Israel - Palestine: "காஸாவில் போர் நிறுத்தப்பட்டால் ஹமாஸ் மீண்டும் தாக்குதல் நடத்தும்!" - அமெரிக்கா

ஹமாஸை அழிக்கிறோம் என்ற பெயரில் பாலஸ்தீனத்தின் காஸா மக்கள் மீது தாக்குதல் நடத்துவதை இஸ்ரேல் நிறுத்தவேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகின்றது. இதுவரை காஸாவில் மருத்துவமனைகள், அகதிகள் முகாம், பள்ளிகள், குடியிருப்புகள் உட்பட நகரம் முழுவதும் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் இதுவரை 9,000-க்கும் மேற்பட்ட காஸா வாசிகள் உயிரிழந்திருக்கின்றனர். இஸ்ரேலில் 1,400 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இருதரப்பையும் சேர்த்து பலி எண்ணிக்கை பத்தாயிரத்தைக் கடந்துவிட்டது.

காஸா அகதிகள் முகாமை தாக்கிய இஸ்ரேல்

போரை நிறுத்துமாறு ஐ.நாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டும் கூட போரை நிறுத்தாமல் தொடர்ந்து தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கிறது இஸ்ரேல். இந்த நிலையில், காஸாவில் போர் நிறுத்தப்பட்டால் ஹமாஸ் மீண்டும் தாக்குதல் நடத்தும் என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன்(Antony Blinken) கூறியிருக்கிறார்.

போரை நிறுத்த வலியுறுத்தும் அரபு தலைவர்களுடன், ஜோர்டானில் நேற்று பேச்சுவார்த்தை நடத்திய ஆண்டனி பிளிங்கன், ``தற்போது போர்நிறுத்தம் என்பது ஹமாஸை அப்படியே விட்டுவிடக் கூடும். இதனால் அவர்கள் ஒருங்கிணைந்து அக்டோபர் 7-ல் செய்ததை மீண்டும் செய்ய முடியும். எந்தவொரு நாடும் அதை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே இஸ்ரேலின் உரிமையையும், தங்களைத் தற்காத்துக் கொள்ள வேண்டிய கடமையையும் அவர்களுக்கு மீண்டும் உறுதிப்படுத்துவது முக்கியம்" கூறினார்.

வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் - அமெரிக்கா

இருப்பினும் இதனை மறுத்த ஜோர்டான் வெளியுறவுத்துறை அமைச்சர் அய்மன் சஃபாடி (Ayman Safadi), ``இதுவொரு தற்காப்பு என்பதை நாங்கள் ஏற்கமாட்டோம். பொதுமக்களைக் கொல்லுதல், அவர்களின் வீடுகள், மருத்துவமனைகள், பள்ளிகள், மசூதிகள், தேவாலயங்களை அழித்தல் எனப் போர் தொடர்கிறது. எந்த வகையிலும் இதை நியாயப்படுத்த முடியாது. மேலும், இது எந்த விதத்திலும் இஸ்ரேலுக்குப் பாதுகாப்பையோ, அமைதியையோ தராது. எனவே, இந்தப் போர் நிறுத்தப்படுவதை நாம் இப்போதே உறுதி செய்ய வேண்டும்" என்றார்.

அதேபோல், எகிப்து வெளியுறவு அமைச்சர் சமே ஷோக்ரி(Sameh Shoukry), ``சர்வதேச நாடுகளின் பொறுப்பு எப்போதும் விரோதத்தை நிறுத்துவதுதானே தவிர, வன்முறையின் தொடர்ச்சியை ஊக்குவிப்பதல்ல" என்றார். இறுதியில், போரை நிறுத்துமாறு இஸ்ரேலை வலியுறுத்த வேண்டும் என ஆண்டனி பிளிங்கனுக்கு பிற தலைவர்கள் அழுத்தம் கொடுத்தனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk



from India News https://ift.tt/5taY17Z

Post a Comment

0 Comments