நேற்று முன்தினம் மதியம்வரை எம்.பி-யாக இருந்த மஹுவா மொய்த்ரா, நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க லஞ்ச வாங்கியதாக எழுந்த குற்றச்சாட்டில், மக்களவையிலிருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்ட நிலையில், அவர்மீது குற்றச்சாட்டை முன்வைத்த பா.ஜ.க எம்.பி நிஷிகாந்த் துபே, சக எம்.பி-யாக வருந்துவதாகத் தெரிவித்திருக்கிறார்.
முன்னதாக, அதானி குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வியெழுப்ப, தொழிலதிபர் ஹிராநந்தினியிடம் மஹுவா மொய்த்ரா பணம் வாங்கியதாகவும், தனது மக்களவை இணையதள போர்ட்டலின் பாஸ்வேர்டை பகிர்ந்ததாகவும் பா.ஜ.க எம்.பி நிஷிகாந்த் துபே குற்றச்சாட்டை முன்வைத்தார். அதோடு, மஹுவா மொய்த்ராமீது விசாரணை நடத்துமாறும் மக்களவை சபாநாயகருக்கு கடிதமும் அனுப்பினார். அதன்பின்னர், ஹிராநந்தினியிடம் விசாரணை நடத்தாமல், மஹுவா மொய்த்ராவிடம் மட்டும் விசாரணை நடத்திய நாடாளுமன்ற நெறிமுறைக் குழு, விசாரணையின் முடிவில் அவர் தவறு செய்திருப்பதாகவும், அதனால் அவரை எம்.பி பதவியிலிருந்து நீக்கலாம் என்றும் மக்களவை சபாநாயகருக்குப் பரிந்துரை செய்தது.
அதன்படி, நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில், மஹுவா மொய்த்ராவை தகுதிநீக்கம் செய்வதாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார். அப்போது, சோனியா காந்தி உட்பட எதிர்க்கட்சி எம்.பி-க்கள் பலரும் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். தொடர்ந்து பா.ஜ.க-வை சாடியும் வந்தனர்.
இந்த நிலையில், மஹுவா மொய்த்ரா மீது குற்றச்சாட்டை முன்வைத்த நிஷிகாந்த் துபே, ``லஞ்சம் மற்றும் தேசிய பாதுகாப்பு பிரச்னைகளுக்காக ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் வெளியேற்றப்பட்டது, சக நாடாளுமன்ற உறுப்பினராக எனக்கு வேதனையளிக்கிறது. அந்த நாள் மகிழ்ச்சியான நாள் அல்ல, சோகமான நாள்" என்று தெரிவித்திருக்கிறார்.
முன்னதாக, பா.ஜ.க-வின் முடிவு தொடங்கிவிட்டதாகவும், இன்னும் 30 ஆண்டுகள் தொடர்ந்து போராடுவேன் என்று மஹுவா மொய்த்ரா நேற்று ஆவேசமாகக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
from India News https://ift.tt/H6M0aWU
0 Comments