`துரோகம் செய்த எடப்பாடி பழனிசாமி, துரோகத்தாலேயே அழிவார்!' - டி.டி.வி.தினகரன் காட்டம்

புதுக்கோட்டையில் கட்சி நிகழ்வில் கலந்துகொள்ள வந்த டி.டி.வி.தினகரன், பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ``எம்.ஜி.ஆர் தொடங்கிய கட்சியை, ஜெயலலிதா வளர்த்த கட்சியை எடப்பாடி பழனிசாமி கபளீகரம் செய்துவிட்டார். நீதிமன்றம் அவருக்குச் சாதகமாகத் தீர்ப்பு வழங்கலாம். நீதிமன்றத்துக்கு சாட்சிகள்தான் முக்கியம். ஆனால், மனசாட்சி... ஆளும் தி.மு.க-வும், ஆண்ட எடப்பாடி பழனிசாமியும் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. அதனால்தான், இவர்களுக்கு மாற்று சக்தியாக அ.ம.மு.க-வை மக்கள் உணரத் தொடங்கிவிட்டார்கள். காங்கிரஸ் கட்சிக்கு எதிரானவர்கள் எல்லாம் காங்கிரஸுடன் கூட்டணி அமைத்தார்கள். பிறகு, விலகிச் செல்கிறார்கள். முரண்பாடுகளின் மொத்த உருவம் இந்தியா கூட்டணி. இந்தியா கூட்டணியில் கடைசியாக ஸ்டாலின் மட்டும்தான் இருப்பார்போல. கத்தியை எடுத்தவர்கள் கத்தியால் சாவார்கள் என்பதைப்போல, துரோகம் செய்த எடப்பாடி பழனிசாமி, துரோகத்தாலேயே அழிவார். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி முதல்வரானபோது, 21 எம்.எல்.ஏ-க்கள் ஆளுநரைச் சந்தித்து அவர்மீது நம்பிக்கையில்லை, வேறு முதல்வரைத் தேர்வு செய்ய வேண்டும் எனக் கேட்டார்கள்.

டி.டி.வி.தினகரன்

அப்போது பழனிசாமிக்கு ஆதரவாக இருந்தவர்கள் (பா.ஜ.க), இப்போது பழனிசாமியைப் பற்றி உணர்ந்து கொண்டார்கள். மக்களவைத் தேர்தலுக்கான கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. நாட்டின் பிரதமரைத் தேர்வு செய்யும் கூட்டணியில் அ.ம.மு.க இடம்பெறும். இந்தியாவின் அடுத்த பிரதமரை தேர்ந்தெடுக்கும் மிக முக்கியப் பொறுப்பில் அ.ம.மு.க இருக்கும். 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க வெற்றி பெறும் என்று எடப்பாடி பழனிசாமி பகல் கனவு காண்கிறார். ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து கடைசியில் தன்னைப் பாதுகாத்தவரையும் கடித்துவிட்டார். அதேபோல், பழனிசாமிக்கு எல்லாம் நாங்கள் தாத்தா என்பதுபோல் முதல்வர் ஸ்டாலின் செயல்பாடு உள்ளது. தமிழ்நாட்டில் போதை கலாசாரம் தலைவிரித்தாடுகிறது. அதனால் சட்டம் ஒழுங்கும் கெடுகிறது. எனவே, சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட மாநில அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இதுவரை வெளிநாடுகளுக்குச் சென்றதால் என்ன முதலீட்டைக் கொண்டு வந்தார்கள் எனத் தெரியவில்லை. இப்போது சென்றுள்ள பயணத்திலாவது நிறைய பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் முதலீட்டைக் கொண்டு வர வேண்டும் என விரும்புகிறேன். கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால், அதனைத் திறப்பதற்கு முன்பாக மக்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்துக் கொடுத்துவிட்டு திறந்திருக்க வேண்டும்" என்றார்.



from India News https://ift.tt/QoxbDjh

Post a Comment

0 Comments