“சட்டமன்ற இருக்கை விவகாரத்தில் ஏன் அ.தி.மு.க இவ்வளவு அழுத்தம் காட்டுகிறது?”
“சட்டமன்ற மரபுப்படி தலைவர் அருகில்தானே துணைத்தலைவர் அமர வேண்டும்! அதைத்தானே கேட்கிறோம். முடியாது என்றால் மற்ற கட்சிகளுக்கு கொடுத்ததையும் மாற்றியிருக்க வேண்டுமே! காங்கிரஸ் சட்டமன்றத் துணைத்தலைவருக்கு மட்டும் முன்வரிசையில் காங்கிரஸ் தலைவருக்கு அருகிலேயே இருக்கும்போது, அ.தி.மு.க-வுக்கும் கொடுக்க வேண்டும் என்று நாங்கள் கேட்க மாட்டோமா?”
“நீங்கள் கோரிக்கை மேல் கோரிக்கை வைத்தும் சபாநாயகர் செவிமடுக்கவில்லையே!”
“சபாநாயகர் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யாமல், அரசியல் காழ்ப்புணர்ச்சி இல்லாமல் நியாயமாக, நடுநிலையோடு நடந்துகொள்வார் என்று நம்பி கோரிக்கை வைத்திருக்கிறோம். நியாயமான முடிவெடுப்பார் என்று இன்னமும் எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. நாங்கள் கேட்பது எங்கள் கட்சியின் உரிமை, அதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.”
“சரி, நீங்கள் கேட்டாலும் இறுதி முடிவு வேண்டிய அதிகாரம் சபாநாயகருக்கு மட்டும்தானே இருக்கிறது?!”
“ஆமாம், சபாநாயகருக்குத்தான் இதில் உரிமை இருக்கிறது. அதனால்தான் அவரிடம் கேட்கிறோம்.”
“யாருடைய பாவத்தையும் இனி சுமக்க வேண்டியதில்லை... அப்பாடா என இருக்கிறது என்கிறாரே சி.வி.சண்முகம்! பா.ஜ.க அவ்வளவு பெரிய சுமையாக இருந்ததா?”
“பொதுக்கூட்டத்தில் பேசும்போது அவரவர் கருத்தை அவரவர் சொல்ல கருத்துச் சுதந்திரம் இருக்கிறது. இதில் என்ன தவறு இருக்கிறது?”
“அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதித் திட்டத்தில் முறைகேடு நடந்திருப்பதாக சி.ஏ.ஜி. அறிக்கை கூறுகிறதே?”
“சி.ஏ.ஜி அறிக்கை மதிப்பீடு சார்ந்தது. ஒரு திட்டத்தை இப்படிச் செய்ததற்குப் பதிலாக அப்படிச் செய்திருந்தால் இவ்வளவு பணம் மிச்சமாகியிருக்கும் என்று மதிப்பீடு செய்து சொல்லுவார்கள். அதைவைத்து முறைகேடு என்று சொல்லிவிட முடியாது. கடந்த தி.மு.க ஆட்சியிலும் கூட இதுபோன்ற மதிப்பீடுகளை சி.ஏ.ஜி. கொடுத்திருக்கிறது. ஒவ்வொரு ஆண்டுதோறும் மதிப்பீட்டு அறிக்கைகளை கொடுத்துக்கொண்டே இருப்பார்கள்.”
“ஆனால் ஒரே வீட்டுக்கு 2 முறை மானியம் கொடுத்தது, பயனாளிக்கு பதிலாக ஒப்பந்ததாரருக்கு மானியம் கொடுத்தது போன்ற முறைகேடுகள் நடந்ததாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளதே?”
“எடுத்த எடுப்பிலேயே அவற்றை ஊழல், முறைகேடு என்று சொல்ல முடியாது. தீர விசாரித்த பின்னரே உண்மையை அறிய முடியும்.”
“தி.மு.க கூட்டணி உடையும் என்ற அ.தி.மு.க-வின் நினைப்பு நினைவேறாது என்கிறாரே வைகோ?”
“தி.மு.க கூட்டணியில் இருக்கும் கட்சிகளுக்கு இடையே ஒத்த கொள்கை கிடையாது. பா.ஜ.க-வை வீழ்த்த வேண்டும் என்பது மட்டும்தான் அவர்களுக்குள் இருக்கும் ஒற்றுமை. காவிரியில் தண்ணீர் கேட்டுப் பெற முடியாமல் காங்கிரஸ் அரசிடம் விட்டுக் கொடுத்திருக்கிறது தி.மு.க அரசு. அதேபோல முல்லைப் பெரியாறு விவகாரத்திலும் கேரள கம்யூனிஸ்ட் அரசிடம் விட்டுக்கொடுத்திருக்கிறது. இதுபோல மாநில உரிமை விவகாரங்களில் கூட கண்டிக்க முடியாத நிலையில், விட்டுக்கொடுத்துதான் தி.மு.க கூட்டணியை தக்கவைத்திருக்கிறது. அவரவருக்கான அங்கீகாரத்தை தி.மு.க கொடுக்காவிட்டால், அதற்குரிய முடிவுகள் வெளிப்படும். கட்டு அவிழும்போது மூட்டை சிதறுவதைப் போல தி.மு.க கூட்டணியும் சிதறத்தான் போகிறது.
“சரி, I.N.D.I.A கூட்டணியில் இருக்கும் கட்சிகள் உங்கள் அணிக்கு வந்தால் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறீர்களா?”
“இதைப்பற்றி கருத்துச்சொல்லும் அதிகாரம் எனக்கு இல்லை. பொதுச்செயலாளர்தான் கூட்டணி குறித்து முடிவு செய்ய வேண்டும்.”
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk
from India News https://ift.tt/IqG2Qt6
0 Comments