Narendra Modi: பிரதமர் மோடியின் 73-வது பிறந்தநாள்; கடந்த 5 பிறந்தநாள்களை எப்படிக் கொண்டாடினார் அவர்?

அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பிரபல கருத்துக்கணிப்பு நிறுவனமான 'மார்னிங் கன்சல்ட்', உலக தலைவர்களின் தலைமை குறித்து அண்மையில் ஆய்வு நடத்தியது. அதில், அமெரிக்கா உட்பட 22 நாடுகளின் மக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. அந்தக் கருத்துக்கணிப்பின் முடிவில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, உலகத் தலைவர்களின் தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்திருக்கிறார்.

மோடி

இந்தியாவில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் 76 சதவிகிதம் பேர் பிரதமர் மோடியின் தலைமையை அங்கீகரித்திருப்பதாகவும், 18 சதவிகித மக்கள் அவரை எதிர்ப்பதாகவும், 6 சதவிகித மக்கள் கருத்து தெரிவிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில், இன்று பிரதமர் மோடி தனது 73-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளில், பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கு, அவர்களின் பாரம்பர்ய தொழில்களின் திறன் மூலம் பொருளீட்ட உதவும் 'விஸ்வகர்மா யோஜனா' திட்டமும், 'ஆயுஷ்மான் பவா' என்ற புதிய சுகாதார பிரசாரமும் இன்று தொடங்கப்படவிருக்கிறது.

பிரதமர் மோடி;

செப்டம்பர் 17, 1950-ல் தாமோதர் தாஸ் மோடி-ஹீராபா மோடி தம்பதிக்கு 3-வது குழந்தையாகப் பிறந்தவர் நரேந்திர மோடி. அக்டோபர் 2001 முதல் மே 2014 வரையில் குஜராத் முதல்வராக இருந்தார். குஜராத் மாநிலத்தில் மிக நீண்டகாலம் முதல்வராக இருந்தவர் என்ற தனிச்சிறப்பு கொண்டவர். தற்போது இரண்டாவது முறையாக இந்தியாவின் பிரதமர் பதவியை வகித்து வருகிறார். இவர் தனது கடந்த 5 பிறந்தநாள்களை எப்படியெல்லாம் கொண்டாடியிருக்கிறார் என்பதைத் தொடர்ந்து பார்க்கலாம்.

மோடி

பிரதமர் மோடியின் பிறந்தநாள் 2022;

தென்னாப்பிரிக்க நாடான நமீபியாவுடனான ஒப்பந்தப்படி, நமீபியா அரசு எட்டு சிறுத்தைகளை நம் நாட்டுக்கு நன்கொடையாக வழங்கியது. சிறப்பு விமானத்தில் ஐந்து பெண், மூன்று ஆண் சிறுத்தைகள், நமீபியாவிலிருந்து மத்தியப் பிரதேசத்துக்கு எடுத்துவரப்பட்டன. பிரதமர் மோடி தன் பிறந்தநாளை முன்னிட்டு சிறுத்தைகளை, குனோ தேசிய பூங்காவில் திறந்துவிட்டார். அப்போது ஃபெடோரா தொப்பியை அணிந்துகொண்டு, பிரதமர் சிறுத்தைகளைப் புகைப்படம் எடுக்கும் புகைப்படம் வைரலானது.

பிரதமர் மோடியின் பிறந்தநாள் 2021;

2021-ம் ஆண்டு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, 1.5 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி சாதனை நிகழ்த்தியது. அதற்கு முன்பு ஒரு கோடி தடுப்பூசி ஒரே நாளில் செலுத்தப்பட்டிருந்தாலும், 1.5 கோடி என்ற எண்ணிக்கையை எட்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மோடி

பிரதமர் மோடியின் பிறந்தநாள் 2020;

பிரதமர் மோடியின் 70-வது பிறந்தநாளை ஒரு வாரம் சப்த சேவா தினமாகக் கொண்டாட வேண்டும் என பா.ஜ.க தலைவர் ஜே.பி.நட்டா அறிவித்தார். ஒவ்வொரு மண்டலத்திலும் 70 மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச செயற்கை கால் மற்றும் உபகரணங்கள் வழங்குவது, எளியோர் 70 பேருக்கு இலவச மூக்குக் கண்ணாடிகள் வழங்குவது, மருத்துவமனைகள், ஏழை மக்கள் வசிக்கும் இடத்துக்குச் சென்று 70 பேருக்கு பழங்கள் வழங்குவது, தேவைக்கேற்ப கொரோனா நோயாளிகள் 70 பேருக்கு பிளாஸ்மா தானம் வழங்கி, பா.ஜ.க-வினர் பிரதமர் மோடியின் பிறந்தநாளைக் கொண்டாடினர்.

பிரதமர் மோடியின் பிறந்தநாள் 2019;

பிரதமர் நரேந்திர மோடி தனது 69-வது பிறந்தநாளை குஜராத் மாநிலத்தில் செலவிட்டார். நர்மதா மாவட்டத்தில் நர்மதா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சர்தார் சரோவர் அணைக்கு சென்றார். சர்தார் சரோவர் அணை தனது முழுக்கொள்ளவை எட்டியதால் நடைபெற்ற பூஜைகளிலும், நமாமி நர்மதே பண்டிகையிலும் பிரதமர் மோடி பங்கேற்றார்.

பிரதமர் மோடி

பிரதமர் மோடியின் பிறந்தநாள் 2018;

பிரதமர் மோடி தனது 68-வது பிறந்தநாளைத் தனது நாடாளுமன்றத் தொகுதியான வாரணாசியில் கொண்டாடினார். அன்றைய தினம் 500 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.



from India News https://ift.tt/lJXH7a5

Post a Comment

0 Comments