ஜனவரி 23-ல் அமைச்சரவை கூட்டம்... பிப்ரவரியில் சட்டசபை கூட்டத் தொடர் - பரபரக்கும் கோட்டை!

ஜனவரி மாதம் 23-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. இதில் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் சட்டப்பேரவை கூட்டத்தொடருக்கு ஆயத்தமாவது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படஇருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய கோட்டை வட்டார அதிகாரிகள், "முதல்வர் ஸ்டாலின் தலைமையில் வரும் 23-ம் தேதி காலை 11 மணிக்கு அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. அனைத்து அமைச்சர்களுக்கும் இதற்கான அழைப்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இந்த கூட்டத்தில் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் சட்டசபை கூட்டத்தொடர் குறித்தான விவாதம் பிரதானமாக இருக்கும். அதாவது ஒவ்வொரு ஆண்டும் கவர்னரின் உரையுடன் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் தொடங்கும்.

முதல்வர் ஸ்டாலின்

அந்தவகையில் கடந்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் ஜனவரி 9-ம் தேதி தொடங்கியது. அதில் உரையாற்றிய ஆளுநர் ரவி, ' 'திராவிட மாடல்', 'தமிழ்நாடு' போன்ற வார்த்தைகளை தவிர்த்து விட்டதாக சர்ச்சை வெடித்தது. பின்னர் ஆளுநர், தமிழக அரசுக்கு இடையேயான மோதல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. எனவேதான் இந்த விவகாரத்தை கவனமாக கையாளும் வகையில் இந்தமுறை கவர்னர் உரையில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது. இதன் அடிப்படையில் உரை தயாரிக்கப்பட்டு ஆளுநர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்படும்.

மேலும் முதல்வர் வெளிநாடு செல்லும்போது தமிழகத்தில் தொழில் தொடங்க சில தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. அந்த நிறுவனங்கள் குறித்தும், அதற்கு அனுமதி அளிப்பது குறித்தும் முடிவு எடுக்கப்படும். இதேபோல் தமிழக அரசு விரைவில் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய இருக்கிறது. அதற்கு தேவையான தரவுகளை தயாரிக்கும் வேலைகள் தலைமை செயலகத்தில் தீவிரமாக நடந்து வருகிறது. எனவே அதன் தற்போதைய நிலை குறித்து துறை ரீதியாக முதல்வர் கேட்டறிவார்.

ஆளுநர் ரவி

மேலும் ஒவ்வொரு துறையிலும் புதிதாக முன்னெடுக்கப்பட வேண்டிய திட்டங்கள் குறித்தும், அதற்கான நிதி ஆதாரங்கள் குறித்தும் விவாதிக்கப்படும். பின்னர் 28ம் தேதி வெளிநாடு செல்லும் முதல்வர் ஸ்டாலின், பிப்ரவரி முதல்வாரம் சென்னை திரும்புவார். பிறகு அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் பிப்ரவரி 2வது வாரத்தில் சட்டசபை கூட்டத்தொடர் கூட்டப்படும். இந்தமுறை முதல்வரின் வெளிநாட்டு பயணம், தி.மு.க இளைஞரணி கூட்டம், பிரதமர் மோடி தமிழகம் வருகை உள்ளிட்ட காரணங்களினால் தாமதமாக சட்டசபை கூடுவது குறிப்பிடத்தக்கது" என்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/47zomWY



from India News https://ift.tt/paG8SQR

Post a Comment

0 Comments