டி.ஜெயக்குமார், முன்னாள் அமைச்சர், அ.தி.மு.க
“உண்மையைச் சொல்லியிருக்கிறார். அ.தி.மு.க ஆட்சியில் குண்டர்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படுவார்கள். காவல்துறை முழுச் சுதந்திரமாகச் செயல்படும். ஆனால், தி.மு.க ஆட்சிப் பொறுப்புக்கு வரும் சமயத்திலெல்லாம் குண்டர்கள் அராஜகம் அதிகரிக்கிறது. மதுரையில் துணை மேயரையே வீடு புகுந்து கொல்ல முயன்றிருக்கிறார்கள். ஆளுங்கட்சி வட்டச் செயலாளரை வெட்டிக் கொன்றிருக்கிறார்கள். சிவகங்கையில் நள்ளிரவில் உறங்கிக்கொண்டிருந்த ஐந்து பேரை வீடு புகுந்து கொடூரமாக வெட்டியிருக்கிறார்கள். இப்படித் தமிழகம் முழுவதும் பல்வேறு கொலைக் குற்றச் சம்பவங்கள் அதிகரித்துக்கொண்டேயிருக்கின்றன. விழுப்புரத்தில் கஞ்சா போதையில் மாணவர்கள் நடுரோட்டில் சண்டை போடுகிறார்கள். வடலூரில் ரௌடிகள் காவலரை விரட்டிய டிக்கிறார்கள். தி.மு.க ஆட்சியில் மக்களைப் பாதுகாக்க வேண்டிய காவலர்களுக்கே பாதுகாப்பில்லை. இதனால் குற்றவாளிகளுக்குக் காவல்துறையினர்மீது துளியளவும் பயமில்லை. தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. சட்டம்-ஒழுங்கைக் கையில் வைத்திருக்கும் முதல்வரோ இவையனைத்தையும் வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கிறார். தி.மு.க ஆட்சியில் மக்களிடையே அச்ச உணர்வு அதிகரித்திருக்கிறது. ஸ்டாலினின் ஆட்சிக்காலம் தமிழகத்தின் இருண்ட காலம்.
”பழ.செல்வகுமார், மாநிலத் துணைச் செயலாளர், தி.மு.க
“சட்டம்-ஒழுங்கு குறித்துப் பேசுவதற்கு அ.தி.மு.க-வினருக்கு எந்த அருகதையும் இல்லை. அதிலும், எடப்பாடிக்குத் துளியளவு அருகதைகூட இல்லை. தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச்சூடு தொடங்கி, ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் நடந்த கொலை, கொள்ளை வரை அவரது ஆட்சிக்கால அட்டூழியங்களை தமிழக மக்கள் மறந்துவிட்டார்கள் என நினைக்கிறாரா... போலீஸை வைத்தே சட்டம்-ஒழுங்கைக் கெடுத்தவர்கள் அ.தி.மு.க ஆட்சியாளர்கள் என்பதற்கு வாச்சாத்தி சம்பவம் தொடங்கி அமைதியான ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை வன்முறையாக்கிய சம்பவம் வரை பல உதாரணங்கள் இருக்கின்றன. தமிழகத்தில் போதைப் புழக்கம் இவ்வளவு அதிகரித்ததற்குக் காரணமே அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்களும், போலீஸ் உயரதிகாரிகளும்தானே... இந்த ஆட்சியில் தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது பாரபட்சமின்றி, கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப் படுகின்றன. அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் நிகழ்ந்த கொலை, கொள்ளை, வழிப்பறி, சாதிய மோதல் உள்ளிட்ட புள்ளிவிவரங்களைக் கருத்தில்கொண்டால் தற்போதைய அரசில் குற்றங்களின் எண்ணிக்கை பெருமளவு கட்டுப்படுத்தப் பட்டிருக்கிறது. எனவே, சட்டம்-ஒழுங்கை போஸ்ட்மார்ட்டம் செய்து புதைத்த பழனிசாமி அளந்துவிடும் கதைகளைத் தமிழக மக்கள் ஒருபோதும் காதில் வாங்கிக்கொள்ள மாட்டார்கள்.
from India News https://ift.tt/830FLUX
0 Comments