`ஒரு ராஜ்ய சபா சீட்டுக்கு ஆயிரம் கோடி ரூபாய் பேரம்’ - ஜெகத்ரட்சகனை விவாதத்துக்கு அழைக்கும் பாமக பாலு

ரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதி பா.ம.க வேட்பாளராக அந்தக் கட்சியின் சமூகநீதி பேரவைத் தலைவரும், மூத்த வழக்கறிஞருமான கே.பாலு களமிறக்கப்பட்டிருக்கிறார். சென்னை உயர் நீதிமன்றத்தில் 28 ஆண்டுகளாக வழக்கறிஞராகப் பணிபுரிந்து வரும் பாலு, நூற்றுக்கும் மேற்பட்ட பொதுநல வழக்குகளையும் தாக்கல் செய்திருக்கிறார். தேசிய நெடுஞ்சாலைகளில் இருந்த டாஸ்மாக் கடைகளை அகற்றியதில் பாலுவின் பொதுநல வழக்கு முக்கியமானதாக பார்க்கப்பட்டது. ஆந்திராவில் 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கிலும் ஆந்திர மாநில உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து, குற்றச்சாட்டுக்குள்ளான அந்த மாநில போலீஸார்மீது வழக்கு பதிய காரணமாக இருந்தார். அது மட்டுமல்லாமல், சென்னை - சேலம் எட்டுவழிச் சாலை திட்டத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக பொதுநல வழக்குத் தொடர்ந்தது, ஒன்பதாம் வகுப்புப் பாட புத்தக்கத்தில் ‘நாடார்’ சமூகத்தை இழிவுபடுத்தியதை எதிர்த்து வழக்குத் தொடுத்து அவற்றை நீக்கியது என பல்வேறு சமூக போராட்டங்களையும் முன்னெடுத்தவர் பாலு. அதன் காரணமாகவே, பா.ம.க தலைமை அரக்கோணம் தொகுதியில் அவருக்கு ‘சீட்’ வழங்கியிருக்கிறது.

பா.ம.க வேட்பாளர் பாலு

ஆனாலும், மூன்று முறை அரக்கோணம் எம்.பி-யாக இருந்தவரும், நான்காவது முறையாக போட்டியிடுபவருமான தி.மு.க-வின் சிட்டிங் எம்.பி ஜெகத்ரட்சகனை எதிர்த்து போட்டியிடுகிறார் பா.ம.க-வின் பாலு. தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகனின் காட்பாடி சட்டமன்றத் தொகுதியும், இந்த அரக்கோணத்தில்தான் இடம் பெற்றிருக்கிறது.

காட்பாடியில் நடைபெற்ற அறிமுகக் கூட்டத்தில் பேசிய பா.ம.க வேட்பாளர் பாலு, ‘‘தி.மு.க வேட்பாளர் ஜெகத்ரட்சகன் அவரின் கட்சித் தலைவரிடம், என்னத் தெரியுமா பேசியிருக்கிறார்?. ‘வேண்டாம், வேண்டாம்... எனக்கு அரக்கோணம் வேண்டாம். நான் ஒருமுறைக்கூட அரக்கோணம் மக்களைப் பார்த்ததில்லை. எந்தவித தொடர்பும் அந்த தொகுதிக்கும், எனக்கும் கிடையாது. எந்த முகத்தோடு மீண்டும் அந்த ஊருக்குப் போய் ஓட்டு கேட்பேன். ஆயிரம் கோடி தருகிறேன். எனக்கு ஒரு ராஜ்ய சபா சீட் கொடுத்துவிடுங்கள்’ என்று கோரிக்கை வைத்திருக்கிறார். ஆனால், ‘நீங்கள்தான் போக வேண்டும். ஆயிரம் கோடி, இரண்டாயிரம் கோடி ரூபாய் செலவழிக்கிற ஒரே ஆள் நீங்கள்தான்’ என்று சொல்லி, மீண்டும் அரக்கோணத்துக்கே ஜெகத்ரட்சகனை அனுப்பி வைத்திருக்கிறது தி.மு.க தலைமை.

ஜெகத்ரட்சகன் கடந்த ஐந்து ஆண்டுகளில் நாடாளுமன்றத்தில் எத்தனை கேள்விகளை எழுப்பினார்?. கடந்த தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளில் எத்தனை நிறைவேற்றினார்?. பத்திரிகையாளர்கள் முன்பு நேருக்குநேர் விவாதம் நடத்த தயாராக இருக்கிறேன். ஜெகத்ரட்சகன் தயாராக இருக்கிறாரா?. அவருடைய சௌகரியமான தேதியில் நேரம் ஒதுக்கட்டும். அப்படி கொடுத்தால், என்னுடைய விவாதத்தை நடத்துகிறேன். மக்கள் மன்றத்தில் விடுவோம். அவர்கள் அளிக்கும் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் நான் ஏற்றுக்கொள்கிறேன்.

தி.மு.க வேட்பாளர் ஜெகத்ரட்சகன்

ஏழை, எளிய மக்களின் உரிமைகளுக்காக நாள்தோறும் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குப் போட்டு உங்களுக்காகப் போராடக் கூடிய ஒருவனாக வாழ்ந்துகொண்டிருக்கிறேன். அரக்கோணம் தொகுதி மக்களிடம் நான் கேட்கிற ஒரே கேள்வி என்னவென்றால், இந்த சமுதாயத்தையும், இளைஞர்களையும் சீரழிக்கின்ற மது என்ற அரக்கனை, அந்தத் தொழிற்சாலையை நடத்துகிற தொழிலதிபர் உங்களுக்கு வேண்டுமா, இந்தியா முழுவதும் 90,000 மதுக்கடைகளை மூடிய இந்த வழக்கறிஞர் வேண்டுமா? என்று உங்கள் மனசாட்சியிடமே விட்டுவிடுகிறேன்’’ என்றார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த பாலு, ‘‘தி.மு.க வேட்பாளர் ஜெகத்ரட்சகன் பெரும் சாராயத் தொழிலதிபர். மதுபான தொழிற்சாலைகளை வைத்திருப்பவர். பெரும் கோடிகளைச் சம்பாதித்தவர். இதுவரை மூன்று முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறார். இந்த முறை ஜெகத்ரட்சகனின் முகத்திரையைக் கிழித்தெறிவேன்’’ என்றார் காட்டமாக.



from India News https://ift.tt/nvsfzW9

Post a Comment

0 Comments