பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் `என் மண், என் மக்கள்' யாத்திரையின் நிறைவு விழா மாநாடு திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த மாதப்பூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பேசினார். பிரதமர் மோடி, "இந்தியாவின் ஜவுளித் தொழிலுக்கான முக்கிய இடமாக கொங்கு பகுதி விளங்கி வருகிறது. கொங்கு பகுதியில் உள்ள தொழில் முனைவோர் மற்றும் சிறு, குறு தொழில் நிறுவனங்களின் பங்களிப்பு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பங்கு வகித்து வருகிறது. இவ்வளவு பெரிய மக்கள் கூட்டத்தைப் பார்க்கும்போது, தமிழகம் தேசியத்தின் பக்கம்தான் நின்று கொண்டிருக்கிறது என்பதை உணர்த்துகிறது.
அண்ணாமலையின் இந்த யாத்திரை மூலம் பாஜக-வுக்கும், தமிழ் மண்ணுக்கும், மக்களுக்கும் இடையே உள்ள பிணைப்பு மேலும் அதிகரித்துள்ளது. என் மண் என் மக்கள் என்ற யாத்திரை வெறும் யாத்திரையாக மட்டும் நடக்கவில்லை. அனைவருக்கும் அனைத்தும் என்ற நம்பிக்கையை வீடுவீடாக கொண்டு சேர்த்துள்ளார் அண்ணாமலை. தமிழ்நாடும், தமிழர்களின் பண்பாடும் எனது மனதுக்கு மிகவும் நெருக்கமானது. எனவேதான் எனது நாடாளுமன்றத் தொகுதியில் காசி தமிழ் சங்கமத்தை நடத்தினேன்.
தமிழர்களின் பண்பாட்டின் அடையாளமாக நாடாளுமன்றத்தில் செங்கோல் வைக்கப்பட்டுள்ளது. 1991-இல் கன்னியாகுமரி முதல் காஷ்மீரின் லால் செளக் வரை நடைபெற்ற ஏக் யாத்திரையின் நிறைவில் அங்கே தேசியக் கொடி ஏற்ற வேண்டும், ஜம்மு காஷ்மீருக்கான 370 சட்டத்தை நீக்க வேண்டும் என நினைத்தேன். அதைப் போலவே 370 சட்டத்தை ரத்து செய்து குப்பையில் வீசியாகிட்டது. இது மிகப் பெரிய சாதனை.
தமிழ்நாட்டில் பாஜக ஆட்சியில் இருந்தது இல்லை, ஆனால், எனது இதயத்தில் தமிழ்நாடு உள்ளது. தமிழ்நாட்டைக் கொள்ளையடித்துக் கொண்டிருக்கும் கொள்ளையர்களால் பாஜக-வின் வளர்ச்சியைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அதனால்தான் பாஜக மீது மிகப் பெரிய பொய்யை அடுக்கி வருகின்றனர். ஆனால், தமிழக மக்கள் மிகவும் புத்திசாலிகள் என்பதை நிரூபித்துள்ளார்கள்.
அதன் காரணமாகத்தான் தமிழக மக்களுக்கு பாஜக மீது நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. 2004 முதல் 2014 வரை மத்தியில் காங்கிரஸ், திமுக கூட்டணி அரசு இருந்ததை விட பாஜக ஆண்டுள்ள கடைசி பத்தாண்டுகளில் மூன்று மடங்கு வளர்ச்சித் திட்டங்களை கொடுத்துள்ளோம். 2004-2014 ஆண்டுகளில் மத்திய அரசின் கூட்டணியில் இருந்த திமுக சொல்லிக் கொள்ளும்படியாக எந்த திட்டத்தை தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்தார்கள்?
நான் உத்தரவாதம் அளித்ததுபோல், பாஜக-வின் 10 ஆண்டுகளில் நாட்டில் ஏழைகள் குறைந்துள்ளனர். தமிழகத்தில் 3.50 கோடி மக்களுக்கு இலவச அரிசி, 40 லட்சம் பெண்களுக்கு இலவச கேஸ் இணைப்பு, 6 லட்சம் வீடுகள் கட்டிக் கொடுத்துள்ளேன். தமிழ்நாட்டுக்கு வந்தபோது என் நினைவுக்கு முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். நினைவுக்கு வந்தார். தமிழ்நாட்டில் நல்ல கல்வி, சுகாதாரம் அவரது ஆட்சியில் கொடுக்கப்பட்டது.
அதனால்தான் எவ்வளவு காலம் ஆனாலும் தமிழக மக்கள் எம்ஜிஆரை புகழ்கின்றனர். அவர் திறமையின் அடிப்படையில் ஆட்சிக்கு வந்தவர். எம்ஜிஆரு-க்குப் பிறகு அவரது வழியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிறந்த ஆட்சியைக் கொடுத்தார். ஜெயலலிதாவுடன் பல காலம் நான் நெருங்கிப் பழகியுள்ளேன். மக்களுக்காவும், அவர்களின் நலனைச் சிந்தித்தே வாழ்ந்தார் ஜெயலலிதா.
இந்தியா கூட்டணி தமிழகத்துக்குள் நுழைந்தால் வளர்ச்சி வராது. பாதுகாப்பு உபகரணங்கள் தயாரிக்க லஞ்சம் வாங்கிய காங்கிரஸ் அரசு, லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க காங்கிரஸ் அனுமதிக்குமா... ஜவுளித் தொழில் மூலம் 2 லட்சம் கோடி ரூபாய்... இதெல்லாம் காங்கிரஸ் கட்சியில் சாத்தியமாகுமா... நான் உழைத்துக் கொண்டு வருவதால் என் மீது எதிர்க்கட்சிகள் கோபத்தில் உள்ளனர்.
புதிய பாரதத்தை உருவாக்க வேண்டும் என்ற முயற்சியில் இறங்கி உள்ளோம். விவசாயம், மீன் வளம் மற்றும் பெண்களுக்கான திட்டத்தில் மத்திய அரசு அதிக கவனம் செலுத்துகிறது. ஆனால், மத்திய அரசு மீது எதிர்க்கட்சிகள் போலியான பிம்பத்தை உருவாக்கி வருகின்றனர். ஆனால், தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் கொள்ளையடிப்பதற்காக கூட்டணியை உருவாக்கி வருகின்றனர். அந்த கொள்ளையடிக்கும் கடையை பூட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது.
இந்தியா கூட்டணியின் உண்மை முகம் டெல்லியில் தெரிந்துவிட்டது. ஆனால், தமிழகத்தில் மட்டும் இந்தக் கூட்டணி மக்களை ஏமாற்றி வருகிறது. இந்த யாத்திரை மூலம் அதற்கான பூட்டு கிடைத்துள்ளது. மூன்றாவது முறையாக பாஜக ஆட்சிக்கு வரும். தொண்டர்கள் வீடுவீடாக சென்று மத்திய அரசின் திட்டங்களை கொண்டு சேர்க்க வேண்டும். இளைஞர்களுக்கு வேலைக்காகவும், நாட்டின் பாதுகாப்புக்காவும் நான் உத்தரவாதம் அளிக்கிறேன்” என்றார் பிரதமர் நரேந்திர மோடி.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/47zomWYோடி
from India News https://ift.tt/epXIyP4
0 Comments