"சாதியின் பெயரால் நாட்டை பிளவுபடுத்தும் முயற்சி... இது பாவம்!" - பிரதமர் மோடி

பீகார் மாநில சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரம் அரசியல் களத்தில் தற்போது பேசுபொருளாகியிருக்கிறது. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்குள் மத்திய அரசுக்கு இந்தச் சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரம் நெருக்கடியாக மாறும் எனக் கருதப்படுகிறது. இதற்கு முன்னரே, கடந்த 2014-ல் கர்நாடகா அரசு சாதி அடிப்படையிலான கணக்கெடுப்பை நடத்தியது. ஆனால் தரவுகளை பொதுவில் வெளியிடவில்லை. தெலங்கானா 2021-ல் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவித்தது. ஆனால், அது நிறைவேற்றப்படவில்லை. இந்த நிலையில், 1931-க்குப் பிறகு சாதி அடிப்படையிலான கணக்கெடுப்பு நடத்தி, தரவுகளை வெளியிட்ட முதல் மாநிலம் எனப் பீகார் அடையாளப்படுத்தப்படுகிறது.

ராகுல் காந்தி

இதைத் தொடர்ந்து, ஒடிசா மாநிலமும் இந்த ஆண்டு, சாதி அடிப்படையிலான கணக்கெடுப்பு நடத்தப்படும் எனத் தெரிவித்திருக்கிறது. 2011-ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான UPA அரசு ஆட்சியில் இருந்தபோது 'சமூக-பொருளாதார சாதிக் கணக்கெடுப்பு' நடத்தியது. ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகுதான் அந்தத் தரவுகள் வெளியிடப்பட்டது. இருப்பினும், அதில் சாதிகள் தொடர்பான தரவு இல்லை.

இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ``காங்கிரஸ் தலைமையிலான கடந்த UPA அரசு, உண்மையில், மக்கள் தொகை கணக்கெடுப்பை முடித்துவிட்டது. ஆனால் அதன் முடிவுகள் மோடி அரசால் வெளியிடப்படவில்லை.

மத்திய அரசு தேசிய சாதிவாரி கணக்கெடுப்பை விரைவில் நடத்த வேண்டும். சமூக அதிகாரமளிக்கும் திட்டங்களுக்கு, உறுதியான அடித்தளத்தை வழங்குவதற்கும், சமூக நீதியை ஆழப்படுத்துவதற்கும் இத்தகைய மக்கள்தொகை கணக்கெடுப்பு அவசியம்" எனக் குறிப்பிட்டார்.

இதன் அடிப்படையில்தான் பீகார் மாநிலம் தொடங்கி வைத்திருக்கும் இந்த செயல்பாடு இந்தியளவில் மத்திய அரசுக்கு ஒரு நெருக்கடியை ஏற்படுத்தும் என அரசியல் ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

நிதிஷ் குமார் - ராகுல் காந்தி

இந்தியா முழுவதும் இதுவரைக்கும் அமைக்கப்பட்ட அனைத்து பிற்படுத்தப்பட்டோருக்கான ஆணையமும் சாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்தியிருக்கிறது. மேலும் தொடர்ச்சியான கால இடைவெளியில் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்பட வேண்டும் என்றும் பரிந்துரைத்துரைத்திருக்கின்றன. குறிப்பாக மண்டல் கமிட்டி இட ஒதுக்கீட்டை முழுமையாக நடைமுறைப்படுத்த மற்றும் புதிய சமூக நலத்திட்டங்களை உருவாக்கச் சாதிவாரி கணக்கெடுப்பு மிகவும் அவசியம் எனக் குறிப்பிட்டிருக்கிறது.

இந்த நிலையில், மத்தியப் பிரதேசத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் பிரதமர் மோடி, குவாலியரில் நடந்தப் பொதுக்கூட்டத்தில் பேசியபோது, "சாதியின் பெயரால் நாட்டைப் பிளவுபடுத்த எதிர்க்கட்சிகள் முயற்சி செய்கின்றன.

பிரதமர் மோடி

அன்றைக்கு ஏழைகளின் உணர்வுகளோடு விளையாடினார்கள்... இன்றும் அதே விளையாட்டைத்தான் ஆடுகிறார்கள், முன்பு சாதியின் பெயரால் நாட்டைப் பிரித்தார்கள்... இன்றும் அதே பாவத்தைச் செய்கிறார்கள். தொடர்ந்து அவர்கள் செய்துவரும் ஊழலால் இன்று அவர்கள் மேலும் ஊழல்வாதிகளாகவே இருக்கிறார்கள். சாதி அடிப்படையில் பிளவுபடுத்தும் எந்த முயற்சியும் பாவம்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.மோடியின் இந்த பேச்சு, சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிரான மறைமுகமான விமர்சனம் என்று பார்க்கப்படுகிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk



from India News https://ift.tt/evzw9N8

Post a Comment

0 Comments