சீதாக்கா: `நக்சலைட் டு பழங்குடியின நலத்துறை அமைச்சர்' - தெலங்கானா இரும்புப் பெண்மணியின் நெடும்பயணம்!

``ஒவ்வொரு அநீதியையும் கண்டு ஆத்திரத்தில் அதிர்ந்துபோவாயானால், நீயும் எனது தோழனே!" - காம்ரேட் சேகுவேரா

தன்னுடைய மக்களின் உரிமைகளுக்காகப் போராட வேண்டுமென்று முடிவெடுத்த பிறகு, எத்தனை இடர் வந்தாலும் அதற்கான பாதையில் தெளிவான சிந்தனையோடு முன்னோக்கி பயணித்தால் நிச்சயம் இலக்கை அடைந்துவிட முடியும் என்பதை நிகழ்த்திக் காட்டியிருக்கிறார் தெலங்கானாவின் பழங்குடியினர் நலத்துறையின் புதிய அமைச்சர் சீதாக்கா.

தெலங்கானா பழங்குடியினர் நலத்துறை சீதாக்கா

சீதாக்கா... 1971-ம் ஆண்டு, ஜூலை 9-ம் தேதி, ஒருங்கிணைந்த ஆந்திரப் பிரதேசத்தில், வாரங்கல் மாவட்டத்திலிருக்கும் முலுகு மண்டலத்தில், ஜக்கன்னாபேட் கிராமத்தில் சம்மக்கா - சம்மையா பழங்குடியின தம்பதிக்கு இரண்டாவது மகளாகப் பிறந்தார் அனசுயா தன்சாரி. கோயா பழங்குடியினத்தைச் சேர்ந்தவரான இவர், 1986-ம் ஆண்டு 8-ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த சமயத்தில், கோதாவரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம் முலுகு மற்றும் அதைச் சுற்றியிருக்கும் கிராமங்களைப் பாதித்தபோது, இவர் தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து மூன்று நாள்களாக நன்கொடைகளைச் சேகரித்து அதனை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளித்து உதவினார். அந்தச் சிறுவயதிலேயே பிறருக்கு உதவுவதில் தான் மிகுந்த ஆர்வம் கொண்டவர் என்பதை, யாரிடமும் சொல்லிக் காட்டாமல், தன் செயலில் காட்டினார்.

மக்கள் உரிமைக்காக நக்சலைட் பயணம்!

தன்னுடைய 10-ம் வகுப்பு வரை முலுகு மண்டலத்தில் அரசு விடுதியில் தங்கிப் படித்த அனசுயா தன்சாரி, தன்னுடைய மக்களின் உரிமைகளுக்காகக் குரல்கொடுக்க வேண்டி, 1988-ல் சிபிஐ (எம்எல்) ஜனசக்தி கட்சியில் சேர்ந்து துப்பாக்கி ஏந்தி ஆயுதப் புரட்சியில் ஈடுபட்டார். தன்னுடைய மக்களுக்கு கிடைக்கவேண்டிய நீதிக்காக சிறுவயதிலேயே நக்சலைட்டாக தனது பயணத்தை தொடங்கினார் அனசுயா தன்சாரி. தனக்கான களம் இதுவென்று எண்ணி அனசுயா தன்சாரி இதில் இறங்கியபிறகு, சக தோழர்களால் `சீதாக்கா’ என்று அழைக்கப்பட்டார்.

சீதாக்கா

வழக்கறிஞர் டு அரசியல்வாதி!

தன்னுடைய ஆயுதக் குழுவில் ஏற்பட்ட அதிருப்தியின் காரணமாக, 1997-ல் பொது மன்னிப்பு திட்டத்தின் கீழ் ஆயுதங்களை கைவிட்டுவிட்டு நீதிமன்றத்தில் சரணடைந்தார். பின்னர், பாதிக்கப்பட்ட மக்களுக்காக நீதிமன்றங்களில் வாதாட முடிவுசெய்தார் சீதாக்கா. அதற்காக, பாதலா ராம் ரெட்டி சட்டக் கல்லூரியில் எல்.எல்.பி பட்டம் பெற்ற சீதாக்கா, வாரங்கல் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றத் தொடங்கினார். பின்னர், அதிகாரத்தில் இருந்தால் மக்களுக்கு இன்னும் அதிகமாக நேரடியாக உதவலாம் என்று எண்ணிய சீதாக்கா, 2004-ல் தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்து, முலுகு தொகுதியில் (தனித் தொகுதி) போட்டியிட்டார். தான் கண்ட முதல் தேர்தலில் தோல்வியடைந்தார்.

எம்.எல்.ஏ-வாக மக்கள் பணி!

இருப்பினும் மனம் தளராத சீதக்கா, 2009-ல் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று எம்.எல்.ஏ-வாக முதல்முறையாக சட்டமன்றத்துக்குள் நுழைந்தார். பின்னர், ஒருங்கிணைந்த ஆந்திரா, இரு மாநிலங்களாகப் பிரிக்கப்பட்ட பிறகு, 2014 தெலங்கானாவில் அதே முலுகு தொகுதியில் போட்டியிட்டு தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சி (தற்போது பாரத ராஷ்டிர சமிதி) வேட்பாளரிடம் தோல்வியடைந்தார். அதன் பிறகு தெலுங்கு தேசம் கட்சியிலிருந்து வெளியேறி காங்கிரஸில் இணைந்த சீதாக்கா, 2018-ல் அதே தொகுதியில் போட்டியிட்டு தெலங்கானா ராஷ்டிர சமிதி வேட்பாளரைத் தோற்கடித்து மீண்டும் சட்டமன்றத்துக்குள் நுழைந்தார்.

தெலங்கானா பழங்குடியினர் நலத்துறை சீதாக்கா

கொரோனா காலத்திலும் அயராத பணி!

அதே ஆண்டில், அகில இந்திய மகிளா காங்கிரஸில் பொதுச் செயலாளராகவும் பொறுப்பேற்று மக்கள் பணியில் தீவிரமாக ஈடுபட்டார். கட்சிகள் மாறினாலும், தன் செயல்களால் மக்கள் மனங்களில் இடம்பெற்ற சீதாக்கா, தொடர்ந்து தன் பழங்குடி மக்களின் உரிமைகளுக்காகக் களமாடினார். தன்னுடைய மக்களின் பசியைத் தீர்ப்பதில் மிகுந்த கவனம் கொண்டிருந்த சீதக்கா, கொரோனா லாக்டெளன் சமயத்தில் தனது தொகுதியில் தொடர்ந்து 100 நாள்கள் அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களை சுமார் ஒரு லட்சம் குடும்பங்களுக்கு வழங்கினார். கொரோனா காலத்தில் சீதாக்காவின் செயல்கள் பெருமளவில் ஊடக கவனம் பெற்றபோது,

``என்னுடைய மக்களுக்காகவும், என்னுடைய சொந்த திருப்திக்காகவும் எனது கடமையைச் செய்தேன். இதில் பாரத தெலங்கானா ராஷ்டிர சமிதியின் எந்த ஆதரவும் இல்லை. நன்கொடையாளர்கள், உதவிசெய்யும் ஒத்த எண்ணம் கொண்டவர்களின் ஆதரவால் இதை என்னால் செய்ய முடிந்தது" என்று கூறினார்.

எம்.எல்.ஏ டு முனைவர் சீதாக்கா!

எப்படி நக்சலைட்டாக இருந்தபோது படிப்பின் பக்கம் திரும்பினாரோ, அதேபோல எம்.எல்.ஏ-வாக மக்களுக்கு சேவை செய்துவந்தபோதும், படிப்பதை நிறுத்தவில்லை. உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் (Political Sciences) துறையில், `Social exclusion and Deprivation of migrant tribals of erstwhile Andhra Pradesh' என்ற தலைப்பில், வாரங்கல் மற்றும் கம்மம் மாவட்டத்திலுள்ள கோட்டி கோயா பழங்குடியினரைப்பற்றி ஆய்வு மேற்கொண்டார். கடந்த ஆண்டு அதில் முனைவர் பட்டமும் பெற்றார்.

தெலங்கானா பழங்குடியினர் நலத்துறை சீதாக்கா

அப்போது, ``என்னுடைய குழந்தைப் பருவத்தில், நான் நக்சலைட்டாக இருப்பேன் என்று நினைத்ததில்லை. நக்சலைட்டாக இருந்தபோது வழக்கறிஞராக இருப்பேன் என நினைத்ததில்லை. வழக்கறிஞராக இருந்தபோது, எம்.எல்.ஏ - வாக இருப்பேன் என்று நினைத்ததில்லை. எம்.எல்.ஏ - வாக இருக்கும் போது பி.ஹெச்டி படிப்பேன் என நினைத்ததில்லை. இப்போது நீங்கள் என்னை டாக்டர் அனுசுயா சீதாக்கா என்று அழைக்கலாம்" என்று மகிழ்ச்சியுடன் ட்வீட் செய்திருந்தார் சீதாக்கா.

பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் சீதாக்கா!

இவரின் செயல்பாடுகள் இவருக்கு மட்டுமல்லாது, இவர் சார்ந்திருக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இவரின் தொகுதி மக்களிடையே பெருமை சேர்த்தது. அதுவே, இவருக்கு இந்த முறையும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பைப் பெற்றுத் தந்தது. இந்த முறை டாக்டர் சீதாக்காவாக முலுகு தொகுதியில் களமிறங்கி மீண்டும் வெற்றியும் கண்டார். ஆனால், இந்த வெற்றி இவரை முன்பை போல ஒரு எம்.எல்.ஏ-வாக மட்டும் ஆக்காமல், யாருக்காக அவர் அரசியலுக்குள் நுழைந்தாரோ அவர்களுக்கான அமைச்சராகவும் உருவாக்கியது. ஆம், தெலங்கானா மாநில பழங்குடியினர் நலத்துறையின் புதிய அமைச்சர் சீதாக்காதான்.

ஹைதராபாத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் அமைச்சராகப் பதவியேற்றார் சீதாக்கா. அவர் பதவியேற்கும்போது சீதாக்கா என்று அவரின் பெயரைச் சொன்னதும் எழுந்த ஆர்ப்பரிப்புகள் ஓயவே சில நிமிடங்கள் ஆனது. அந்த ஆர்ப்பரிப்புகள் அனைத்தும் அவர் சார்ந்த பழங்குடியின மக்களின் நெடுங்கால வலிகளைக் கடந்த சந்தோஷத்தின் ஒரு ஆரம்பம்தான்.

8-ம் வகுப்பு படிக்கும்போது தன்னைச் சுற்றியிருக்கும் மக்களுக்காக நடக்க ஆரம்பித்த சீதாக்காவின் கால்கள் இன்று அவரின் 52 வயதில் அமைச்சராக மக்களுக்காக இன்னும் வேகமாக முன்பைவிட வேகமாகப் பயணிக்க ஆரம்பித்திருக்கின்றன. இன்றைக்குச் சிவப்புக் கம்பளத்தில் அடியெடுத்திருக்கும் இவரின் பாதங்கள் கடந்தது வந்த பாதைகள் அனைத்தும் முட்கள் நிறைந்த கரடுமுரடானவை.

தெலங்கானா பழங்குடியினர் நலத்துறை சீதக்கா

நக்சலைட், வழக்கறிஞர், எம்.எல்.ஏ, முனைவர், அமைச்சர் என தன்னுடைய அனைத்து பரிமாணங்களிலும் தன்னுடைய மக்களின் நலனை இலக்காக வைத்துச் சாதித்துக் காட்டியிருக்கும் சீதாக்காவின் வாழ்க்கை, வாழும் தலைமுறைக்கும், வருங்கால தலைமுறையினருக்கும் வரலாறாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

தன் வாழ்வின் வழிநெடுக படிப்பையும், கொள்கையையும் நேர்கோட்டில் வைத்து மக்களுக்காகக் களமாடும் அமைச்சர் சீதாக்காவுக்கு வாழ்த்துகள்...!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk



from India News https://ift.tt/kOdP2wH

Post a Comment

0 Comments