத்த கோடியூரில் மலை அடிவாரம் செல்லும் வழியில் அமைந்துள்ளது கோடியூர் ஏரி. பரந்து விரிந்த இந்த ஏரியானது, தூய்மையுடனும் மீன்களும், பறவைகளும் மகிழ்ச்சியுடன் வாழும் இடமாகத் திகழ்கிறது. ஆனால் கடந்த இரண்டு, மூன்று மாதங்களாக ஏரிக்கரையின் வழியாக, சாலை ஓரங்களில் குப்பைகளும், நெகிழிப் பைகளும், இறைச்சிக் கழிவுகளும் கொட்டப்பட்டு, ஏரி மாசடைந்து சுகாதார சீர்கேடு நிலவிக் கொண்டிருக்கிறது.
இதனால், அவ்வழியாகச் செல்லும் மக்களுக்கு நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உண்டாகிறது. இந்நிலைமை இப்படியே தொடர்ந்தால் மீன்களுக்கும் , பறவைகளுக்கும் மற்றும் ஏரிக்கரையின் அருகாமையில் வசிக்கும் மக்களுக்கும் பெரும் பாதிப்பு ஏற்படும்.
இந்த குப்பைகள் எப்படி இங்கே வருகிறது... யார்க் குப்பையைப் போடுகிறார்கள் என்று ஏரிக்கரைக்கு அருகாமையில் வசிக்கும் மக்களிடம் சென்று விசாரித்தபோது, ``இரவு நேரங்களில் மக்கள் வீட்டில் உள்ள குப்பைகளை மூட்டையில் கட்டிக் கொண்டு வந்து வீசிவிட்டுச் செல்கின்றனர். அதேபோல இறைச்சிக் கடைகளில் உள்ள பிராய்லர் கழிவுகளை இரவு நேரங்களில் வந்து, இந்த ஏரிக்கரையிலேயே போட்டுவிடுகின்றனர். மேலும், சில நேரங்களில் இறந்துபோன விலங்குகளை மக்கள் இங்கே வீசி விடுகின்றனர். குறிப்பாகக் குப்பைகளை நகராட்சியில் பணிபுரிபவர்கள் தீவைத்து எரித்து, புகை நிறைந்த சூழலை ஏற்படுத்துகின்றனர்" என்றனர்.
மேலும், அவ்வழியாகச் செல்லும் மக்களிடம் விசாரித்தபோது, ``மூன்று மாதங்களுக்கு முன்பு வரை இத்தகைய அசுத்தமான நிலை இங்கு இல்லை. ஏரி தூய்மையாகத்தான் இருந்தது. ஆனால் சமீபமாகத்தான் இப்படிக் குப்பைகளைக் கொண்டுவந்து இங்கே கொட்டிவிட்டுச் சென்று விடுகின்றனர். சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகளும் இதைக் கண்டுகொள்வதில்லை. இப்படியே போனால், பெரும் நோய்த்தொற்று அபாயம் ஏற்படும்.
அது மட்டுமல்லாமல் குறிப்பாக கோடியூரில் இருந்து வரும் கழிவு நீர் அனைத்தும், சுத்திகரிக்கப்படாமலேயே நேரடியாக இந்த ஏரியில் கலந்து தண்ணீரை மாசுபடுத்துகிறது. எனவே அதிகாரிகள் உடனடியாக இந்த விஷயத்தில் கவனம் செலுத்தி, இந்த சுகாதாரப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்து, ஏரியைத் தூய்மையாக வைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.
from India News https://ift.tt/E5zRPea
0 Comments