``காங்கிரஸை தீண்டத்தகாத கட்சியாக நினைக்கிறது திமுக!” - புதுச்சேரி அதிமுக தாக்கு

புதுச்சேரி காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்ற மகாத்மா காந்தி அவர்களின் நினைவு தினத்தில் பேசிய எம்.பி வைத்திலிங்கம், ``பா.ஜ.க-வும், என்.ஆர்.காங்கிரஸாரும் அ.தி.மு.க-வை எதிர்க்கிறார்களா அல்லது அவர்களின் `பி’ டீமாக செயல்படுகிறார்களா என்று தெரியவில்லை. புதுச்சேரி அ.தி.மு.க-வை பொறுத்தவரை, முதல்வர் ரங்கசாமி கைகாட்டுபவர்களைத்தான் வேட்பாளர்களாக நிறுத்துகின்றனர். அ.தி.மு.க-வுக்கு போடும் வாக்கு என்பது, உண்மையில் பா.ஜ.க-வுக்கு போடும் வாக்குகள். `இந்தியா’ கூட்டணி உடைந்துவிட்டது என்று கூறும் அ.தி.மு.க-தான் சிதறிக் கிடக்கிறது.

`இந்தியா கூட்டணி...

கட்சியின் சின்னத்திற்கும், கொடிக்கும் அவர்கள் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள்” என்று அ.தி.மு.க-வை கடுமையாக விமர்சித்திருந்தார். இந்த நிலையில் இன்று உப்பளம் அ.தி.மு.க அலுவலகத்தில் நடைபெற்ற கழக செயலாளர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் மாநில செயலாளர் அன்பழகன், ``மகாத்மா காந்தி  நினைவு  நாளில்  மௌன அஞ்சலி செலுத்த வேண்டிய காங்கிரஸ் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வைத்திலிங்கம் அவர்கள், நாடாளுமன்றத் தேர்தல் தோல்வி பயத்தில் தான் யார் என்பதையே மறந்துவிட்டார்.

அத்துடன் தனது கட்சியின் தன்மானம் என்ன, நாடு முழுவதும்  தனது கட்சியின் நிலைப்பாடு என்ன என்பதைப் பற்றியெல்லாம் துளிகூட புரிந்து கொள்ளாமல், அ.தி.மு.க-வைப் பற்றி அவறூறாக பேசியுள்ளது கண்டிக்கத்தக்கது. தேசிய அளவில் இந்தியா கூட்டணி என்று ஒன்று உள்ளதா?  தி.மு.க-வின் செயல்படாத தன்மையை மக்கள் மத்தியில் திசை திருப்புவதற்காக, பல்வேறு கொள்கை முரண்பாடுகளைக் கொண்ட கட்சிகளை இணைத்து  இந்தியா கூட்டணி என்ற பெயரில் ஒரு மாயக் கூட்டணியை உருவாக்கியிருக்கின்றனர்.

அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் - காங்கிரஸ் எம்.பி வைத்திலிங்கம்

மேற்கு வங்காளத்திலும், உத்தரப்பிரதேசத்திலும் தலைவர்கள் இந்தியா கூட்டணியிலிருந்து விலகி உள்ளனர். பஞ்சாப்பில் சட்டமன்ற தேர்தலில் தனியாக போட்டியிடுவோம் என கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். அந்தளவிற்கு இந்தியா கூட்டணியில் உள்ள பல்வேறு கட்சிகள்  காங்கிரஸ் கட்சியையும், தி.மு.க-வையும் வெறுத்து கூட்டணியிலிருந்து வெளியேறி விட்டனர்.

நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க மற்றும் என்.ஆர்.காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து நாங்கள் போட்டியிட்டோம். அதனடிப்படையில்தான் கடந்த இரண்டு ஆண்டுகளாக அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டை  எடுத்துவந்தோம். இருப்பினும் அரசின் தவறுகளை பல்வேறு போராட்டங்களின் மூலம் தடுத்து நிறுத்தியுள்ளோம். தற்போது எங்களது கட்சியின் மறைந்த தலைவர்களைப் பற்றி பா.ஜ.க தற்குறித்தனமாக விமர்சனம் செய்தது. அதனால் பா.ஜ.க-வுடன் கூட்டணி இல்லை என்று அறிவித்தார் எங்கள் கழகத்தின் பொதுச் செயலாளர் எடப்பாடி அவர்கள்.

முதல்வர் ரங்கசாமி

அதனடிப்படையில் நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க-வுக்கு எதிராக களம் இறங்க உள்ளது அ.தி.மு.க. காங்கிரஸ் கட்சியின் நிலைமை என்ன என்பதை வைத்திலிங்கம் அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். தங்கள் கட்சியின் தலைவரான மறைந்த ராஜீவ் காந்தி அவர்களின் கொலையில் பங்கிருப்பதாக, காங்கிரஸால் குற்றம்சுமத்தப்பட்ட கட்சி தி.மு.க. அப்படி இருக்க எந்த கொள்கை அடிப்படையில், காங்கிரஸ் தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்துள்ளது?

கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியை, ஒரு தீண்டத்தகாத கட்சியாக நினைத்துப் பேசி வருகின்றனர் தி.மு.க-வினர். `செல்வாக்கை இழந்த காங்கிரஸ் அரசியல் செய்வது கிடையாது. சீட்டுக்காக எங்களிடம் அறிவாலயத்தில் கையேந்திக் கொண்டு நிற்கின்றனர்’ என தி.மு.க-வின் அமைச்சர் திரு.கண்ணப்பன் அவர்கள், புதுச்சேரி பொதுக்கூட்டத்தில் பகிரங்கமாகப் பேசினார். அதை கண்டிப்பதற்குக்கூட புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் முன் வராதது ஏன்?

10 நாள்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி அவர்களை, பல்வேறு  பட்டப் பெயர்களை சூட்டி  தி.மு.க-வின் தொண்டர்கள் முதல் அமைப்பாளர் வரை வசை பாடினார்கள். அப்போது வைத்திலிங்கம் ஏன் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை? புதுச்சேரியில் உங்கள் கட்சியில் உள்ள இரண்டு எம்.எல்.ஏ-க்களும் காங்கிரஸ் கட்சியில் தான் இருக்கிறார்களா அல்லது முதலமைச்சர் ரங்கசாமியின் அரவணைப்பில் இருக்கிறார்களா  என்பதை, முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி அவர்களிடம் வைத்திலிங்கம் அவர்கள் கேட்டு தெரிந்து கொள்வது நல்லது” என்றார்.



from India News https://ift.tt/2WJBZht

Post a Comment

0 Comments