கடந்த மே மாதம் பற்றிக்கொண்ட மணிப்பூர் கலவரம், இன்னும் ஓய்ந்தபாடில்லை. ராணுவத்தினரை கொண்டு வந்து கலவரத்தை அடக்க முயன்றாலும் ஆங்காங்கே வன்முறைகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. கடந்த ஜூலை மாதம் காணாமல் போன இரண்டு மாணவர்கள் படுகொலை செய்யப்பட்ட செய்தி இரண்டு நாள்களுக்கு முன்பு வெளியானது. இதனால் இரண்டு நாள்களாக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். புதன் கிழமை மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் தடியடி நடத்தப்பட்டது. மாணவர்கள் நடத்திய பேரணியில் துணை ராணுவ படையினர் நடத்திய தாக்குதலில் காயம் அடைந்த 60க்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் நேற்று இரவு இம்பாலில் முதல்வர் பிரன்சிங்-கின் பூர்வீக வீட்டின் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்த முயற்சி செய்தனர். இரவில் இரண்டு திசைகளில் இருந்து வந்த இரண்டு கும்பல்கள் முதல்வரின் வீட்டை தாக்க முன்னேறியது. வீட்டில் இருந்து சிறிது தூரத்தில் போராட்டக்காரர்களை போலீஸாரும், பாதுகாப்புபடையினரும் தடுத்து நிறுத்தினர். போலீஸார் கண்ணீர் புகைக்குண்டுகளை போராட்டக்காரர்கள் மீது வீசினர். அப்படி இருந்தும் போராட்டக்காரர்கள் முன்னேற முயன்றனர். போலீஸார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். அதோடு உடனே மின்சாரம் நிறுத்தப்பட்டு போராட்டக்காரர்கள் விரட்டியடிக்கப்பட்டனர்.
போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்த வந்த வீட்டில், முதல்வர் இல்லை. அவர் வேறு ஒரு வீட்டில் பலத்த பாதுகாப்புடன் இருக்கிறார். ஆனாலும் முதல்வரின் பூர்வீக வீட்டிற்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதற்கு முன்பு போராட்டக்காரர்கள் அமைச்சர்களின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தி இருக்கின்றனர். எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முதல்வரின் பூர்வீக வீட்டிற்கும் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. நேற்று காலையில் போராட்டக்காரர்கள் இம்பால் மேற்கு மாவட்ட துணை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்தினர். அதோடு இரு போலீஸ் வாகனங்களுக்கும் தீவைத்தனர்.
புதிய கலவரத்தால் இம்பால் மேற்கு மற்றும் இம்பால் கிழக்கு மாவட்டத்தில் மீண்டும் ஊரடங்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் மீது இரண்டு நாள்களாக பாதுகாப்புப்படையினர் நடத்திய தாக்குதல் குறித்து விசாரிக்க தனி கமிட்டி அமைக்கப்பட்டு இருப்பதாக முதல்வர் பிரேன் சிங் மருமகனும், எம்.எல்.ஏ.வுமான ராஜ்குமார் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். மணிப்பூரில் மீண்டும் கலவரம் வெடிக்க தொடங்கியுள்ளதால், தொடர்ந்து பதற்றமான சூழலே நிலவுகிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk
from India News https://ift.tt/xizRkvY
0 Comments