`நேருவின் பழங்குடியின மனைவி' என்று ஒதுக்கிவைக்கப்பட்ட புத்னி மஞ்சியாயின் (80) (Budhni Manjhiyain) என்ற சந்தால் பழங்குடியினப் பெண் கடந்த நவம்பர் 17-ம் தேதியன்று காலமானார். நேருவின் பழங்குடியின மனைவி என்று இவர் அழைக்கப்படுவதற்கு பின்னால் விசித்திர நிகழ்வு ஒன்று ஒரு இருக்கிறது. ஆனால், அந்த நிகழ்வே அவரை அவருடைய பழங்குடியின சமூகத்திலிருந்தே ஒதுக்கி வைக்கவும் காரணமாக அமைந்தது. அத்தகைய நிகழ்வு 1959-ல் அரங்கேறியது.
அதாவது, 1959-ல் பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு, ஜார்கண்டின் தன்பாத் மாவட்டத்தில் தாமோதர் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பஞ்செட் அணையின் திறப்பு விழாவுக்காக அங்கு வருகை புரிந்தார். தாமோதர் பள்ளத்தாக்கு கார்ப்பரேஷனால் (DVC) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அந்த நிகழ்ச்சியில், பிரதமர் நேருவை வரவேற்க அதில் ஒப்பந்த பணியாளராக வேலைபார்த்துவந்த 16 வயது புத்னி மஞ்சியாயின் என்ற பழங்குடியினப் பெண் தேர்வு செய்யப்பட்டிருந்தார்.
அதன்படி, நேருவுக்கு மாலை அணிவித்து வரவேற்றார் புத்னி மஞ்சியாயின். பின்னர், நேருவின் வேண்டுகோளின்படி புத்னி மஞ்சியாயினே அணையைத் திறந்துவைத்தார். அதன்பிறகு நடந்தவை புத்னி மஞ்சியாயின் வாழ்க்கையை மாற்றின. அதாவது, புத்னி மஞ்சியாயின் சார்ந்திருக்கும் சந்தால் பழங்குடி சமூகத்தில், பெண் ஒருவருக்கு மாலையிட்டாலே அந்த நபருடன் அவருக்குத் திருமணம் ஆகிவிட்டது என்ற வழக்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது. அதன்படி, நேருவுக்கு புத்னி மஞ்சியாயின் மாலையிட்டதால், நேருவுடன் அவருக்குத் திருமணமாகிவிட்டதாகக் கூறிய சந்தால் பழங்குடியின பஞ்சாயத்து, தங்கள் வழக்கப்படி பழங்குடியல்லாத நபரைத் திருமணம் செய்த காரணத்தால் புத்னி மஞ்சியாயினை ஒதுக்கிவைத்தது.
அதன்பிறகு, 1962-ல் தாமோதர் பள்ளத்தாக்கு கார்ப்பரேஷனில் பணிபுரிந்த மற்ற ஒப்பந்தத் தொழிலாளர்களுடன் புத்னி மஞ்சியாயினும் பணிநீக்கம் செய்யப்பட்டார். பின்னர், தனது வாழ்வாதாரத்துக்காக மேற்கு வங்கத்துக்கு இடம்பெயர்ந்த புத்னி மஞ்சியாயின், அங்கு புருலியா பகுதியில் நிலக்கரி சுரங்கம் ஒன்றில் தினக் கூலியாக வேலைபார்த்தார். அந்த சமயத்தில், அங்கேயே ஒப்பந்த தொழிலாளியாக வேலைபார்த்துவந்த சுதிர் தத்தா என்பவர் புத்னி மஞ்சியாயினுக்கு அடைக்கலம் கொடுத்துவந்தார். காலப்போக்கில் இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.
அதைத்தொடர்ந்து பல வருடங்களுக்குப் பிறகு, 1985-ல் அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி மேற்கு வங்கத்துக்கு வந்தபோது, உள்ளூர் காங்கிரஸ் தலைவர் ஒருவர் ராஜீவ் காந்தியைச் சந்திக்கும் வாய்ப்பை புத்னி மஞ்சியாயினுக்கு ஏற்படுத்திக் கொடுத்தார். பிரதமரைச் சந்தித்த புத்னி மஞ்சியாயின் தனக்கு நேர்ந்தவற்றை கூறிய பிறகு, தாமோதர் பள்ளத்தாக்கு கார்ப்பரேஷனில் அவருக்கு வேலை வழங்கப்பட்டது.
சுமார் 20 வருடங்கள் அதில் வேலைபார்த்த புத்னி மஞ்சியாயின் கடந்த 2005-ல் பணியிலிருந்து ஒய்வுபெற்றார். இந்த நிலையில், ஜார்கண்டின் பஞ்சேட்டில் தன்னுடைய மகள் ரத்னாவுடன் வசித்துவந்த புத்னி மஞ்சியாயின், கடந்த நவம்பர் 17-ம் தேதியன்று காலமானார். அவரின் உடலுக்கு அரசியல் தலைவர்கள், உள்ளூர் பிரமுகர்கள் உட்பட பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். தற்போது, பஞ்சேட் பஞ்சாயத்தின் தலைவர் பைரவ் மண்டல் உட்பட பலரும், புத்னி மஞ்சியாயினுக்கு நினைவிடம் அமைக்குமாறும், அவரின் 60 வயது மகள் ரத்னாவுக்கு வீடு கட்டித்தருமாறும் தாமோதர் பள்ளத்தாக்கு கார்ப்பரேஷனுக்கு கடிதம் எழுதியிருக்கின்றனர்.
புத்னி மஞ்சியாயின், தான் இறப்பதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு உள்ளூர் ஊடகத்திடம் பேசுகையில், ``அன்று நேரு வந்தார், மாலை அணிவித்து வரவேற்றேன், நேரு சென்றுவிட்டார். அதன் பின்னர், `நேருவின் பழங்குடியின மனைவி’ என்று நான் அழைக்கப்பட்டேன். பிறகு, என் சொந்த வாழ்க்கைக்காக நான் ஓட வேண்டியிருந்தது" என்று கூறியிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk
from India News https://ift.tt/TxQuk63
0 Comments