பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள நேற்று தமிழகம் வந்த பிரதமர் மோடி, திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பின்னர் மதுரைக்கு ஹெலிகாப்டர் மூலம் மாலை வந்தார்.
மதுரை வீரபாஞ்சான் பகுதியில் அமைந்துள்ள டிவிஎஸ் லட்சுமி பள்ளியில் நடைபெற்ற சிறுகுறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான டிஜிட்டல் செயலாக்க திட்ட கருத்தரங்கில் கலந்துகொண்டார்.
பின்பு அங்கிருந்து கிளம்பி மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு தமிழரின் பாரம்பரிய உடையில் வருகை தந்தார்.
கோயிலில் பிரதமருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது, அறங்காவலர் குழுத் தலைவர் ருக்மணி பழனிவேல்ராசன் வரவேற்பு அளித்தார். இதனை தொடர்ந்து அஷ்டசக்தி மண்டபம் வழியாக மீனாட்சியம்மன் சந்நிதிக்கு சென்று வழிபாடு நடத்தினார். பின்னர், சுந்தரேஸ்வரர் சந்நிதியில் தரிசனம் செய்தார். பொற்றாமரை குளத்தை பார்வையிட்டு வணங்கினார்.
சுவாமி தரிசனம் முடிந்து கோயிலிலிருந்து வாகனத்தில் புறப்பட்டவர் கிழக்கு கோபுர வாசல் அருகே நின்றுகொண்டிருந்த பொதுமக்களை பார்த்து கையசைத்து கும்பிட்டபடி சென்றார்.
இதனைத்தொடர்ந்து சாலையோரத்தில் நின்ற பொதுமக்களை பார்த்து கையசைத்தபடி சென்றார் பிரதமர். 2021 ஆம் ஆண்டு பிரதமர் மோடி மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்த நிலையில் இரண்டாவது முறையாக தரிசனம் செய்துள்ளார்.
இரவு பசுமலையில் உள்ள தாஜ் ஹோட்டலில் தங்கினார். 'மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பிரார்த்தனை செய்ததை பாக்கியமாக உணர்கிறேன்' என பிரதமர் மோடி, சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக மீனாட்சி அம்மன் கோயிலுக்கு அம்மன் சன்னதி வாசல் வழியாக பிரதமர் மோடி வந்துகொண்டிருந்தபோது அவரை வரவேற்க மதுரை ஆதீனம் நின்றுகொண்டிருந்தார். மடத்தின் முன்பாக பொதுமக்களுடன் மதுரை ஆதீனம் நின்றுகொண்டிருந்தார். பிரதமரின் வாகனம் முன்னே செல்லும் போது அவரால் பாதுகாப்பு கெடுபிடிகளால் முன் செல்ல முடியவில்லை. எனினும் பிரதமர் மோடி அவரை பார்த்ததும் வாகனத்தை நிறுத்தி மதுரை ஆதீனத்தை அழைத்தார். பிரதமர் அழைத்ததை கவனிக்காத பாதுகாப்பு அதிகாரிகள் அவரை முன் நகரவிடாமல் தொடர்ந்து தடுத்தனர். பின்னர் பிரதமர் மோடி அழைத்ததை சொன்ன பிறகு தான் அனுமதிதனர். காருக்கு அருகில் சென்று பிரதமர் மோடிக்கு, மதுரை ஆதீனம் பொன்னாடை அணிவித்தார். பின்னர், அங்கிருந்து மோடி புறப்பட்டுச் சென்றார்.
இதன் பின்னர் பிரதமர் மோடியுடனான சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மதுரை ஆதீனம், "பிரதமர் மோடியை சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. கச்சத்தீவு மீட்க வேண்டும், இலங்கையில் தமிழர்களுக்கு தனி நாடு உருவாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளேன். 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றிப் பெற்று மீண்டும் மோடி பிரதமர் ஆவார். மோடி மீண்டும் பிரதமராக என்னுடைய ஆதரவும், ஆசீர்வாதமும் என்றென்றும் உண்டு" என்றார். பிரதமர் மோடியின் வருகையால் மதுரையே பரபரப்பாக காணப்பட்டது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/47zomWY
from India News https://ift.tt/rH7keBs
0 Comments