பா.ஜ.க-வுடன் கூட்டணி இல்லையென்று அறிவிப்பதற்கு முன்பாக, குறிப்பிட்ட சில சீனியர்களுடன் பலகட்ட ஆலோசனை நடத்தினாராம் எடப்பாடி. ‘உங்களை நம்பித்தான் மிகப்பெரிய முடிவெடுக்கிறேன். எந்தப் பிரச்னை வந்தாலும், ஒற்றுமையாக இருந்து சமாளிக்க வேண்டும்’ எனச் சத்தியம் வாங்காத குறையாக அவர்களிடம் கேட்ட பிறகுதான் அடுத்தகட்ட நடவடிக்கையிலேயே இறங்கினாராம். தனக்குத் தோள் கொடுக்கும் முக்கிய நிர்வாகிகளே வழக்குகளுக்கு பயந்து பா.ஜ.க-வுக்காகப் பரிந்துபேச ஆரம்பித்துவிடுவார்களோ என்ற பயம்தான் இதற்குக் காரணம்.
பா.ஜ.க மாநிலத் தலைமையின் தொடர் சீண்டல்கள்தான் எடப்பாடியை இந்த முடிவை எடுக்கவைத்தது என்று சொல்லப்பட்டாலும், உண்மையான காரணம் டெல்லியில் ‘சுப்ரீம்’ பதவியில் கோலோச்சிய பிரமுகரின் ஆலோசனைதான் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். ‘தமிழ்நாட்டில் நடக்கும் குழப்பங்களெல்லாம் டெல்லி தலைமையின் வழிகாட்டுதலில்தான் நடக்கின்றன’ என்று அவர் உறுதியாகச் சொன்ன பிறகே, இப்படியொரு முடிவை எடுத்தாராம் எடப்பாடி.
ஜில் மாவட்டத்தில் அமைச்சருக்கும், ஆளுங்கட்சி மாவட்டச் செயலாளருக்குமான லடாய் வலுத்துக்கொண்டேபோகிறது. சொந்தக் கட்சி ஐடி விங்கை வைத்தே அமைச்சருக்கு எதிராகப் பல வேலைகளைச் செய்கிறாராம் மாவட்டம். அமைச்சர் உள்ளூரில் இல்லாத நாள்களில் கட்சி நிகழ்ச்சிகளை நடத்துவது, தப்பித் தவறி அவர் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றாலும், அவர் இல்லாதது மாதிரி போட்டோ, வீடியோக்களை எடுத்து கட்சியின் சமூக வலைதளத்தில் பதிவிடுவது என்று இறங்கியடிக்கிறதாம் மா.செ தரப்பு. ‘உள்ளூர் அரசியலில் அமைச்சர் ஆர்வம் காட்டுவதில்லை’ என்ற பிம்பத்தைத் தலைமையிடம் உருவாக்குவதே அவர்களது திட்டமாம். இதைத் தாமதமாகப் புரிந்துகொண்ட அமைச்சர், தனது சமூக வலைதள அட்மினுக்கு மெகா சைஸ் டேப்லெட்டுகளை வாங்கிக்கொடுத்து, தன் ஃபேஸ்புக் பக்கத்தில் அப்டேட்டுகளைத் தெறிக்கவிடுகிறாராம்.
‘எங்ககிட்டேயும் சீப்பு இருக்கு... நாங்களும் சீவுவோம்’ மொமன்ட்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் நகராட்சிக்கு உட்பட்ட சுனாமி நகரில், சிறுவர் பூங்கா திறப்பு விழாவில் கலந்துகொண்டு மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன். அப்போது ஒரு பெண், “எங்க பகுதியில கோயில் இல்லை. எங்களுக்கு ஒரு கோயில் கட்டித்தாங்க அண்ணாச்சி” என வித்தியாசமாகக் கோரிக்கைவைத்தார். அமைச்சரை முந்திக்கொண்டு அவருடைய உதவியாளர் கிருபாகரன், “நாங்க தி.மு.க-காரங்க. கோயில் வேணும்னா பா.ஜ.க-காரங்ககிட்ட போய்க் கேளும்மா” என முந்திரிக்கொட்டைத்தனமாக பதில் சொல்ல, கூட்டம் கொந்தளித்துவிட்டது.
தன் உதவியாளரின் சர்ச்சைப் பேச்சை கண்டிக்காமல், உடனே காரில் ஏறிப் புறப்பட்டுவிட்டார் அனிதா. ஏற்கெனவே போக்குவரத்துக் காவலரை கன்னத்தில் அறைந்த சம்பவம் பெரும் சர்ச்சையான நிலையில், மீண்டும் அமைச்சரின் உதவியாளர் சர்ச்சையில் சிக்கியது கனிமொழியின் கவனத்துக்குச் சென்றுவிட்டதாம். “பொதுவெளியில எப்படிப் பேசணும்னுகூடத் தெரியாத ஆளைத்தான் உதவியாளராக வெச்சுருக்கீங்களா?” என அனிதாவிடம் கடுகடுத்தாராம் கனிமொழி.
பா.ஜ.க கூட்டணியில் அங்கம்வகிக்கும் புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம், மூன்றாவது முறையாக வேலூரைக் குறிவைத்து தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்டார். `பெரிய கூட்டணி... வெற்றி உறுதி’ என்ற நம்பிக்கையில் சில ஸ்வீட் பாக்ஸுகளையும் செலவு செய்துவிட்டாராம். அவரது நம்பிக்கையில் இடியை இறக்கியிருக்கிறது அ.தி.மு.க - பா.ஜ.க பிளவு. “அண்ணே... செலவு செய்தது வரை போதும். தேர்தல் நேரத்தில் சூழலைப் பார்த்துட்டு மேற்கொண்டு வேலைகளைப் பார்க்கலாம்” என ஆலோசனை சொல்லியிருக்கிறார்களாம் அவரின் நலம் விரும்பிகள்.
ஆனால், அவரோ ‘‘தலைகீழாகத்தான் குதிப்பேன்” என்பதைப்போல, “ஹாட்ரிக் தோல்வியோ... அனுதாப வெற்றியோ... எதுவாக இருந்தாலும், தாமரைச் சின்னத்தில்தான் போட்டியிடுவேன்’’ என்று பிடிவாதம் காட்டுகிறாராம். ‘இது எங்கே போய் நிற்குமோ...’ எனக் கன்னத்தில் கைவைத்து உக்கார்ந்திருக்கிறார்களாம் அவரின் ஆதரவாளர்கள்.
போதைப்பொருள் மற்றும் ஆயுதக் கடத்தல் வழக்கில் பிரபல நடிகை ஒருவரின் முன்னாள் உதவியாளரை கஸ்டடியில் எடுத்து விசாரித்துவருகிறது என்.ஐ.ஏ. ஆரம்பத்திலேயே இதற்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று அந்த நடிகை அறிக்கைவிட்டுவிட்டார். என்றாலும், சர்ச்சை இன்னும் ஓய்ந்தபாடில்லை.
கஸ்டடியின்போது, நடிகைக்கும் இதற்கும் ஏதும் தொடர்பு இருக்கிறதா என்கிறரீதியிலும் அந்த உதவியாளரிடம் கேள்விகள் கேட்கப்பட்டனவாம். அதற்கு அவர் அளித்த பதில் அடிப்படையில், நடிகையிடமும் விசாரணை நடத்த என்.ஐ.ஏ அதிகாரிகள் முடிவுசெய்திருக்கிறார்களாம். இதனால் என்ன செய்வது எனத் தெரியாமல், தன் தந்தை மூலம் மத்தியில் ஆளும் தரப்பின் உதவியை நாடியிருக்கிறாராம் அந்த நடிகை. ஆனால், இதுவரை மேலிருந்து எந்த பாசிட்டிவ் பதிலும் வரவில்லை என்பதுதான் சோகம்!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk
from India News https://ift.tt/cW4bfsU
0 Comments