புதுச்சேரி: `விஸ்வரூபமெடுக்கும் கோயில் நில அபகரிப்பு விவகாரம்’ - பாஜக எம்எல்ஏ-க்களுக்கு நெருக்கடி?!

புதுச்சேரியின் புகழ்பெற்ற கோயில்களில் ஒன்றான காமாட்சி அம்மன் கோயிலுக்கு, ரெயின்போ நகரில் ரூ.50 கோடி மதிப்புள்ள 64,000 சதுரடி நிலம் இருக்கிறது. அந்த நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்ததுடன், வீட்டு மனைகளாக மாற்றி விற்பனை செய்துவிட்டதாக கோயில் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த சி.பி.சி.ஐ.டி போலீஸ், எஸ்.பி மோகன்குமார் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு ஒன்றை அமைத்தது. உடனடியாக விசாரணையில் இறங்கிய அந்தக் குழு, கோயில் நிலத்தை போலி உயில் மூலம் தனியார் பெயருக்குப் பதிவு செய்த வில்லியனூர் சார் பதிவாளர் சிவசாமியுடன், வீட்டு மனைகளாக மாற்றி விற்பனை செய்ததாக 12 பேரை  கைது செய்தது.

சர்ச்சைக்குரிய நிலத்தின் ஒரு பகுதி

அதையடுத்து நிலம் கிரையம் செய்யப்பட்ட காலகட்டமான 2021-ல் தாசில்தாராக இருந்த பாலாஜியும், நில அளவை துறையின் இயக்குநராக இருந்த ரமேஷும் குற்றவாளிகளாக சேர்க்கப்பட, அவர்கள் தலைமறைவானார்கள். வழக்குப் பதிவு செய்தபோது பாலாஜி மீன்வளத்துறையின் இயக்குநராகவும், ரமேஷ் உழவர்கரை நகராட்சி ஆணையராகவும் இருந்தவர்கள் என்பதுதான் இதில் ஹைலைட். அதையடுத்து அவர்களின் முன் ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததையடுத்து, சென்னையில் பதுங்கியிருந்த அவர்களை கைது செய்தது போலீஸ். அதையடுத்து `இந்த நில அபகரிப்பில் காமராஜர் தொகுதியின் பா.ஜ.க எம்.எல்.ஏவான ஜான்குமாரும், அவரது மகனும் நெல்லித்தோப்பு தொகுதியின் பா.ஜ.க எம்.எல்.ஏவான ரிச்சர்டு ஜான்குமாரும் ஈடுபட்டிருக்கிறார்கள் எனத் தெரிய வந்தது.

தங்கள் குடும்ப உறுப்பினர்கள் பெயரில் அந்த இடத்தை கிரையம் செய்திருக்கின்றனர். அதனால் அவர்களையும் வழக்கில் சேர்த்து கைது செய்ய வேண்டும்’ என்று காங்கிரஸ், தி.மு.க, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளும், சமூக அமைப்புகளும்  களமிறங்கின. அதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த எம்.எல்.ஏ ஜான்குமார், ``2021-ல் ரெயின்போ நகரில் நான்கு மனைகள் ரூ.1.39 கோடிக்கு விலைக்கு வந்தது. அனைத்து பத்திரங்களும் சரியாக இருந்ததால் என் குடும்பத்தினர் பெயரில் வாங்கினேன். என் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் பதவி விலகவும் தயார்” என்று கூறியிருந்தார்.

சென்னை உயர் நீதிமன்றம்

அதையடுத்து `காமாட்சி அம்மன் கோயில் நிலம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை ரத்து செய்வதுடன், அவற்றை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று வேல்முருகன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். 26.09.2023 அன்று அந்த மனு மீதான விசாரணையில், ``நில அபகரிப்பு குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் எம்.எல்.ஏக்கள் உள்ளிட்ட யாரையும் விட மாட்டோம்’’ என்றார் புதுச்சேரி அரசின் வழக்கறிஞர்.

அதையடுத்து, ``மக்கள் பிரதிநிதிகளாக இருப்பவர்கள் உண்மையாக நம்பிக்கையாக பணியாற்ற வேண்டும். கோயில் சொத்துக்கள் பொது சொத்துக்கள் என்பதால் எம்.எல்.ஏக்கள் அவற்றை பாதுகாக்க வேண்டும். அதனால் கோயில் நிலத்தை இரண்டு எம்.எல்.ஏக்களும் உடனே ஒப்படைத்து தங்கள் நேர்மையை நிரூபிக்க வேண்டும்.

அத்துடன் தங்களை விசாரணைக்கும் உட்படுத்திக் கொள்ள வேண்டும். சி.பி.சி.ஐ.டி இந்த விவகாரத்தை முழுமையாக விசாரிக்க வேண்டும்” என்று கூறி விசாரணையை தள்ளி வைத்தார் நீதிபதி.

இந்நிலையில் இந்த விவகாரத்தை `இந்தியா’ கூட்டணி கையிலெடுத்திருக்கிறது. கோயில் நிலத்தை மீட்கக் கோரியும், சட்டவிரோத செயலில் ஈடுபட்டவர்கள் மீது பாரபட்சமற்ற நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் ஊர்வலமும், ஆர்ப்பாட்டமும் நடந்தது. ஊர்வலத்தின் முடிவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், `கோயில் நிலத்தை அபகரித்த குற்றவாளிகளை பாதுகாக்கக் கூடாது. சென்னை உயர் நீதிமன்றத்தின் கண்டனத்திற்கு உள்ளான பா.ஜ.க எம்.எல்.ஏக்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். நிலத்தை கையகப்படுத்தி கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும்.

புகழ்பெற்ற கோயில்களின் சொத்துகள், ஆபரணங்கள், நிலங்களை ஆய்வு செய்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். தனி நபர்களால் சட்டவிரோதமாக அபகரிக்கப்பட்ட திருபுவனை ஸ்பின்னிங் மில் நிலத்தை திரும்பப் பெற வேண்டும். நில அளவை பதிவேடு துறையை புனரமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

தொடர்ந்து பேசிய எம்.பி வைத்திலிங்கம், ``புதுவையில் போலி ஆவணங்கள் தயாரித்து நிலத்தை அபகரிப்பது இந்த ஆட்சியில் அதிகரித்துள்ளது. காமாட்சியம்மன் கோயில் நில விவகாரத்தில் நிலத்தை கையகப்படுத்தி கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் புதுவை அரசு இதற்கான பணியை தொடங்கவில்லை. எனவே தீர்ப்பை அமல்படுத்தாத அரசு மீது சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியிடம் புகார் மனுவை அளிக்க உள்ளோம்’ என்றார். அதையடுத்து `இந்தியா’ கூட்டணி கட்சி நிர்வாகிகள் தலைமை செயலகத்தில் மனு அளித்தனர். இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் இந்த விவகாரத்தை தீவிரமாக எடுத்து இருப்பது பாஜக எம்.எல்.ஏக்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி இருகிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk



from India News https://ift.tt/s4QJDa8

Post a Comment

0 Comments