`எடப்பாடி போட்ட உத்தரவு’ அண்ணா(மலை)-ஆல் வெடித்த அதிமுக - பாஜக மோதல்!

செப்டம்பர் 15-ம் தேதி பேரறிஞர் அண்ணாவின் 115-வது பிறந்தநாள் விழா தமிழ்நாடு முழுவதும் விமர்சையாக கொண்டாடப்பட்டது. தி.மு.க-வின் தேர்தல் வாக்குறுதியில் ஒன்றான மகளிருக்கான உரிமைத் தொகை திட்டம் அந்நாளில்தான் தொடங்கப்பட்டது.

எம்ஜிஆர் - அண்ணா

இந்நிலையில், 1956-ம் ஆண்டு மதுரையில் நடந்த விழா ஒன்றில் அண்ணா தான் பேசிய கருத்துக்கு அவர் மன்னிப்பு கோரியதாக தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை ஒரு கருத்தை நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருந்தார். ஆனால், அப்படி ஒரு சம்பவமே நடைபெறவில்லை என்று திராவிட இயக்கங்கள் மறுப்பு தெரிவித்து இருக்கிறது. ஆனால், தி.மு.க-வோ வழக்கத்துக்கு மாறாக கப்சிப்பென இருக்கிறது. இந்நிலையில்தான், இந்த விவகாரத்தை கையில் எடுத்த அ.தி.மு.க, அண்ணாமலையின் அவதூறு கருத்துக்கு கடுமையான கண்டனம் தெரிவித்து வருகிறது. இதற்கு பதில் கூறுவதாக அண்ணாமலை பேசிய பேச்சு, கூட்டணிக்குள் மீண்டும் பூகம்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

வழக்கமாக அண்ணா குறித்தோ பெரியார் குறித்து பா.ஜ.க-வின் அவதூறு கருத்துக்கு பதிலடி கொடுக்க முடியாமல் அமைதியாக இருந்து வரும் அ.தி.மு.க, அண்ணா குறித்து அண்ணாமலையில் பேச்சுக்கு மிக கடுமையான கண்டனங்களை பேசிவருவதும் டெல்லியில் சென்று அமித் ஷாவை அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி சந்தித்து வந்த மறுநாளே, பா.ஜ.க-வுக்கு எதிரான கருத்துகளை அ.தி.மு.க தலைவர்கள் பேசுவதும் அரசியல் ரீதியாக பல்வேறு கோணங்களை விரிவுப்படுத்துகிறது.

எடப்பாடி பழனிசாமி - அமித்ஷா

இதுதொடர்பாக அ.தி.மு.க-வின் சீனியர் அமைப்பு செயலாளர்களிடம் பேசினோம். ``எல்லா மாநிலங்களிலும் பா.ஜ.க-தான் சீட் பங்கீட்டை பேசும். ஆனால், தமிழ்நாட்டை பொறுத்தவரை அ.தி.மு.க தலைமையில் கூட்டணி என்பதால் சீட்டை இறுதி செய்யும் இடத்தில் நாங்கள்தான் இருக்கிறோம். ஒரே நாடு ஒரே தேர்தல், கூட்டணி உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பேசவேண்டுமென்று டெல்லி இருந்து வந்த அழைப்பை ஏற்று, செப்.14-ம் தேதி எடப்பாடி டெல்லிக்கு பயணப்பட்டார். அங்கு மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து மேற்கட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அதன்படிதான், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வுக்கு வழங்கப்பட்ட 5 சீட்டை இரட்டிப்பாக வழங்கவேண்டும் என்றும் தொகுதி பங்கீட்டை இப்போதே இறுதி செய்தால், தேர்தல் பணியாற்ற வசதியாக இருக்கும் என்றும் அமித் ஷா தரப்பில் கேட்கப்பட்டு இருக்கிறது.

ஆனால், தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பாக தொகுதி பங்கீட்டை செய்தால், கூட்டணிக்குள் குழப்பம் ஏற்பட்டு, தேர்தல் பணியில் சுணக்கம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக எடப்பாடி மறுத்துவிட்டார். மேலும், அ.தி.மு.க-வில் எந்த பிளவும் இல்லை. தினகரன், ஓ.பி.எஸை இணைக்க வாய்ப்பும் இல்லை என்று அமித் ஷா தரப்பிடம் விளக்கிவிட்டு, சென்னை திரும்பினார் எடப்பாடி.

அண்ணாமலை

நிலைமை இப்படியிருக்க, தமிழக பா.ஜ.கவோ, அதிமுக-விடம் 20 சீட் கேட்கப்பட்டதாக கிளப்பிவிட்டது. இதை எடப்பாடி ரசிக்கவில்லை. அதேபோல, அம்மா மறைவுக்கு பின்னர், கட்சியின் கொள்கைககளுக்கு அடிநாளமாக இருக்கும் அண்ணா, பெரியார் உள்ளிட்ட தலைவர்களை கொண்டாட நாங்கள் தவறிவிட்டோம். இது அரசியல் ரீதியாகவும் கொள்கை ரீதியாகவும் அ.தி.மு.க-வுக்கு பின்னடைவை தந்துவிட்டது. இதை சரிசெய்யவேண்டுமென்றுதான் அண்ணாவின் 115-வது பிறந்தநாளை விமர்சையாக கொண்டாட எடப்பாடி திட்டமிட்டார். அதற்காகதான் செப்.14-ம் தேதி டெல்லி சென்ற எடப்பாடி, செப் 15-ம் தேதி அதிகாலையில் பயணம் செய்து சென்னை திரும்பினார்.

இந்நேரத்தில்தான் அண்ணா குறித்து அவதூறு கருத்துகளை அண்ணாமலை பேசியதை அ.தி.மு.க கையில் எடுத்தது. தலைமையிடமிருந்து வந்த அறிவுறுத்தலின் பெயரில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செப்.15-ம் தேதியே பத்திரிக்கையாளர் சந்திப்பில் அண்ணமாலைக்கு கண்டனம் தெரிவித்தார். அதேபோல அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டத்திலேயே முன்னாள் அமைச்சர்களான சி.வி.சண்முகம், செல்லூர் ராஜூ உள்ளிட்டோர் அண்ணாமலைக்கு பதிலடி கொடுக்க தொடங்கினர். நாங்கள் எண்ணியதுபோலவே, அண்ணா மீது அண்ணாமலை அவதூறு செய்வதை தி.மு.க வேடிக்கை பார்க்கிறது.

சி.வி.சண்முகம்

உண்மையில் கூட்டணி விவகாரத்தில் முரண்பட்டு நிற்பது அண்ணாமலைதான். பா.ஜ.க தலைமை எடப்பாடியுடன் நெருக்கமாக இருப்பதால்தான், கூட்டணி தொடர்பாக ஆலோசனை செய்கிறது. இது அண்ணாமலைக்கு பிடிக்கவில்லை. தான் முன்னிலை ஆகவில்லை என்ற விரக்தியில் இப்படி ஏதாவது பேசுகிறார். முன்புபோல இனி எங்களால் அண்ணாமலையை சகித்து கொள்ளமுடியாது. கூட்டணி வேண்டாமென்று முடிவில் இருப்பது அண்ணாமலைதான். இதனால் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்பதைதான் சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் தெளிவுப்படுத்தி இருக்கிறார்." என்றனர் விரிவாக..!

தேர்தல் நெருங்க நெருங்க கூட்டணியில் இன்னும் பல அரசியல் அதகளங்கள் அரங்கேறும் போல் தெரிகிறது!



from India News https://ift.tt/zrds5B7

Post a Comment

0 Comments