பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை 'என் மண் என் மக்கள்' என்ற பெயரில் 234 தொகுதியிலும் வலம் வர திட்டமிட்டு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். கடந்த ஜூலை மாதம் இறுதியில் தொடங்கப்பட்ட தொடர் நிகழ்ச்சிக்கு அவ்வப்போது விடுப்பும் விடப்படுகிறது.
இந்நிலையில்தான், அரியலூர் மாவட்ட நிகழ்ச்சியில் பங்கேற்ற அண்ணாமலை, அம்மாவட்டத்தைச் சேர்ந்தவரும் போக்குவரத்து துறையின் அமைச்சருமான சிவசங்கர் மீது பகீர் குற்றசாட்டை முன்வைத்து இருக்கிறார். அதாவது, 'செந்தில் பாலாஜியின் இடத்தை அமைச்சர் சிவசங்கர் பிடித்து இருக்கிறார்.
தகுதியற்ற போலி நிறுவனங்கள் மூலம், 1276 கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளார். வேக கட்டுப்பாட்டு கருவி, மாசுக்கட்டுப்பாடு சோதனை இயந்திரம் வாங்கியது மூலம் 783 கோடி ரூபாய் ஊழல் என அவரது போக்குவரத்துறையில் 2059 கோடி ஊழல் நடந்துள்ளது. அவரது மனைவிக்கு சொந்தமான செயற்கை கருத்தரிப்பு மையத்தின் விளம்பரத்தை பஸ்சின் பின்பக்கம் ஒட்டியுள்ளார்.' என்று சராமரி குற்றசாட்டுகளை அடுக்கி இருக்கிறார்.
அண்ணாமலையின் இந்த குற்றசாட்டு குறித்து தி.மு.க செய்தி தொடர்புக்குழு துணைச் செயலாளர் சையத் ஹபீஸ் சித்திக்-கிடம் கேட்டபோது, "தி.மு.க அரசு மீதும் அமைச்சர்கள் மீதும் இதுவரை அண்ணாமலை வைத்த குற்றசாட்டில் ஏதாவது ஒரு குற்றசாட்டுக்கு ஆதாரம் இருக்கிறதா? இல்லை... அவ்வளவுஏன் அவரின் வாட்ச் முதல் தனக்கு நண்பர்கள்தான் மாதம் எட்டு லட்சம் ரூபாய் செலவு செய்வதாக சொன்னதுவரை ஏதாவது ஒன்றுக்காவது உண்மையான ஆதாரத்தை சரியாக கொடுத்திருக்கிறாரா? அதுவும் இல்லை... உண்மை நிலை இப்படி இருக்க ஊழல் குற்றசாட்டு சுமத்த அண்ணாமலைக்கு எந்த அறுகதையும் இல்லை.
தேசிய நெடுஞ்சாலை துறை உள்ளிட்ட பல துறைகளில் ஏழு லட்சம் கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக சி.ஐ.ஜி அறிக்கை மத்திய மோடி அரசின் முகத்திரையை கிழித்து இருக்கிறது. மத்திய அரசு இப்படியென்றால், ஆருத்ரா முதல் நமீதா, கெளதமி வரை அண்ணாமலை பணமோசடி செய்திருப்பது இப்போது அம்பலமாகி இருக்கிறது.
சாதாரண கவுன்சிலராககூட இல்லாத அண்ணாமலை மீது பல பணமோசடிக்கான ஆதாரங்கள் வெளியாகி வருகிறது. தேசிய தலைமை முதல் உள்ளூர் தலைமை வரை ஊழலில் திளைத்து இருக்கும் பா.ஜ.க-வுக்கு, எங்களை பற்றி பேச எந்த அருகதையும் இல்லை. அண்ணாமலை உண்மை பேசியதாகவும் வரலாறு இல்லை. இதை நாங்கள் பெரிதாகவும் எடுத்து கொள்ளவில்லை." என்றார் சூடாக.
தொடர்ந்து அண்ணாமலைக்கு நெருக்கமான சிலரிடம் பேசும்போது, ``இப்படிதான் செந்தில் பாலாஜி மீது அண்ணாமலை தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அதன்படியே, பல்வேறு ரெய்டுகளில் சிக்கி, தற்போது சிறையில் இருக்கிறார். ஜாமீன் கேட்டு அல்லாடி வருகிறார். அதேபோலதான், அண்ணாமலை அமைச்சர் சிவசங்கர் குறித்து ஊழல் குற்றச்சாட்டை முன்வைத்து இருக்கிறார். இதில் உண்மைகளில் இருப்பதால்தான் திமுக சைலன்டாக இருக்கிறது. இதுதொடர்பான ஆவணங்களை அண்ணாமலை விரைவிலேயே வெளியிடுவார்" என்றனர்.
பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை கடந்த ஏப்ரல் மாதம் 14-ம் தேதி ‘திமுக ஃபைல்ஸ்’ என்ற பெயரில் தி.மு.க பொருளாளரும், எம்.பி-யுமான டி.ஆர்.பாலு உள்ளிட்ட தி.மு.க-வினரின் சொத்துப் பட்டியலை வெளியிட்டு இருந்தார். இது ஆதாரமில்லாத குற்றச்சாட்டு என்று, டி.ஆர்.பாலு சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையில் சமீபத்தில்தான் அண்ணாமலை ஆஜராகி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல, அமைச்சர் சிவசங்கர் மீதான அண்ணாமலையின் குற்றச்சாட்டுக்கு அவதூறு வழக்கு தொடர ஆயத்தமாகி வருகிறார்கள் என்கிறார்கள் தி.மு.க-வின் உள்விவகாரங்களை அறிந்தவர்கள்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk
from India News https://ift.tt/7YqpM8D
0 Comments