Manipur: `அஸ்ஸாம் ரைஃபிள்ஸ்-ஐ திரும்பப் பெற வேண்டும்!' - ராஜ்நாத் சிங்கிடம் மைதேயி மக்கள் கோரிக்கை

கடந்த வியாழக்கிழமை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை, மணிப்பூரின் மைதேயி சமூக பிரதிநிதிகள் சந்தித்தனர். அப்போது அவர்கள், ``அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் (Assam Rifles) படையினர் எங்களுக்கும் குக்கி மக்களுக்கும் இடையே பாகுபாடு காட்டுகின்றனர். எனவே அவர்களை மணிப்பூரிலிருந்து திரும்பப் பெற வேண்டும்" என்று கோரிக்கை விடுத்துள்ளனர். 

மைதேயி சமூக மக்களின் ஒருங்கிணைப்புக் குழு, இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், ``எங்கள் குழுவின் பிரதிநிதிகள் வியாழக்கிழமை டெல்லியிலுள்ள மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை அவரது இல்லத்தில் சந்தித்து, ஒரு  கோரிக்கை மனுவை அளித்திருக்கிறோம்.

மணிப்பூர் கலவரம்

மணிப்பூர் பிரச்னைக்குத் தீர்வுகாண ஐக்கிய நாடுகள் சபையைக் குக்கி சமூகத்தினர் அணுகியதால், அரசுக்கு பெரும் சங்கடம் ஏற்பட்டிருக்கிறது. போதைப்பொருள் பயங்கரவாதம், சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் மற்றும் அவர்களை அடையாளம் காண்பது போன்ற பிரச்னைகளைப் பற்றியும் அமைச்சரிடம் பேசினோம். மேலும் முக்கியமான ஒன்றாக இனப்பாகுபாடு நடத்தப்படுவது குறித்தும் பேசினோம். அதாவது மைதேயி குழுக்களின் போராட்டங்களை அடக்க லத்தி சார்ஜ், ரப்பர் தோட்டாக்கள், கண்ணீர்ப் புகைக் குண்டுகள் மற்றும் சில சமயங்களில் நிஜ தோட்டாக்கள்கூட பயன்படுத்தப்படுகின்றன.

ஆனால், இதற்கு நேரேதிராக குக்கி மக்களின் எதிர்ப்புப் போராட்டங்கள் வித்தியாசமாகக் கையாளப்பட்டன. இது ஒரு பக்கச் சாய்விற்கு வழிவகுத்து, மைதேயி மக்களிடையே கவலை மற்றும் அச்சத்தை ஏற்படுத்தியது. இதனால் பாகுபாட்டுடன் செயல்படும் அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படையினரை உடனடியாக மணிப்பூரிலிருந்து வெளியேற்ற வேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருக்கிறோம்" எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

மோடி

கடந்த மாதம், மணிப்பூர் மாநிலத்தின் குக்கி சமூகத்தைச் சேர்ந்த 10 எம்.எல்.ஏ-க்கள், அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படையினரை மணிப்பூரிலிருந்து திரும்பப் பெறுவது, குக்கி பழங்குடியினரின் பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் வேண்டுகோள் விடுத்தது குறிப்பிடத்தக்கது.



from India News https://ift.tt/Q4Djx7A

Post a Comment

0 Comments