ராமர் கோயில் விவகாரத்தில் உதயநிதியை டார்கெட் செய்யும் பாஜக - திமுக ரியாக்‌ஷன் என்ன?!

`நாங்கள் மதத்துக்கு எதிரானவர்கள் கிடையாது!’

திமுக இளைஞரணி 2-வது மாநில மாநாடு வரும் ஜனவரி 21-ம் தேதி சேலத்தில் நடைபெறவுள்ளது. மாநாடு நடைபெறுவதை ஒட்டி அமைச்சரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் சென்னை அண்ணா சாலை சிம்சன் சந்திப்பிலிருந்து சுடர் ஓட்டத்தைத் தொடங்கிவைத்தார். இந்த நிகழ்வுக்குப் பிறகு பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர், "அடுத்த இரண்டு தினங்களுக்கு இந்த சுடர் ஓட்டம் 316 கிலோ மீட்டர் பயணித்து சேலம் கொண்டு செல்லப்படும். இனி இந்திய வரலாற்றில் இப்படி ஒரு மாநாடு நடத்த முடியாது என்பதைக் காண்பிக்க வேண்டும்" என்று பேசினார்.

அமைச்சர் உதயநிதி

அப்போது பத்திரிகையாளர்கள் ராமர் கோயில் திறப்பு குறித்து அவரிடம் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்துப் பேசிய உதயநிதி, "நாங்கள் எந்த மதத்துக்கும், நம்பிக்கைக்கும் எதிரானவர்கள் கிடையாது என்று கலைஞர் ஏற்கனவே சொல்லியிருக்கிறார். அயோத்தியில் ராமர் கோயில் வருவது எங்களுக்குப் பிரச்னை கிடையாது. ஆனால், அங்குள்ள மசூதியை இடித்து விட்டு கோயில் கட்டியது எங்களுக்கு உடன்பாடு இல்லை. திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு சொன்னதுபோல, ஆன்மிகத்தையும், அரசியலையும் ஒன்றாக்க வேண்டாம்" என்று பேசியிருந்தார்.

`பிற்போக்குத்தனமாக இருக்கிறது திமுக!’

இந்த விவகாரம் குறித்து பத்திரிகையாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், "ராமர் கோயில் தொடர்பாக அமைச்சர் உதயநிதி சொன்ன கருத்து திமுக எவ்வளவு பிற்போக்குத்தனமாக இருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது. இந்தியாவில் உள்ள மக்களின் 500 ஆண்டுக் கால கனவு ராமர் கோயில். தியாகங்கள் நிறைவேறி திருவிழாவைக் கொண்டாடத் தயாராக இருக்கிறார்கள். இன்னும் பிற்போக்குத்தனமாகப் பேசும் திமுகவை மக்கள் புறக்கணிப்பார்கள். தமிழகத்தில் திமுகவின் ஊழல் ஆட்சி என்ற இருள் விலக வேண்டும். அதற்கான நேரம் வந்துவிட்டது" என்று கூறினார்.

அண்ணாமலை, முருகன்

உதயநிதி கருத்து தொடர்பாகப் பேசிய தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, "ராமர் அனைவர்க்கும் பொதுவானவர். அயோத்தி கும்பாபிஷேகத்தை மக்கள் பெரிய அளவில் வரவேற்கிறார்கள். அயோத்தி ராமர் கோயில் குறித்துப் பேச அமைச்சர் உதயநிதிக்கு எந்த தகுதியும் இல்லை. மசூதியை இடித்து கோயில் கட்டியதாகச் சொல்லும் உதயநிதி வரலாற்றைப் படிக்க வேண்டும். நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பு, வழிகாட்டுதலின்படியே கோயில் கட்டப்பட்டிருக்கிறது. திமுக ஆட்சியில் பல கோயில்கள் இடிக்கப்பட்டிருக்கிறது. இடிப்பதைப் பற்றிப் பேச உதயநிதிக்குத் தகுதி இல்லை" என்று பேசினார்.

அமைச்சர் உதயநிதியின் கருத்துக்கு, ''மசூதி கட்டப்பட்டதே ஒரு கோயிலை இடித்துத்தான் என்று உச்ச நீதிமன்றமே சொல்லியிருக்கிறது" என்று பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி ஸ்ரீனிவாசனும் கருத்துச் சொல்லியிருந்தார். அதோடு, உதயநிதியின் கருத்துக்கு பாஜக-வினர் கடுமையான எதிர்வினை ஆற்றிவருகிறார்கள்.

இந்த சூழலில், இது குறித்து திமுகவின் செய்தித் தொடர்பு செயலாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனிடம் பேசினோம், ``இதுகுறித்து அனைத்தையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த வளர்ச்சியை முன்னெடுக்கும் முற்போக்கு சிந்தனையுடைய ஒரு இயக்கத்தின் அமைச்சர் பேசாமல் வேறு யார் பேசுவார்கள். அமைச்சர் உதயநிதி சொன்ன கருத்தை மதத்தை ஆன்மிகமாக, வழிபாடாக, தங்கள் வாழ்க்கை முறையாக கடைப்பிடிக்கும் அனைவரும் ஒத்துப்போவார்கள்.

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

ஒரு ஆன்மிக இடத்தை இடித்துவிட்டு அதில் இன்னொரு கடவுளுக்கு ஆலயம் அமைப்பதை எந்த ஆன்மிகவாதியும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். அது எந்த மதமாக இருந்தாலும் பொருந்தும். அயோத்தியில் மசூதி இருந்த இடத்தில் கோயில் கட்டுவோம் என்று சொன்னவர்கள், இன்று அங்கிருந்து தள்ளி ஆலயத்தை அமைத்திருக்கிறார்கள். அப்படியென்றால் இவர்களின் நோக்கம் ஆன்மிகம் கிடையாது. கடவுளின் பெயரைச் சொல்லிப் பிழைப்பு நடத்தும் புறம்போக்கு வாதிகள். அவர்களுக்கு ஜனநாயகத்தைக் காக்கும் எந்த ஒரு தத்துவமும் பேசத் தெரியாது. கடவுளின் பெயரைச் சொல்லி சண்டை போடத் தெரியும். அதனை வைத்து வாக்கு அரசியல் செய்யத் தெரியும். அந்த பேச்சிலேயே அவர்களின் பிற்போக்குத்தனம் வெளிப்படுகிறது. இன்றைய பிரதமர் மோடி குஜராத்தின் முதல்வராக இருந்தபோது 150-க்கும் மேற்பட்ட கோயில்களை இடித்து தரைமட்டமாகியவர் என்பதை பாஜகவினரால் மறுக்க முடியுமா. சாத்தன் வேதம் ஓதக்கூடாது" என்று பேசினார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/47zomWY



from India News https://ift.tt/61Nz3Vw

Post a Comment

0 Comments