``அரசியல்வாதியைப்போல பேசியிருக்கிறீர்கள்!” – ஆளுநர் தமிழிசைக்கு சந்திர பிரியங்காவின் அட்மின் பதிலடி

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் ரங்கசாமி தலைமையிலான அமைச்சரவையில், அமைச்சராக இருந்தவர் காரைக்கால் நெடுங்காடு தொகுதியின் என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ-வான சந்திர பிரியங்கா. போக்குவரத்து, ஆதிதிராவிடர் நலன் மற்றும் தொழிலாளர் நலத்துறை உள்ளிட்ட முக்கியை துறைகளை வைத்திருந்த இவர், சாதி மற்றும் பாலினரீதியில் தாக்கப்படுவதால் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

எதிர்க்கட்சிகள் இந்தப் பிரச்னையைக் கையிலெடுத்திருக்கும் நிலையில், `சந்திர பிரியங்காவுக்கு மீண்டும் அமைச்சர் பதவியை வழங்க வேண்டும்’ என்று காரைக்காலில் அவரது ஆதரவாளர்கள் குரலெழுப்ப ஆரம்பித்திருக்கின்றனர். ஆனால், ``அமைச்சராக சந்திர பிரியங்காவின் செயல்பாடுகள் முதல்வருக்கு திருப்தியளிக்கவில்லை. அதன் காரணமாகவே அமைச்சர் பதவியிலிருந்து சந்திர பிரியங்கா, முதல்வரால் பதவி நீக்கம் செய்யப்பட்டார்” என்று கருத்து தெரிவித்திருக்கிறார் துணைநிலை ஆளுநர் தமிழிசை.

தமிழிசை

சந்திர பிரியங்கா அமைச்சராக இருந்தபோது அவரது அலுவல் சார்ந்த செய்திகள் அனைத்தும், ’போக்குவரத்துத்துறை அமைச்சர்' (Transport Minister) என்ற வாட்ஸ்அப் குழு மூலமாகவே செய்தியாளர்களுக்கு அதிகாரபூர்வமாகப் பகிரப்பட்டது. அந்தக் குழுவில் ஆளுநர் தமிழிசையின் கருத்துக்கு எதிர்வினையாற்றி சந்திர பிரியங்காவின் அட்மின் போட்டிருக்கும் பதிவில், ``மாண்புமிகு புதுவை ஆளுநர் அவர்களுக்கு சிரம் தாழ்ந்த  வணக்கங்கள். ஒரு வாரத்துக்கு முன்பு கோயம்புத்தூரில் நடைபெற்ற G20 | Y20 மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய நீங்கள், `தான் வகிக்கும் துறைகளில் மிகச் சிறப்பாகச் செயலாற்றுகிறார்’ என்று புதுவை மாநிலப் போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்களை மனதார பாராட்டினீர்கள். அவரை சகோதரியாக பாவித்துப் பேசிய நீங்கள், அவர்களுக்கே தெரியாமல் அவர்களை நீக்குவதற்கான கோப்புகளைக் கையெழுத்து போட்டுவிட்டு, அவசரமாக வெளியூர் பயணம் சென்றுவிட்டீர்கள். பயணத்தை முடித்து சென்னைக்குத் திரும்பிய நீங்கள், ’அமைச்சர் சரியாகச் செயல்படவில்லை என்று 6 மாதங்களுக்கு முன்பே முதல்வர் என்னிடம் தெரிவித்தார். அப்போது நான் அதை ஏற்கவில்லை.

மீண்டும் முதல்வர் சொன்னபோது ஏற்றுக்கொண்டேன்’ என்று, ஆளுநர் என்பதை மறந்து ஓர் அரசியல்வாதியைப்போல பேட்டி அளித்திருக்கிறீர்கள். ’சகோதரி சந்திர பிரியங்கா என்னை அடிக்கடி சந்திப்பார்' என்று ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அமர்ந்திருந்த மேடையில் கூறிய நீங்கள், `மற்ற அமைச்சர்களைப்போல அவர் என்னை அதிகமாகச் சந்தித்ததில்லை' என்று பொய் சொல்வது, விந்தையாக இருக்கிறது. மேலும், உங்களுக்கு இவ்வளவு ஞாபகம் மறதி என்பதே, எங்களுக்கு இப்போதுதான் தெரியவருகிறது.

இது மிகவும் எங்களுக்கு மன வேதனை அளிக்கிறது. `புதுச்சேரியில் எந்த கோப்புகளை அனுப்பினாலும் திருப்பி அனுப்புகின்றனர். காலதாமதம் ஆகிறது. என்னால் சரியாகச் செயல்பட முடியவில்லை’ என மாண்புமிகு முதல்வர், செய்தியாளர்கள் முன்பே ஒப்புக்கொண்ட நிலையில், போக்குவரத்துத்துறை அமைச்சரை மட்டும் பணி நீக்கம் செய்தது ஏன் என்ற கேள்வி அனைவர் மனதிலும் ஓடிக்கொண்டே இருக்கிறது. ஒரு பெண் என்பதாலா... இல்லை, ஒரு தலித் பெண் என்பதாலா... இல்லை, வசதி படைத்தவர் இல்லை... அவரைக் கேட்க யாரும் நாதியில்லை என நினைத்தா?

தந்தையாக, தாயாக, சகோதரனாக, சகோதரியாக, பிள்ளையாக  நினைத்து அவர்களுக்குப் பின் பல பேர் இருக்கின்றோம்  புதுவை  முதல்வர் ரங்கசாமி ஐயா, நீங்கள் அரசு முறை பயணமாக காரைக்கால் வந்தபோதெல்லாம், தன்னுடைய தந்தையைப்போல பாவித்து மிக பிரம்மாண்ட வரவேற்பு அளித்து அழகு பார்த்தவர் எங்கள் அமைச்சர். அவரை பதவியிலிருந்து விலக்க உங்களுக்கு நெருக்கடி அளித்தவர்கள் யார்... அவர்களைவிட எந்த விதத்தில் நாங்கள் செயல்பாட்டில் குறைந்துவிட்டோம்?

சந்திர பிரியங்கா

தற்போது எங்கள் அமைச்சருக்கு எதிராக ஆட்சியாளர்கள் அனைவரும் பேசி வருவது எதனால்... அதை நீங்கள் மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். எங்கள் அமைச்சருக்கே மீண்டும் அமைச்சர் பதவியை வழங்கி,  புதுச்சேரி மக்களுக்கு முன் உதாரணமாக திகழ வழிவகை செய்யுமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். `புதுவை அமைச்சரவையில் தற்போது மாற்றம் இல்லை. தொடர்ந்து போக்குவரத்துத்துறை அமைச்சராக சந்திர பிரியங்கா அவர்களே நீடிப்பார்' என்ற செய்திக்காக காத்திருக்கிறோம் முதல்வர் அவர்களே” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்த பதிவு குறித்து கருத்து கேட்பதற்காக சந்திர பிரியங்காவை செல்போன் மற்றும் வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொள்ளமுயன்றோம். ஆனால் அவரைத் தொடர்புகொள்ள முடியவில்லை.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk



from India News https://ift.tt/UygRYlt

Post a Comment

0 Comments