திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரியில் இந்தியா கூட்டணியின் நாடாளுமன்ற தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு, தஞ்சாவூர் தொகுதி வேட்பாளர் முரசொலி, நாகப்பட்டினம் தொகுதி வேட்பாளர் வை.செல்வராஜ் ஆகியோரை அறிமுகப்படுத்தி, வாக்கு கேட்டார். இதற்காக நாடாளுமன்ற வடிவில் மேடை அமைக்கப்பட்டிருந்தது.
இதற்கான ஏற்பாட்டை எம்.எல்.ஏ பூண்டி.கலைவாணன் செய்திருந்தார். மேடையின் மேல் பகுதியில் கதிர் அரிவாள் சின்னம் மட்டும் இருந்தது. மேடை அமைப்பாளர்களை சற்று கோபமாக அழைத்த கலைவாணன், `முதல்வர் மேடைக்கு வருவதற்கு கிளம்பி விட்டார், முதலில் உதயசூரியன் சின்னத்தை வைக்க வேண்டியதுதானே?' என கடிந்து கொண்டார். ஸ்டாலின் வரக்கூடிய நேரத்திற்கு முன்பு தமிழ்நாட்டு வரைப்படத்தில் ஸ்டாலின் படம் இருப்பதுபோல், நாற்பதுக்கு நாற்பது என எழுதப்பட்ட ஃப்ளக்ஸ் போர்டை ஸ்டாலின் பேசும் மைக்கிற்கு பின்புறம் வைத்தனர்.
மைக் முன்பு நின்ற டி.ஆர்.பி.ராஜா, கேமரா மேனை பார்த்து நாற்பதுக்கு நாற்பது தெரிகிறதா என கேட்டார். கலை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தபோது பெரியார் வேடமிட்ட பெரியவர் ஒருவர் மேடைக்கு ஏறினார். ஆனால் உடன்பிறப்புகள் அவரை உடனே கீழே இறக்கி விட்டனர். கூட்டத்திற்கு வருபவர்களை சோதனை செய்வதற்காக வைக்கப்பட்ட மெட்டல் டிடெக்டர் உள்ளிட்ட எந்த பாதுகாப்பு உபகரணங்களும் வேலை செய்யவில்லை.
பல ஆயிரம் பேர் முன்னிலையில் முதல்வர் கலந்து கொள்ளக்கூடிய நிகழ்ச்சிக்கான பாதுகாப்பில் போலீஸார் இப்படியா அலட்சியமாக நடந்து கொள்வார்கள் என கட்சியின் சீனியர்கள் பலர் புலம்பியதை கேட்க முடிந்தது. நெட்வொர்க் கிடைக்காததால் பாதுகாப்பு கருவிகள் வேலை செய்யவில்லை என போலீஸ் தரப்பில் காரணம் கூறி சமாளித்தனர். முதல்வர் ஸ்டாலின் மேடைக்கு வந்ததும், எல்.இ.டி லைட்டில் செய்யப்பட்ட உதயசூரியன் சின்னத்தை நிர்வாகிகள் உயர்த்தி காண்பித்தனர்.
பின்னர் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது, ``நானும் டெல்டாகாரன் என்ற பெருமையோடு, சொந்த மண்ணுக்கு வந்திருக்கிறேன். தலைவர் கலைஞர் பிறந்த திருக்குவளை, வளர்ந்த திருவாரூர், வென்ற தஞ்சாவூர் உள்ளடங்கிய தஞ்சாவூர், நாகப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதிகளுக்கு வந்திருக்கிறேன்.
ஏப்ரல் 19-ம் தேதி முதற்கட்ட நாடாளுமன்ற தேர்தல். தஞ்சை தொகுதி வாக்காளர்கள், நம்முடைய வேட்பாளர் முரசொலிக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். முரசொலியைப் படித்து வளர்ந்தவன் நான். இன்றைக்கு முரசொலி என்ற பெயர் வைத்திருக்கும், வேட்பாளருக்கு வாக்கு கேட்கிறேன். முரசொலி தலைவரின் மூத்த பிள்ளை! அந்த மூத்த பிள்ளைக்கு வாக்கு கேட்க, உங்கள் வீட்டுப் பிள்ளையாக இந்த ஸ்டாலின் வந்திருக்கிறேன்.
அதே மகிழ்ச்சியோடு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் வை.செல்வராஜ்க்கு கதிர் அரிவாள் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என நாகை தொகுதி வாக்காளர்களைக் கேட்க வந்திருக்கிறேன். நடைபெற இருக்கும் தேர்தலை ஏதோ பா.ஜ.க ஆட்சியை வீழ்த்துவதற்கான தேர்தலாக மட்டும் யாரும் நினைத்துவிடக் கூடாது. இந்தியாவில் இனி ஜனநாயகம் இருக்க வேண்டுமா, வேண்டாமா என்று முடிவு செய்வதற்கான தேர்தல் இது.
இந்தியாவின் மாநிலங்களை - மக்களாட்சியை, மதச்சார்பின்மையை, பன்முகத்தன்மையை, ஒடுக்கப்பட்ட மக்களை, ஏழை-எளிய மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்றால், பா.ஜ.க இன்னொரு முறை ஆட்சிக்கு வரக் கூடாது. பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இந்தியா என்ற கூட்டாட்சி அமைப்பே இருக்காது. நாட்டில் ஜனநாயக அமைப்பு முறையே இருக்காது. நாடாளுமன்ற நடைமுறையே இருக்காது. இவ்வளவு ஏன், மாநிலங்களே இருக்காது. முதலில் நாம் எல்லோரும் இதை உணர வேண்டும். கண்ணுக்கு முன்னால் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சிதைக்கப்பட்டதைப் பார்த்தோம். அங்கு சட்டமன்றம் கிடையாது. காஷ்மீருக்கு ஐந்து ஆண்டுகளாக தேர்தல் கிடையாது. இப்போதுகூட, ஜம்மு-காஷ்மீருக்குத் தேர்தல் அறிவிக்கவில்லை. இதுதான் பா.ஜ.க பாணி, சர்வாதிகாரம்.
இந்த நிலைமை நாளை தமிழ்நாட்டிற்கும் ஏற்படலாம். ஏன், பா.ஜ.க மீண்டும் வெற்றி பெற்றால் இதே நிலைதான் அனைத்து மாநிலங்களுக்கும் ஏற்படும். இது ஏதோ எதிர்க்கட்சி மாநிலங்களுக்கு மட்டுமல்ல. பா.ஜ.க. ஆளும் மாநிலங்களுக்கே இந்த ஆபத்து வரத்தான் செய்யும். 2014-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பா.ஜ.க இந்தியாவை எல்லா வகையிலும், மிகமோசமான வகையில் பாழ்படுத்திவிட்டது. அதுமட்டுமல்ல, இந்தியாவில் இருந்த எல்லாக் கட்டமைப்புகளையும் சிதைத்துவிட்டார்கள்.
எந்தவிதமான குற்ற உணர்ச்சியும் இல்லாமல், ஜனநாயகத்துக்கு விரோதமான அத்தனை செயல்களையும் செய்து பா.ஜ.க. ஆடும் ஆட்டத்துக்குப் பெயர்தான், அழுகுணி ஆட்டம். தனக்கு கிடைத்த அதிகாரத்தைப் மோடி தவறாக பயன்படுத்தி, எதிர்க்கட்சிகளை அழிக்க முயல்வது மட்டுமல்ல, நாட்டையே நாசம் செய்துவிட்டார். இனியும் மோடி ஆட்சி தொடர்வது, தமிழ்நாட்டுக்கு அழிவு. இந்தியாவுக்கும் நல்லதல்ல. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, ”திராவிட மாடல்” ஆட்சியில் மக்கள் பணிகளை எல்லாம் தொய்வில்லாமல் செய்து கொண்டிருக்கிறோம். இந்தியாவுக்கே எடுத்துக்காட்டான பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி இருக்கிறோம்.
தேர்தல் அறிக்கையில் சொல்லிய வாக்குறுதிகளை மட்டுமல்ல, சொல்லாத பல திட்டங்களையும் தொடர்ந்து செய்துகொண்டு வருகிறோம். இவ்வளவு கடினமான நிதி நிலைமையிலேயே நம்மால் இவ்வளவு நல்லது செய்ய முடிகிறது என்றால், நம்முடைய கூட்டணி ஆட்சி ஒன்றியத்தில் வந்தால், இன்னும் என்னென்ன திட்டங்களைச் செய்வோம் என்று தேர்தல் அறிக்கை வெளியிட்டுச் சொல்லி இருக்கிறோம்.
சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு கொடுத்த வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை செய்துகாட்டியிருப்பவன்தான், இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். ஆட்சிப் பொறுப்பு கையில் வைத்திருந்தபோது, மக்களுக்கு ஒன்றுமே செய்யாத பழனிசாமி, ஒன்றிய அரசில் பா.ஜ.க-வுடன் சேர்ந்து, தமிழ்நாட்டுக்கு எந்த நன்மையும் செய்யாமல், துரோகங்களை மட்டுமே செய்தவர் பழனிசாமி.
அவர் வெளியிட்டிருப்பது தேர்தல் அறிக்கை அல்ல, பழனிசாமியின் பம்மாத்து அறிக்கை. பா.ஜ.க-வின் பாதம் தாங்கியாக, உதவாக்கரையாக இருந்த பழனிசாமி, இப்போது என்ன சொல்கிறார் தெரியுமா? ஆளுநரை நியமிக்கும் போது, முதலமைச்சரின் ஆலோசனை பெற்று நியமனம் செய்ய வேண்டும் என்று தி.மு.க தேர்தல் அறிக்கையில் சொன்னதையே ஜெராக்ஸ் எடுத்திருக்கிறார்.
தி.மு.க. அரசுக்குக் குடைச்சல் கொடுத்துக்கொண்டே இருக்கிறாரே ஆளுநர், அவரைக் கண்டித்து ஒருநாளாவது ஒரு அறிக்கையாவது விட்டிருக்கிறாரா பழனிசாமி இல்லையே. ஆட்சியில் இருந்த போது எதையுமே செய்யாமல் இப்போது வந்து நீங்கள் போடும் இந்த பகல் வேஷம் பா.ஜ.க-வுக்கான பசப்பு நாடகம்தான் என்பதை மக்கள் உணர்ந்திருக்கிறார்கள்.
பழனிசாமி இப்படி என்றால், ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, 2014 ம் ஆண்டில் மோடி கொடுத்த வாக்குறுதிகள் எதையாவது நிறைவேற்றினாரா?, இந்திய நாட்டுக்குள் ஆக்கிரமிப்பு செய்யும் நாடுகளைவிடச் சொந்த நாட்டு விவசாயிகள்தான் பிரதமர் மோடியின் கண்ணுக்கு எதிரிகளாகத் தெரிகிறார்கள். தமிழ்நாட்டு உழவர்களையாவது நிம்மதியாக இருக்க விட்டாரா மோடி? அதுவும் இல்லை. இப்போது தேர்தல் பிரசாரத்திற்காகத் தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர் வாயிலேயே வடை சுடுகிறார். வார்த்தைகளால் வடை சுடுவதில் வல்லவர் மோடி. வெறுங்கையில் முழம் போடுவதும் அவருக்குக் கை வந்த கலை.
தமிழ்நாடு மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. ஆனால் இதுவரை நிவாரண நிதியாக ஒரு சல்லிக்காசுகூட ஒதுக்கவில்லை பா.ஜ.க. அரசு. தமிழ்நாட்டுக்கான சிறப்புத் திட்டங்கள் எதையும் வழங்காத மோடிக்கு, தமிழ்நாட்டு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்பதுதான் உண்மை. இது மோடிக்கும் தெரியும். அதனால்தான், தி.மு.க. மேல் அளவுக்கு அதிகமான ஆத்திரத்தைக் கொட்டுகிறார். தி.மு.க. மேல் ஏன் மோடிக்கு இவ்வளவு கோபம்?.
இந்தியா முழுவதும் பா.ஜ.க.வுக்கு எதிராகத் தனித்தனியாக இயங்கி வந்த கட்சிகளை ஒன்றிணைக்க நான் காரணமாக இருந்தேன் என்ற ஆத்திரத்தில் விமர்சித்துக் கொண்டிருக்கிறார். தன்னை எதிர்க்க யாருமில்லை என்று இருந்தவரின் பிழைப்பை இந்தியா கூட்டணி கெடுத்துவிட்டது. எதிர்க்கட்சிகள் ஒன்று சேராது என்று கனவுலகத்தில் இருந்த மோடியின் தூக்கத்தை இந்தியா கூட்டணி கலைத்துவிட்டது.
தமிழுக்கும், தமிழினத்துக்கும், தமிழ்நாட்டுக்கும், விரோதமான கட்சியான பா.ஜ.க-விற்கு போடும் ஓட்டு, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு வைக்கும் வேட்டு! அதை மட்டும் மறந்துவிடாதீர்கள். மாநிலத்தைக் கெடுத்த அ.தி.மு.க, மாநிலத்தைக் கண்டுகொள்ளாத பா.ஜ.க இரண்டு பேரையும் ஒரு சேர வீழ்த்த வேண்டும். தமிழர்கள், பா.ஜ.க மாதிரி, அடக்க நினைப்பவர்களையும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், அ.தி.மு.க. மாதிரி, அடிமையாக இருப்பவர்களையும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். கடந்த இரண்டு தேர்தலில் நிரூபித்த மாதிரியே, இந்தத் தேர்தலிலும் காட்ட வேண்டும்" என்றார்.
from India News https://ift.tt/tXW2Q8c
0 Comments