``நீதித்துறையை ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும்!” - நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வேதனை

2008-ம் ஆண்டு தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமி, தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி வீட்டு வசதி வாரியத்துக்குச் சொந்தமான வீட்டை மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பாதுகாவலராக இருந்த கணேசன் என்பவருக்கு, ஒதுக்கியதில் முறைகேடு செய்ததாக ஐ.பெரியசாமி உள்ளிட்டோர்மீது 2012-ம் ஆண்டு, அ.தி.மு.க ஆட்சியின்போது லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் வழக்கு பதிவுசெய்தனர்.

இந்த வழக்கிலிருந்து அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்து சென்னை எம்.பி., எம்.எல்.ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை மறுஆய்வு செய்யும் வகையில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்திருக்கிறார்.

ஐ.பெரியசாமி, வளர்மதி

இதேபோல 2001-2006-ம் ஆண்டுகளில் அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் சமூக நலத்துறை அமைச்சராக இருந்த வளர்மதி, அவரின் குடும்பத்தினருக்கு எதிராகவும் சொத்துக்குவிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கிலிருந்து வளர்மதி உள்ளிட்டோரை விடுவித்து ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம், 2012-ம் ஆண்டு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை மறுஆய்வு செய்யும் வகையில் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்திருக்கிறார், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்.

இந்த இரு வழக்குகளும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் இன்று விசாரணைக்கு வந்தன. அப்போது, லஞ்ச ஒழிப்புத்துறையின் நடைமுறை மோசமாக இருக்கிறது எனவும், ஒவ்வொரு வழக்கிலும் இதே நடைமுறைகள் பின்பற்றப்படுவது அதிர்ச்சியளிக்கும் வகையில் இருப்பதாகவும் தெரிவித்த நீதிபதி, ``முன்னாள் அமைச்சர் வளர்மதிக்கு எதிரான வழக்கில், 100-க்கும் மேற்பட்ட சாட்சிகளை விசாரித்து ஏராளமான ஆவணங்களை ஆய்வுசெய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த நிலையில், குற்றம்சாட்டப்பட்டவர் மேல்விசாரணை கோரி தாக்கல் செய்த மனு அடிப்படையில் விசாரணை நடத்திய அதே புலன் விசாரணை அதிகாரி வழக்கை முடித்துவைக்க கூறியிருக்கிறார்” எனத் தெரிவித்தார்.

மேலும், இந்த வழக்குகளை எதிர்கொள்ள யாரும் விரும்பவில்லை எனக் கூறிய நீதிபதி, ``அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வழக்கைப் பொறுத்தவரை விடுவிக்கக் கோரிய மனுவும், வழக்கை ரத்துசெய்யக் கோரிய மனுவும் உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. இருப்பினும், வழக்கு தொடர அனுமதி வழங்கிய விவகாரத்தின் அடிப்படையில், சிறப்பு நீதிமன்றம் அவரை விடுவித்திருக்கிறது” எனக் குறிப்பிட்டார்.

நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்

``கீழமை நீதிமன்றங்களின் செயல்பாடுகளைப் பார்க்கும்போது நீதித்துறையை ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும்” என தெரிவித்த நீதிபதி, இந்த வழக்குகளின் மறுஆய்வு மனுவை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொள்வதால் தன்னை வில்லனாகப் பார்ப்பதாகவும், ஆனந்த் வெங்கடேஷ் என்ற தனிப்பட்ட முறையில் இந்த வழக்குகளை விசாரணைக்கு எடுக்கவில்லை எனவும் குறிப்பிட்டார்.

பின்னர் இரண்டு வழக்குகளிலும் லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் அமைச்சர் ஐ.பெரியசாமி, முன்னாள் அமைச்சர் வளர்மதி ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை அக்டோபர் 12-ம் தேதிக்கு தள்ளிவைத்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY



from India News https://ift.tt/OWmb0Tp

Post a Comment

0 Comments