இந்தியாவிலிருந்து மிக அருகில் இருக்கும் சுற்றுலாத் தலமாக, மாலத்தீவு கருதப்படுகிறது. இந்த நிலையில், சமீபத்தில், பிரதமர் மோடி இரண்டு நாள்கள் பயணமாக லட்சத்தீவுக்குச் சென்றுவந்தார். தனது லட்சத்தீவு பயணம் குறித்த அனுபவங்களை ட்விட்டர் எக்ஸ் தளத்தில் பகிர்ந்த பிரதமர், லட்சத்தீவு பயணத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும், வீடியோவையும் பகிர்ந்திருந்தார்.
அந்தப் புகைப்படங்களும், வீடியோ பதிவுகளும் சமூக வலைதளங்களில் வைரலாகின. மோடியின் பயணத்தைத் தொடர்ந்து, கூகுளில் அதிகம் `லட்சத்தீவு' குறித்துத் தேடப்பட்டது. இதற்கிடையில், மாலத்தீவு நாட்டின் அமைச்சர்கள் பிரதமர் மோடியை, ‘மாலத்தீவுக்கு மாற்றாக இந்தியாவின் லட்சத்தீவை மிகப்பெரிய சுற்றுலாத் தலமாக மாற்றுவதற்குப் பிரதமர் மோடி முயல்கிறார்.
மாலத்தீவை இந்தியா குறிவைக்கிறது', `இஸ்ரேலின் ஊதுகுழல்' என விமர்சித்து கருத்துகள் தெரிவித்தனர். இதனால் இரு நாடுகளுக்கிடையே சர்ச்சை வெடித்தது.
அதைத் தொடர்ந்து, சர்ச்சையான கருத்துகளைத் தெரிவித்த மூன்று அமைச்சர்களையும் மாலத்தீவு அரசு இடைநீக்கம் செய்தது. அதே நேரம், சீனா சென்ற மாலத்தீவு அதிபர் முகமது முய்ஸு,``சீனா எங்களின் நெருங்கிய நட்பு நாடு. எங்களின் வளர்ச்சி பங்காளிகளில் ஒன்று.
சீனா, மாலத்தீவின் சுற்றுலா வணிகத்தில் கொரோனாவுக்கு முன்பு வரை முதலிடத்திலிருந்தது. அதைத் தொடர வேண்டும்" எனக் கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த நிலையில் தான் தற்போது மாலத்தீவை நோக்கி சீனாவின் உளவுக் கப்பல் வந்துகொண்டிருப்பதாக IOR (Indian Ocean Region) தகவல் தெரிவித்திருக்கிறது. இது குறித்து வெளியான தகவலில்,``சீன உளவுக் கப்பல், 'ஆராய்ச்சி'க் கப்பல் என்ற பெயரில் மாலத்தீவுக்குச் சென்றுகொண்டிருக்கிறது.
Xiang Yang Hong 03 என்ற இந்தக் கப்பல் தற்போது இந்தோனேசியாவின் கடலில் பயணிப்பதை மரைன் டிராக்கர் செயலி காட்டுகிறது. பிப்ரவரி 8-ம் தேதி மாலத்தீவுக்கு வரவிருக்கிறது." எனக் குறிப்பிட்டிருக்கிறது. ஆனால், இந்தக் கப்பல் குறித்து முன்னணி புவியியல் நிபுணர் டேமியன் சைமன்,``Xiang Yang Hong 03 என்ற இந்தக் கப்பல் 2019 - 2020 காலகட்டத்தில் நீர்நிலைகளை ஆய்வு செய்தது.
4,300 டன் எடையுள்ள இந்தக் கப்பல், இந்தியப் பெருங்கடலை ஆய்வு செய்யும் ஒரு 'ஆராய்ச்சி' கப்பலாக வகைப்படுத்தப்பட்டிருக்கிறது. இது போன்ற ஆராய்ச்சி மூலம், நீருக்கடியில் நிலநடுக்கம் போன்ற இயற்கைப் பேரழிவுகள் குறித்த தரவுகளைச் சேகரித்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவுகிறது. மேலும், கடலின் தரையை மேப்பிங் செய்யும். இதனால், எதிர்காலத்தில் நீர்மூழ்கிக் கப்பல்கள், நீரில் மூழ்கக்கூடிய ட்ரோன்களைப் பயன்படுத்தச் சீனாவுக்கு உதவுகிறது" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
from India News https://ift.tt/1G2yFKW
0 Comments