சேலம்: பெண் ஊராட்சி மன்றத் தலைவர்கள் இருவரைப் பதவி நீக்கம் செய்த ஆட்சியர்! - பின்னணி என்ன?

சேலத்தில் பெண் ஊராட்சி மன்றத் தலைவர்கள் இருவரைப் பதவி நீக்கம் செய்து, மாவட்ட ஆட்சியர் கார்மேகம் பிறப்பித்திருக்கும் உத்தரவு, அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியிருக்கிறது.

சேலம் மாவட்டம், ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பைத்துர் ஊராட்சி மன்றத் தலைவராக கலைச்செல்வி என்பவர் பணியாற்றி வந்தார். இவர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் கல் கரை மற்றும் மண் கரை அமைக்கும் பணிக்காக, மூன்று லட்சம் ரூபாய்க்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பாக உயிரிழந்த தன்னுடைய மாமனார் கந்தசாமி பெயரில், அரசு விதிமுறைகளுக்கு முரணாக நிர்வாக அனுமதி பெற்றதாக புகார் எழுந்தது.

கலைச்செல்வி

இதைத் தொடர்ந்து உயர் அதிகாரிகள் விசாரணைக்கு ஆஜராகாமல் அலட்சியமாக இருந்து வந்திருக்கிறார் கலைச்செல்வி. இந்த நிலையில்தான், ``தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் 2005-ன் படி வறுமை கோட்டுக்குக் கீழ் உள்ள ஏழை எளிய மக்களின் அடிப்படை உரிமையான வேலை அட்டைகளை, அவர்களிடம் அளிக்காமல் தன் வசம் வைத்திருந்தது குற்றமாகும். இவர் தொடர்ந்து ஊராட்சி மன்றத் தலைவராகச் செயல்பட்டால், தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வார். எனவே, தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 25-ன் படி ஊராட்சி மன்றத் தலைவர் கலைச்செல்வி, அந்தப் பதவியிலிருந்து நீக்கம் செய்யப்படுகிறார்" என சேலம் ஆட்சியர் கார்மேகம் உத்தரவிட்டார்.

இதேபோல் தலைவாசல் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட தேவியாக்குறிச்சி ஊராட்சி மன்றத் தலைவராக அமுதா என்பவர் இருந்து வந்தார். இவர் தவறான தீர்மானங்களை நிறைவேற்றியதுடன், வேலை உத்தரவு வழங்காமல் மூன்று பணிகளை ஒப்பந்ததாரர்கள் மேற்கொள்ள அனுமதித்ததாகக் கூறப்படுகிறது. அத்துடன் தன்னுடைய கணவரை ஊராட்சி மன்ற விவகாரங்களில் சுதந்திரமாகச் செயல்பட அனுமதித்திருக்கிறார். அதேபோல தேவியாக்குறிச்சி ஊராட்சிச் செயலாளரும், அமுதாவின் கணவரும் அதே ஊராட்சியைச் சேர்ந்த ஒப்பந்ததாரரிடம் திட்டப் பணிகளை மேற்கொண்டதற்கான பில் தொகையை வழங்க லஞ்சம் பெற்றிருக்கின்றனர்.

கார்மேகம்

இதற்காக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறையினரால் அவர்கள் கைதுசெய்யப்பட்டு, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள்மீது குற்றவியல் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதனையடுத்து ஊராட்சி மன்றத்தில் நிர்வாக நலனைக் கருத்தில் கொண்டு தேவியாக்குறிச்சி ஊராட்சி மன்றத் தலைவர் அமுதா பதவி நீக்கம் செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டத்தில் அடுத்தடுத்து இரண்டு பெண் ஊராட்சி மன்றத் தலைவர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டிருப்பது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



from India News https://ift.tt/YiH57IU

Post a Comment

0 Comments