இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கணவர், குழந்தையுடன் உயிரிழந்த உலக சுகாதார அமைப்பின் ஊழியர்; WHO இரங்கல்!

இஸ்ரேல் போர்த்தொடுத்துவரும் பாலஸ்தீனத்தின் காஸாவில் தங்கள் ஊழியர் ஒருவர் இறந்ததாக உலக சுகாதார அமைப்பு (WHO), தன்னுடைய அதிகாரபூர்வ பக்கத்தில் மிகுந்த வருத்தத்தோடு தெரிவித்திருக்கிறது.

உயிரிழந்ததாகக் கூறப்படும், 29 வயது டிமா அப்துல் லதீஃப் முஹமது அல்ஹாஜ் (Dima Abdul latif Mohammed Alhaj), 2019 முதல் உலக சுகாதார அமைப்பில் விபத்து மற்றும் அவசரகால மருத்துவக் குழுவில் மூட்டு மறுசீரமைப்பு மையத்தில் நோயாளி நிர்வாகியாகப் பணியாற்றிவந்தார்.

இஸ்ரேல்-ஹமாஸ் போர்

இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தில் சுற்றுச்சூழல் மற்றும் புவி அறிவியலில் இளங்கலை பட்டம் பெற்றவரான டிமா, சுற்றுச்சூழல் பிரச்னைகள் மற்றும் ஆரோக்கியம் குறித்து தொடர்ந்து படித்து அங்கேயே வேலையும் செய்து வந்தார். அதோடு, 2018 - 2019-ம் ஆண்டுக்கான ஈராஸ்மஸ் பரிமாற்றத் திட்டத்தின் ஒரு பகுதியாக, ஸ்காட்லாந்திலுள்ள கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் முதுகலை மாணவியாகவும் இருந்தார். சென்ற ஆண்டு (2022) மகளிர் தினத்தன்று, உலக சுகாதார அமைப்பின் சமூக ஊடக பதிவில், ``எனது பணியைப் பற்றி பெருமிதம் கொள்கிறேன். ஏனெனில், இது மக்களுக்கு நம்பிக்கையையும், வாழ்க்கையைத் தொடர்ந்து வாழ்வதற்கான வாய்ப்பினையும் வழங்குகிறது" என்று டிமா தெரிவித்திருந்தார்.

இப்படியிருக்க, சமீபத்தில் காஸாவிலிருந்து வெளியேறிய டிமா, தெற்கு காஸாவிலுள்ள தன்னுடைய பெற்றோரின் வீட்டில் இருந்துவந்தார். இந்த நிலையில், நேற்று இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், தான் தங்கியிருந்த வீடு வெடிகுண்டு தாக்குதலுக்குள்ளானதில், டிமா உயிரிழந்தார். இந்தத் தாக்குதலில், இவர் மட்டுமல்லாமல் இவருடைய கணவர், ஆறு மாத ஆண் குழந்தை, இரண்டு சகோதரர்களும் மிக மோசமான முறையில் கொல்லப்பட்டனர். மேலும், அதே வீட்டில் தஞ்சமடைந்திருந்த 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினரும் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

டிமா அப்துல் லதீஃப் முஹமது அல்ஹாஜ்

இந்தச் சம்பவத்துக்குப் பிறகு டிமா குறித்துப் பேசிய, உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதி டாக்டர் ரிக் பீபர்கார்ன் (Rik Peeperkorn), ``அற்புதமான நபர் டிமா. எப்போதும் புன்னகையுடன், மகிழ்ச்சியாகவும், நேர்மறை எண்ணத்துடனும் வலம்வருவார். டிமா ஓர் உண்மையான அணி வீரராகத் திகழ்ந்தார். அவரின் பணி மிகமுக்கியமானது. மேலும், காஸாவிலிருக்கும் துணை அலுவலகம், குழுவுக்கு ஆதரவாக இன்னும் கூடுதலான பொறுப்புகளை ஏற்குமாறு அவர் கேட்டுக்கொள்ளப்பட்டார். இந்த நிலையில், அவரின் இழப்பு நம் அனைவருக்குமே வேதனையானது. டிமாவின் தாய், தந்தை (காஸாவில் நீண்டகாலமாக சேவையாற்றும் மருத்துவ நிபுணர்), அவரின் குடும்பத்தினர், நண்பர்கள் அனைவருக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கலைப் தெரிவித்துக் கொள்கிறோம்" என்றார்.

மேலும், ``கடந்த அக்டோபர் 7-ம் தேதிமுதல், மனிதாபிமான சமூகம் மற்றும் ஐ.நா அமைப்பு தங்களின் உறுப்பினர்களை இழந்துவருகிறது. MSF இரண்டு மருத்துவர்களையும் UNRWA 108 சக ஊழியர்களையும் இழந்திருக்கிறது. இவை வெறும் எண்கள் அல்ல, பிறர் நல்ல வாழ்க்கையைப் பெறுவதற்காக உழைத்தவர்கள். இப்போது, டிமா மற்றும் அவரது குடும்பத்தினரின் மரணம் இந்த மோதலில் ஏற்படும் அர்த்தமற்ற இழப்புக்கு மற்றொரு எடுத்துக்காட்டாகும்.

WHO உலக சுகாதார அமைப்பு

பொதுமக்கள் தங்கள் வீடுகளில், பணியிடங்களில், வெளியேறும்போது, பள்ளிகளில் தங்கும்போது, மருத்துவமனைகளில் பராமரிப்பிலிருக்கும்போது இறந்திருக்கின்றனர். இது எப்போதுதான் நிறுத்தப்படும்... இந்த மோதலை முடிவுக்கு கொண்டு வருமாறு அதற்கான அதிகாரத்தைக் கையில் வைத்திருக்கும் அனைவரிடமும் நாங்கள் மீண்டும் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறோம்" என்று உலக சுகாதார அமைப்பு கோரிக்கை விடுத்திருக்கிறது.



from India News https://ift.tt/NPFj0Oe

Post a Comment

0 Comments