தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக, பாஜக இரண்டும் கூட்டணிக் கட்சிகளாக அங்கம் வகித்தாலும், இவ்விரு கட்சிகளுக்கான வார்த்தைப்போர்கள் தொடர் கதையாகவே இருக்கின்றன. ஒவ்வொரு முறையும் வார்த்தைப்போர் முற்றி கூட்டணியில் பிளவு ஏற்படுமோ என்கிற அளவுக்கு நகர்ந்தாலும், டெல்லி மேலிடம் இரு தரப்பிடமும் பேச்சுவார்த்தை நடத்தி, தற்காலிக ஒட்டுப் போடுகிறதே தவிர, முற்றுப்புள்ளி வைத்ததாகத் தெரியவில்லை.
ஆனால், இம்முறை, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “ஒரு கூட்டணியில் இருந்துகொண்டு கூட்டணி தர்மத்தை மீறி பேசுகின்ற எந்த ஒரு செயலையும், கருத்தையும் தன்மானம் உள்ள அதிமுக தொண்டன் எந்த நிலையிலும் ஏற்றுக்கொள்ளமாட்டான். சிட்டுக்குருவிக்கு பட்டம் கட்டினால், அது திமிர் பிடித்து ஆடும். வீட்டில் உள்ள பண்டபாத்திரங்களை எல்லாம் கொத்தும். சிட்டுக்குருவிகளுக்கே உள்ள புத்தி அது. ஒரு அரசியல் தலைவருக்கே லாயக்கில்லாத, பாஜக தலைவருக்கே லாயக்கில்லாத, சிறுமைபுத்திக் கொண்ட, தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தோடு அண்ணாமலை பேசி வருகிறார்.
இது குறித்து மேலிடத்திலும் சொன்னோம். நாங்கள் உங்கள் கூட்டணியில் இருக்கிறோம், இவரை திருத்துங்கள் என்று தெரிவித்தோம். திரும்ப திரும்ப இப்படி பேசினால் இனியும் பொறுத்து கொள்வதாக இல்லை. அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை. கூட்டணி குறித்து தேர்தல் வரும்போதுதான் முடிவு செய்ய முடியும். பாஜக எங்களுக்கு வேஸ்ட் லக்கேஜ்” என்று கூறி பாஜக-வுடனான கூட்டணிக்கு இப்போதைக்கு ஒரு முற்றுபுள்ளி வைத்திருக்கிறார்.
எப்போதெல்லாம் அதிமுக-வினர் டெல்லி சென்று பாஜக தேசிய தலைமை சந்தித்து வருகிறார்களோ அப்போதெல்லாம் இது போன்ற நிகழ்வு அதிமுக, பாஜக இடையே அரங்கேறுவது சம்பிரதாயமாக இருந்தது வந்தது. இப்போது அதற்கான முடிவுகட்டியது போல் இரு கட்சியினரின் செயல்பாடுகள், பேச்சுகள் அமைந்துள்ளதால், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில், ‘அதிமுக - பாஜக கூட்டணி முறிந்தால் தேர்தல் அரசியலில் யாருக்கு லாபம்?’ என்கிற கேள்வி தமிழக அரசியலில் வட்டமடிக்க தொடங்கியுள்ளது.
இது தொடர்பாக நம்மிடம் பேசிய அரசியல் விமர்சகர்கள் சிலர், “எடப்பாடி, அண்ணாமலை இடையே ஒரு நட்பு முரண் முதலில் இருந்தே இருந்தது. அது, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்குப் பிறகு பகை முரணாக மாறியிருக்கிறது. நகராட்சித் தேர்தல் தொகுதிப் பங்கீட்டிலும் இந்தப் பிரச்னை வந்தது. அண்ணாமலை கேட்டதைவிட எடப்பாடி குறைவாகக் கொடுப்பதாகச் சொன்னார். அந்த நேரத்தில் ஓ.பன்னீர்செல்வம் கூடுதலாக தந்துவிடலாம் என்று சொன்னார். ஆனால், எடப்பாடி விரும்பவில்லை. அண்ணாமலை தனியாகப் போட்டியிட்டபோது சராசரியாக 6% வாக்கு கிடைத்தது. இதன் மூலம் பா.ஜ.க வாக்குவங்கி மூன்று சதவிகிதத்திலிருந்து ஆறு சதவிகிதம் உயர்ந்திருப்பதாக அண்ணாமலைக் கருதுகிறார். 2014-ல் தனியாகக் கூட்டணி அமைத்த பா.ஜ.க., புதுச்சேரி சேர்த்து மூன்று இடங்களில் வெற்றிபெற்றார்கள். 2019-ல் அ.தி.மு.க கூட்டணி. மூன்று இடங்களையும் இழந்துவிட்டார்கள். இதைக் கொண்டு 2024-ல் என்ன வந்துவிடப்போகிறது என்பதைக் கணக்கு போடுகிறார் அண்ணாமலை.
இங்கு ஓ.பி.எஸ்., டி.டி.வி., சசிகலா என அ.தி.மு.க-வின் ஒருங்கிணைந்த வாக்கு தேவை. அதனால்தான் மீண்டும் மீண்டும் எல்லோரும் ஒருங்கிணைந்த வாக்கு என்று சொல்லிவருகிறார் அண்ணாமலை. எடப்பாடி அதை முற்றிலும் எதிர்க்கிறார். அதனால் நட்பு முரண், பகை முரணாக மாறிவிட்டது. அண்ணாமலையின் ஸ்டாண்ட், வியூ பாயின்ட் வேறு. எடப்பாடி அதற்கு நேர் எதிராக இருக்கிறார். கடைசி நேரத்தில் அவியல் கூட்டணி, தொண்டர்கள் மத்தியில் ஒருங்கிணைப்பில்லாத கூட்டணி, மாநிலத் தலைமைக்கு ஒத்துழைப்பில்லாமல் போவது எல்லாம் என்றைக்குமே தேறாது. கடைசி நேர முரண்பாடுகள் கூட்டணியைக் கவிழ்த்துவிடும். வெறும் தலைவர்கள் கைகுலுக்கிக் கொள்வது மட்டும் வெற்றி பெறுவதில்லை. கீழே தொண்டர்களும் கைகுலுக்க வேண்டும். கடைசி வரை எலியும், பூனையுமாக இருந்துகொண்டு எப்படி வேலை பார்ப்பார்கள். அதற்காகத்தான் இன்று இரு கட்சிகளும் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார்கள்” என்கிறவர்கள், நாடாளுமன்ற தேர்தலில் இரு கட்சிக்களுக்கு இருக்கும் சவால்கள் குறித்து பகிர்ந்தனர்.
“இரண்டு கட்சிகளுக்கும் லாப, நஷ்டங்கள் இருக்கத்தான் செய்கின்றன். அதாவது பாஜக-வை பொறுத்தவரை இன்றும் பூத் அளவில் தங்களுக்கான பிரதிநிதிகளை எல்லா தொகுதியிலும் நிரப்பவில்லை. அதனால், பாஜக ஒரு தொகுதியில் நின்றாலும் அங்கு அதிமுக கீழ் மட்ட அளவில் வேலை செய்யும். இதனால் கணிசமான வாக்குகளை பெறுவதற்கு வாய்ப்பிருக்கிறது. அதேநேரத்தில் ‘பாஜக எங்களுடன் இருந்ததால்தான் கடந்த சட்டமன்ற தேர்தலில், வெற்றி வாய்ப்பை இழந்தோம்’ என்கிற மனநிலை அதிமுக தலைமைக்கு மட்டுமல்ல, தொண்டர்கள் மத்தியிலும் இருக்கிறது.
எனவே பாஜக-வுடன் கூட்டணி அமைத்தால் அதிமுக-வினர் வேலை செய்வார்களா என்பதையும் இங்கு பார்க்க வேண்டியிருக்கிறது. ஏனென்றால் அதிமுக-பாஜக கீழ் மட்ட தொண்டர்கள் இன்னும் ஜெல் ஆகவில்லை என்பதை பல விஷயங்களில் பார்க்க முடிகிறது. எனவே அதிமுக கூட்டணி அமைத்து தனித்து நின்றால், இப்போது திமுக மீதிருக்கும் அதிருப்த்தி வாக்குகளை பெற்று சில தொகுதிகளில் வெற்றியடைய வாய்ப்பிருக்கிறது. அதோடு திமுக கூட்டணியில் இருக்கும் சில கட்சிகள் கூட அதிமுக-வை நோக்கி நகரலாம்.
பாஜக-வை பொறுத்தவரை இரு திராவிட கட்சிகளின் ஊழலை வெளியிட்டு வாக்கு சேகரிக்க போகிறோம் என்கிறார்கள். அதோடு, பிரதமர் நரேந்திர மோடிக்கு இருக்கும் ஒரு குறிப்பிட்ட சதவீத வாக்கும் தனது பாக்கெட்டில் விழும் என்று நம்புகிறார்கள். இப்போதைக்கு 15% வாக்கு பெறுவதை நோக்கி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நகர்கிறார். அதற்கேற்றார் போல் கூட்டணிகளை இணைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, பாஜக என மும்முனை போட்டி ஏற்பட்டால் கட்சிகளின் வாக்கு சதவீதத்தின் உண்மை நிலை தெரிந்துவிடும். அதிமுக-பாஜக வை பொறுத்தவரை வாழ்வா, சாவா என்கிற போராட்டம்தான் வரும் நாடாளுமன்ற தேர்தல்” என்கிறார்கள்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY
from India News https://ift.tt/0bXUtPD
0 Comments