அனைவருக்கும் பசுமை வணக்கம்!
நாடாளுமன்றத் தேர்தல் திருவிழா தொடங்கிவிட்டது. ‘‘மேக்கேதாட்டூவில் அணை கட்டும் முயற்சிகள் தடுக்கப்படும்’’ தி.மு.க தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இதற்குப் பதில் அளிக்கும் வகையில் ‘‘மேக்கேதாட்டூ திட்டத்துக்கு ஆதரவாகத் தமிழ்நாடு பேசும் நல்ல காலம் விரைவில் வரும்” என்று கர்நாடக மாநில துணை முதலமைச்சரும் நீர்ப்பாசனத்துறை அமைச்சருமான டி.கே.சிவக்குமார் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாடு தன் உரிமையை நிலைநாட்டப் போராடி வருகிறது. ஆனால், வழக்கம்போல காவிரி நீரை வைத்து அடாவடி அரசியல் செய்யத் தொடங்கிவிட்டது காங்கிரஸ் கட்சி ஆளும் கர்நாடகா. இத்தனைக்கும் காங்கிரஸ் கட்சியின் இந்தியா கூட்டணியில்தான், திமுகவும் இணைந்துள்ளது.
இரண்டு மாநிலங்களின் தண்ணீர் பிரச்னையைத் தீர்க்க முடியாத காங்கிரஸ் கட்சிதான், ‘நாட்டை ஆள எங்களுக்கு வாக்கு அளியுங்கள்’ என்று வாசலில் வந்து நிற்கிறது. கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியிலிருந்த பி.ஜே.பியும், காவிரி நீர் விஷயத்தில் கர்நாடகாவுக்குத்தான் ஆதரவாக இருந்து வந்தது.
‘காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்ததுபோல’ இந்தச் சமயத்தில் பெங்களூரு நகரத்தில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது என்று புதிய பிரச்னையைக் கிளப்பியுள்ளார்கள். ‘‘பெங்களூருவில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடி வருகிறது. மேக்கேதாட்டூவில் அணைகட்டினால்தான், இந்த பிரச்னை தீரும். மக்களே ஒன்று கூடுங்கள். நம்ம நீரு, நம்ம ஹக்கு (நம் நீர், நம் உரிமை)’’ என்று ஆளும் காங்கிரஸ் கட்சி, மக்களை உணர்வுபூர்வமாகத் தூண்டிவிட்டு, வாக்கு அறுவடைச் செய்யத் துடிக்கிறது.
‘‘பெங்களூரு தண்ணீர் பஞ்சம் என்பது, மேக்கேதாட்டூ அணையை மையப்படுத்தி அரசியல் ஆதாயம் தேடுவதற்காக காங்கிரஸ் கட்சியால் செயற்கையாக உருவாக்கப்பட்டது’’ என்று தமிழ்நாட்டில் உள்ள விவசாய அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவிக்கின்றன.
இதை, மெய்ப்பிக்கும் விதமாகப் பெங்களூரு குடிநீர் வழங்கல் வாரியத்தின் தலைவர் ராம்பிரசாத் மனோகர், ‘‘வரும் ஜூலை மாதம் வரை நகரில் விநியோகிக்கப் போதுமான தண்ணீர் உள்ளது. எனவே, மக்கள் அச்சப்படத் தேவையில்லை’’ என்று உண்மையை உடைத்திருக்கிறார்.
ம்... இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் இப்படி கேவலமான அரசியலை முன்னெடுப்பார்களோ?!
-ஆசிரியர்
from India News https://ift.tt/FagqZPN
0 Comments