`ஜூனியர் விகடன் செய்தி எதிரொலி' - தமிழகத்தில் வேகம் எடுக்கும் குற்ற வழக்குகள்!

தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு வேங்கைவயல் விவகாரம், பல்வீர் சிங் அட்ராசிட்டி மட்டுமன்றி... தஞ்சாவூர் டாஸ்மாக் பார் மரணம், கள்ளக்குறிச்சி மாணவி மரணம், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்த அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை விவகாரம், கொடநாடு கொலைக் கொள்ளை வழக்கு விவகாரம் என தீர்வு கிடைக்காத பல்வேறு வழக்குகள் குறித்து, கள ஆய்வு செய்து, கடந்த ஜூ.வி இதழில் கவர் ஸ்டோரியாக வெளியிட்டிருந்தோம்.

பல மாதங்களாக விசாரிக்கப்பட்டுவந்த பல்வீர் சிங் வழக்கில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதில் தாமதம் இருந்து வந்த நிலையில், நேற்றைய தினம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, விசாரணைக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. அதேபோல, கையோடு இந்த வழக்கு பட்டியலுக்கும் வந்திருக்கிறது.

வேங்கைவயல்

இதேபோன்று வேங்கைவயல் விவகாரத்தை பொருத்தவரை ஜூனியர் விகடன் கவர் ஸ்டோரி எதிரொலியாக இதுவரைக்கும் 30 பேரிடம் டிஎன்ஏ பரிசோதனை நடத்தப்பட்ட நிலையில், 31-வது நபராக தற்போது டயாலிசிஸ் சிகிச்சை செய்து வரும் ஒரு ஒரு நபரிடம் டிஎன்ஏ பரிசோதனை செய்ய உள்ளதாக புதுக்கோட்டை காவல்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதே நேரம் கடந்த அக்டோபர் மாதம் 23-ம் தேதி விசாரணைக்கு மேலும் ஒரு மாத கால அவகாசத்தை காவல்துறை புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் அனுமதி கேட்டுள்ளது. அதற்கு நீதிமன்றமும் அனுமதி கொடுத்துள்ளது. எனவே இந்த வழக்கு சற்று வேகம் எடுக்கும் என்று கூறப்படுகிறது. இருப்பினும் உள்ளூர் மக்களிடம் விசாரிக்கும் போது 2011 ஆம் ஆண்டு பிளஸ் ஒன் மாணவி அபர்ணா கொல்லப்பட்ட வழக்கில் சிபிஐ விசாரணையே தோல்வி அடைந்ததை சுட்டிக்காட்டி அதே போன்று இந்த வழக்கிலும் நடப்பதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது என்று சூசகமாக சொல்கின்றனர்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்கு முடித்து வைக்கப்பட்டதற்கு எதிராக மனித உரிமை செயற்பாட்டாளர் ஹென்றி திபென் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் துப்பாக்கிச்சூடு குறித்து விசாரித்த நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம், 17 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்ததாகவும், அந்த அறிக்கையை ஏற்று அரசாணை பிறப்பித்த தமிழக அரசு, அதன் அடிப்படையில் எந்த மேல் நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் ஹென்றி திபென் குற்றம் சாட்டினார்.

இதையடுத்து, நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்காதது ஏன் என விளக்கமளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை நவம்பர் 17-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வரவுள்ளது. இதில் தமிழ்நாடு அரசு தரப்பு தெரிவிக்கும் கருத்துக்களை பொறுத்து வழக்கில் சில அதிரடி நடவடிக்கைகள் நீதிமன்றத்தால் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

பெண் பத்திரிகையாளர் படுகொலை - தீர்ப்பு

இதேபோன்று கனியாமூர் கலவரம், தஞ்சாவூர் டாஸ்மாக் பார் மரணம், அன்பு ஜோதி அறக்கட்டளை உள்ளிட்ட பல்வேறு நிலுவையில் உள்ள வழக்குகளையும் விரைந்து விசாரணை நடவடிக்கைகளை எடுக்கக் கோரி தலைமைச் செயலக உயர் அதிகாரிகளிடமிருந்து அந்தந்த மாவட்ட காவல் உயர் அதிகாரிகளுக்கும் உத்தரவு பறந்துள்ளதாக கூறப்படுகிறது. 

இதுகுறித்து அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் முகமது ஹசன் ஜின்னாவிடம் பேசினோம். ``போலீஸ் மற்றும் சிபிசிஐடி விசாரணையை பொறுத்தவரை, அதில் நாங்கள் தலையிட முடியாது. வழக்கு விசாரணையை பொறுத்தவரை தங்களால் இயன்ற அளவுக்கு விரைவாகவே விசாரணையை துரிதப்படுத்தி வருகிறோம். அரசு தரப்பில் ஏதேனும் சிக்கல்கள் இருப்பின் அதை சுட்டிக்காட்டி வருகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk



from India News https://ift.tt/xhuDEYy

Post a Comment

0 Comments