சேலம், அதிமுக மாநகர் மாவட்ட, சூரமங்கலம் பகுதி கழகம் ஒன்று மற்றும் இரண்டு பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டத்தில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், ``பூத் கமிட்டி எந்த அளவுக்கு வலிமையாக உள்ளதோ அந்த அளவுக்கு வெற்றி வாய்ப்பு இருக்கும். பூத் கமிட்டி உறுப்பினர்கள் தங்கள் பகுதியில் தகுதி வாய்ந்த புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். போலி வாக்காளர்களை கண்டறிந்து அவர்களை நீக்க வேண்டும். தேனீ போல் சுறுசுறுப்பாக செயல்பட்டு நமக்கு கிடைக்கக்கூடிய வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் கிடைக்க செய்ய வேண்டும். இந்தப் பணிகளை சிறப்பாக செயல்படுத்தினால் நமது வேட்பாளர்கள் எளிதாக வெற்றி பெற முடியும்.
இன்றைய ஆட்சியாளர்கள் தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளில் 95 சதவீதம் நிறைவேற்றதாக கூறுகின்றனர். ஆனால் அவர்களால் பத்து சதவீதம் கூட நிறைவேற்ற முடியவில்லை. ஆனால் மக்களிடம் மட்டும் அழகாக பேசுவார்கள். அதனை பூத் கமிட்டி உறுப்பினர்கள் முறியடிக்க வேண்டும். எதிரிகளும் மூக்கு மேல் விரலை வைக்கும் அளவுக்கு நல்லாட்சியை தந்தது அதிமுக அரசு. இப்போது திமுக-வுக்கு வாக்களித்துவிட்டு வேதனைப்பட்டு கொண்டிருக்கிறோம் என்று மக்கள் எங்கு பார்த்தாலும் பேசிக் கொண்டிருக்கின்றனர்.
கொரோனா தொற்றுக்காலம் முடிந்து இயல்பு நிலைக்கு திரும்பி கொண்டிருக்கும் இந்த வேளையில், பொதுமக்கள் தலையில் பெரும் சுமையை சுமத்தியுள்ளது திமுக ஆட்சி. மின்சார கட்டணம், வீட்டு வரி, தொழில் வரி பல மடங்கு உயர்த்தி உள்ளனர். தேர்தல் நேரத்தில் அனைத்து பேருந்துகளிலும் மகளிர் கட்டணம் இல்லாமல் பயணிக்கலாம் என்று அறிவித்தார்கள். ஆனால் இப்போது அடையாளப்படுத்தப்பட்ட பேருந்துகளில் மட்டுமே செல்ல முடியும் என்ற நடைமுறையை செயல்படுத்தி உள்ளனர். இது ஏமாற்று வேலை. தேர்தல் நேரத்தில் அனைவருக்கும் நகை கடன் தள்ளுபடி என்றார்கள், இப்போது தகுதியானவர்களுக்கு மட்டும்தான் என்று கூறுகிறார்கள். திமுக வாக்குறுதியை நம்பி 48 லட்சம் பேர் நகை அடகு வைத்தனர். 13 லட்சம் பேருக்கு தான் தள்ளுபடி ஆனது.
கிட்டதட்ட 35 லட்சம் பேர் வட்டியுடன் கடனை திருப்பி செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. பலர் அந்த நகையை மீட்க முடியாமல் உள்ளனர். இதுதான் திராவிட மாடல் ஆட்சி
அனைத்து குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகை என்று கூறிவிட்டு இப்போது தகுதியானவர்களுக்கு என்று கூறுகின்றனர். 10 ஏக்கர் நிலம், கார் வைத்துள்ளவர்களுக்கு எல்லாம் கொடுத்துள்ளனர். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எல்லாம் கிடைக்கவில்லை.
12 லட்சம் பேருக்கு தாலிக்கு தங்கம் திட்டத்தின் மூலம் நிதி உதவி வழங்கியது அதிமுக அரசு. 120 கோடியில் பிரம்மாண்டமான சட்டக் கல்லூரியை கட்டிக் கொடுத்தது அதிமுக அரசு. திமுக ஆட்சி பொறுப்பேற்று இரண்டரை ஆண்டுகள் ஆகிவிட்டது. பலமுறை முதலமைச்சர் ஸ்டாலினும் உதயநிதி ஸ்டாலின் இங்கு வந்துள்ளனர். என்ன திட்டத்தை தந்துள்ளனர். அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை தான் திறந்து வைக்கின்றனர். அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்தது. சட்டத்தின் ஆட்சி நடந்தது. ஆனால் இப்போது நாள்தோறும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, முதியோர்களை கொலை செய்து நகைகளை பறித்து செல்லும் சம்பவம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இளைஞர்கள், மாணவர்கள் கஞ்சா போதையினால் சீரழிந்து கொண்டிருக்கின்றனர். இந்த கஞ்சா போதை ஆசாமிகள் தான், அங்கே வன்முறையில் ஈடுபடுவதாக செய்திகள் சொல்கின்றன.
திமுக ஆட்சி வந்த பிறகு கழக நிர்வாகிகள் மீது வழக்கு போடுவது பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுப்பது... இதுதான் அவர்கள் செய்யும் செயல். அதிமுக ஆட்சியின் போது இந்திய அளவில் போராட்டம் அதிக நடந்த மாநிலமாக இருந்தது. அந்த அளவுக்கு ஜனநாயக ஆட்சி நடந்தது.
இப்போது போராட்டங்களை கண்டு அஞ்சுகின்றனர். அதனை எதிர்கொள்ள தைரியம் இல்லை. மக்களின் போராட்டங்களை தடுத்து நிறுத்துவது ஜனநாயக விரோதம். பொய்யான வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை. அதனால் மக்கள் அதனை எதிர்த்து போராடுகின்றனர். முன்பு, தமிழக மக்களை கடனாளியாக வைத்துள்ளது என்று ஸ்டாலின் குற்றம் சாட்டினர்
2021இல் 4 லட்சத்து 35 ஆயிரம் கோடி கடன் இருந்தது. இரண்டரை ஆண்டு திமுக ஆட்சியில், இரண்டு லட்சத்து 73 ஆயிரம் கோடி கடன் வாங்கியுள்ளனர். அதிமுக ஆட்சியில் தமிழகம் முழுவதும் புதிய சாலைகள் ஏராளமான திட்டங்களை தந்தோம். இப்போது திமுக ஆட்சியில் எந்த திட்டமும் செய்யவில்லை.
இந்தியாவிலேயே கடந்த ஆண்டு அதிகமாக கடன் வாங்கிய மாநிலம் தமிழகம். இந்தியாவிலே தமிழகம் எடுத்துக்காட்டான மாநிலம் என்று ஸ்டாலின் பெருமை கூறுவார். கடன் வாங்கியதில் தான் தமிழகம் எடுத்துக்காட்டு. அதிமுக ஆட்சி அமைப்பதற்கு முன்பு திமுக ஒரு லட்சத்து 34 ஆயிரம் கோடி வைத்துச் சென்றனர். அதற்கு வட்டிக்கு வட்டி ஒரு லட்சம் கோடி. அதிமுக ஆட்சியில் கொரோனாவுக்கு 40 ஆயிரம் கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. அதிமுக 10 ஆண்டு ஆட்சியில் 81 ஆயிரம் கோடி தான் கடன். நாட்டு மக்களை கடனாளியாக ஆக்கியதுதான் திமுகவின் சாதனை.
சபரீசனும், உதயநிதி ஸ்டாலினும் முப்பதாயிரம் கோடியை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் முழிக்கின்றனர் என்று திமுக அமைச்சரே கூறியுள்ளார்.
அதனால்தான் இந்தியா கூட்டணி மூலம் அதிகாரத்துக்கு வந்து விட்டால் இந்த பிரச்னை தீரும் என்று பார்க்கின்றனர். அதிமுக-வில் உள்ள இரண்டரை கோடி தொண்டர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளும் விதமாக தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக முடிவெடுத்தோம்.
இந்த விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி வாய் திறக்கவில்லை என்று பலர் கூறி வருவதற்கு முற்றுபுள்ளி வைக்கிறேன். விவாத மேடையில் பங்கெடுப்பவர்கள் அதிமுகவை புரிந்து கொள்ள வேண்டும். அதிமுக மாநிலத்தின் உரிமையை காக்க நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்கும்.
அதிமுக-வை பொறுத்தவரை தமிழக மக்கள் தான் எஜமானர்கள். அவர்களுக்கு தேவையான திட்டங்களுக்காக தான் நாங்கள் முடிவெடுப்போம். அதிமுக மக்களின் மாபெரும் ஆதரவை பெற்று 40 இடங்களிலும் வெற்றி பெறுவோம். தமிழக மக்களின் நன்மைக்காக பாடுபடுவோம். தமிழக மக்களின் நன்மைக்காக எந்த திட்டம் வந்தாலும் அதனை ஆதரிப்போம். தமிழக மக்களுக்கு எதிரான திட்டங்களை எதிர்ப்போம்” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk
from India News https://ift.tt/yHpqmYu
0 Comments