தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகுவதாக அ.தி.மு.க எடுத்த முடிவு பா.ஜ.க-வுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தற்போது, அடிமேல் அடியாக, பா.ஜ.க கூட்டணியிலிருந்து பவன் கல்யாண் தலைமையிலான ஜனசேனா கட்சியும் வெளியேறியிருக்கிறது. எதிர்க் கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி ஒற்றுமையுடன் காணப்படும் நிலையில், பா.ஜ.க கூட்டணியிலிருந்து முக்கியக் கட்சிகள் வெளியேறியிருப்பது பா.ஜ.க தலைவர்களைக் கவலையடையச் செய்திருக்கிறது.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு பா.ஜ.க-வுடன் அ.தி.மு.க கைகோத்தது. 2019-ல் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலிலும், 2021-ல் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலிலும் பா.ஜ.க-வும் அ.தி.மு.க-வும் கூட்டணி வைத்து போட்டியிட்டன. ஆனால், இரண்டு தேர்தல்களிலும் இந்தக் கூட்டணி தோல்வியைத் தழுவியது.
ஆனாலும், பா.ஜ.க., அ.தி.மு.க இடையிலான உறவு சுமூகமாகவே இருந்தது. ஆனால், பா.ஜ.க-வின் மாநிலத் தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்ட பிறகு சோதனை ஆரம்பித்தது. அண்ணாமலை பேசும் விதமும், அவரின் கருத்துக்களும் அ.தி.மு.க தலைவர்களுக்கு ஒத்துப்போகவில்லை. எனவே, பா.ஜ.க-வின் தேசியத் தலைமையிடம் மட்டும் அ.தி.மு.க தலைவர்கள் சுமூகமான உறவைப் பேணிவந்தனர்.
2024-ல் பா.ஜ.க-வை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ‘இந்தியா’ கூட்டணியை உருவாக்கிய பிறகு, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கூட்டத்தை டெல்லியில் பா.ஜ.க கூட்டியது. அதில், பிரதமருக்கு பக்கத்தில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு இடம் கொடுக்கப்பட்டது. அவ்வளவு முக்கியத்துவம் தரப்பட்ட அ.தி.மு.க-தான், தற்போது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நெருங்கிவரும் நேரத்தில், தேசிய ஜனநாயகக் கூட்டணிலிருந்து விலகிவிட்டது.
தற்போது, ஆந்திராவில் பவன் கல்யாண் தலைமையிலான ஜனசேனா கட்சியும் பா.ஜ.க கூட்டணியிலிருந்து விலகியிருக்கிறது. தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணி வைப்பதற்கான பா.ஜ.க-வின் முயற்சி வெற்றிபெறவில்லை. எனவே, பா.ஜ.க-வின் பார்வை பவன் கல்யாண் பக்கம் திரும்பியது. டெல்லியில் 38 கட்சிகளை அழைத்து என்.டி.ஏ கூட்டத்தை கடந்த ஜூலை 18-ம் தேதி பா.ஜ.க நடத்தியது.
பா.ஜ.க-வின் அழைப்பின் பேரில் அந்தக் கூட்டத்தில் ஜனசேனாவின் தலைவர் பவன் கல்யாண் பங்கேற்றார். என்.டி.ஏ கூட்டம் முடிந்த பிறகு, பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார் பவன் கல்யாண். அதன் பிறகு, பா.ஜ.க-வுடன் பெரிய அளவுக்கான நெருக்கத்தை அவர் காண்பிக்கவில்லை.
தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவுடன்தான் அவர் நெருக்கம் காண்பித்தார். சமீபத்தில், சந்திரபாபு நாயுடுவை ஜெகன்மோகன் ரெட்டி அரசு கைது செய்ததற்கு பவன் கல்யாண் கடும் கண்டனம் தெரிவித்தார். தற்போது, என்.டி.ஏ-வை விட்டு பவன் கல்யாண் வெளியேறிவிட்டதாக செய்திகள் வருகின்றன. ஒரு செய்தி நிறுவனத்துக்கு பவன் கல்யாண் அளித்த பேட்டியில், ’ஆந்திராவின் வளர்ச்சிக்கு சந்திரபாபு நாயுடுவின் ஆட்சி நிர்வாகம் தேவைப்படுகிறது.
தற்போது, தெலுங்கு தேசம் கட்சி பெரும் நெருக்கடியில் இருக்கிறது. இந்தச் சூழலில், ஜனசேனா கட்சியின் ஆதரவு தெலுங்கு தேசம் கட்சிக்குத் தேவையாக இருக்கிறது. எனவே, தெலுங்கு தேசம் கட்சியை ஆதரிப்பதற்காக என்.டி.ஏ-விலிருந்து வெளியே வந்துவிட்டேன்’ என்று கூறியிருக்கிறார். இதனால், என்.டி.ஏ கூட்டணியில் 38 கட்சிகள் இருந்த நிலையில், தற்போது அது 36 ஆகக் குறைந்திருக்கிறது.
அதே நேரத்தில், என்.டி.ஏ-விலிருந்து ஜனசேனா கட்சி வெளியேறவில்லை. என்.டி.ஏ-வில் இருந்துகொண்டே சந்திரபாபு நாயுடுவுக்கு ஆதரவு கொடுப்பது என்ற நிலைப்பாட்டைத்தான் பவன் கல்யாண் எடுத்திருக்கிறார் என்று ஜனசேனா கட்சி வட்டாரம் கூறியதாக ஒரு செய்தி உலாவிக்கொண்டிருக்கிறது.
2014-ம் ஆண்டிலிருந்து என்.டி.ஏ கூட்டணியில் ஜனசேனா கட்சி இருந்துவருகிறது. தெலுங்கு தேசம் கட்சியும் என்.டி.ஏ-வில் இருந்துவந்தாலும், 2018-ல் அது என்.டி.ஏ-வைவிட்டு வெளியேறியது. ஆந்திராவில் ஜனசேனா - தெலுங்கு தேசம் - பா.ஜ.க என்ற கூட்டணியை உருவாக்க விரும்பினார் பவன் கல்யாண். ஆனால், அது முடியாமல் போனது குறிப்பிடத்தக்கது.
`ஆந்திர அரசியலை பொறுத்த வரையில் ஜெகன் தனித்தே களம் காணுவார். பாஜக-வுக்கும் ஜெகனுக்கும் பெரிய பிரச்னைகள் இல்லை. மத்தியில் பாஜகவின் அனைத்து மசோதாக்களுக்கும் ஆதரவு அளித்தவர் ஜெகன். இதனால், தேர்தலுக்கு பின், பாஜக-வுக்கு ஜெகனின் ஆதரவு வேண்டும் என நினைக்கலாம். ஆனால் பாஜக - தெலுங்கு தேசம் - ஜன சேனா என கூட்டணி அமைத்தால், ஜெகனின் ஆட்சியை கடுமையாக விமர்சிக்க வேண்டிய நிலை பாஜகவுக்கு வரலாம். அதே போல, ஜெகனை விமர்சிப்பதில் பாஜக மென்மையான போக்கை கடைப்பிடிப்பதில் பவன் கல்யாணுக்கும் தெலுங்கு தேச கட்சியினருக்கும் உடன்பாடு இல்லாமல் இருக்கலாம் என்ற கருத்துகளும் உலவுகிறது. எது எப்படி இருந்தாலும், ஒரு பக்கம் `இந்தியா’ கூட்டணி வலுவாக ஒற்றுமையாக இருப்பதும், மறுபக்கம் பாஜக கூட்டணியில் இருந்து கட்சிகள் விலகுவதும், தேசிய அளவில் அக்கூட்டணிக்கு பாதிப்பை ஏற்படுத்த தான் செய்யும்’ என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk
from India News https://ift.tt/mTxJHnY
0 Comments